‘பேத்தாய்’ சூறாவளியினால் கடல் சீற்றம்: அம்பாறையில் கடற்றொழில் பாதிப்பு

0 819
வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள ‘பேத்தாய்’ சூறாவளி காரணமாக அம்பாறை மாவட்டத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு வார காலமாக கடற்றொழில் நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

பொத்துவில் முதல் நீலாவணை வரையான கடற்பரப்பில் பலத்த காற்று வீசிவருகின்றது. இதனால் பாரிய அலைகள் எழுகின்றன. கடல் கொந்தளிப்பின் காரணமாக  சில பிரதேங்களில் கடல் அலை சுமார் 10 அடி வரை மேலுயர்ந்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
சூறாவளி காரணமாக கடற்றொழிலுக்குச் செல்ல வேண்டாமென வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்ததன் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் மீனவர்கள் கடற்றொழிலுக்குச் செல்லவில்லை.
இம்மாவட்டத்தின் கடல் அலையின் தாக்கத்தினால் கரையொதுங்கிய சில வள்ளங்கள் அலையில் அள்ளுண்டு பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளன.
கடந்த ஒரு வாரகாலமாக தமது வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். பொத்துவில், கோமாரி, திருக்கோவில், தம்பிலுவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை மற்றும் நீலாவணை ஆகிய பிரதேச மீனவர்கள் தமது படகுகளையும் வள்ளங்களையும் கடற்கரையிலிருந்து நீண்ட தூரத்திற்கப்பால் நிறுத்தி வைத்துள்ளனர்.
இம்மாவட்டத்தில் சில பிரதேசங்களில் அலையின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால் கரையோரப்பிரதேசத்தில் இருந்த தென்னை மரங்கள் சில அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ஒலுவில் துறைமுகத்தினை அண்டிய பகுதியில் ஏற்பட்டுள்ள கடலரிப்பின் காரணமாக அப்பிரதேசத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன.
ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் தமது தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்களின் இயந்திரப் படகுகள் தொழிலுக்குச் செல்ல முடியாமல் தரித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.