உள்ளூராட்சி மன்றங்களை கலைத்து வேட்புமனு கோருவதற்கு ஏற்பாடுகள்
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பதவியிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களைக் கலைத்து தேர்தலுக்கான வேட்பு மனுக்களைக் கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரும் வர்த்தமானி அறிவித்தல்கள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளாகக் கடமையாற்றும் மாவட்ட செயலாளர்களினால் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் இப்பணி முடிவறுத்தப்படும் எனவும் அவர் கூறினார். உரிய வர்த்தமானி அறிவித்தல்கள் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான செலவு 10 பில்லியன் ரூபாவாக அமையும் என தேர்தல்கள் ஆணைக்குழு மதிப்பீடு செய்துள்ளது. இத்தேர்தல் கடந்த காலங்களில் போன்று வார இறுதி நாட்களில் இடம்பெறாது வார நாட்களிலே நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தின்படி வேட்பு மனு தாக்கல் பூர்த்தியாகி 5 முதல் 7 வாரங்களுக்குள் தேர்தல் நடத்தப்படவேண்டும்.
நாட்டில் 341 உள்ளூராட்சி மன்றங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 24 மாநகர சபைகளாகும். 41 நகரசபைகளாகும். 276 பிரதேச சபைகளாகும். கடந்த வருடம் பெப்ரவரி மாதம் உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒரு வருட காலத்தால் பிற்போட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
341 உள்ளூராட்சி மன்றங்களில் பெந்தரஸ்பிடிய பிரதேச சபை தவிர்ந்த ஏனைய 340 உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒருவருட காலத்தால் பிற்போடப்பட்டுள்ளன. பெரந்தஸ்பிடிய பிரதேச சபையின் பதவிக்காலம் ஒரு வருடம் 4 மாதங்களின் பின்பே முடிவுறவுள்ளது.
தேர்தல் உரிய காலத்தில் நடாத்தப்படவேண்டுமென உயர்நீதிமன்றம் ஏற்கனவே 2017, 2018 களில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் தேர்தலை விரைவாக நடாத்துமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்துமாறு எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள இரண்டு ரிட் மனுக்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதே வேளை தற்போது அமுலிலுள்ள தேர்தல் முறைமையின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்படுவோர் எண்ணிக்கை 8700 ஆகும். இந்த உறுப்பினர் எண்ணிக்கையை அரைவாசியாக குறைக்கும் தீர்மானத்தை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார். இத்தீர்மானத்தை அமுலுக்கு கொண்டுவரும் வகையில் உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்படவுள்ளன. இதற்கென எல்லை நிர்ணய குழுவொன்றும் பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு தனது பணியினை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது. மாவட்ட ரீதியில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. எல்லை நிர்ணயக்குழு தனது அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்பு கையளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிய காலத்தில் நடாத்தப்படுமா? என்பது சந்தேகத்துக்கிடமாகவுள்ளது. அவ்வாறு உரிய காலத்தில் நடத்தப்படுமாயின் தற்போது அமுலிலுள்ள தேர்தல் முறைமை (கலப்பு)யின் கீழே நடாத்தப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
என்றாலும் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதிக்கு முன்பு கலைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே நாவலப்பிட்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.- Vidivelli