எம்.எப்.எம்.பஸீர்
மியன்மாரிலிருந்து இந்தோனேசியா நோக்கி, ரோஹிங்யா பிரஜைகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த படகொன்று, இயந்திரக் கோளறு காரணமாக அனர்த்தத்துக்குள்ளானது.
குறித்த படகு யாழ்.வெற்றிலைக்கேணி கடற்பரப்பிற்குள் கடந்த சனிக்கிழமை (17) அனுமதியின்றி பிரவேசித்துள்ளதுடன் அதிலிருந்த ரோஹிங்யா பிரஜைகள் அனைவரும் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 23 சிறுவர்கள், 4 இளம் யுவதிகள், 29 பெண்கள், 70 வயதுடைய வயோதிபர், 18 வயதுக்கும், 23 வயதுக்கும் இடைப்பட்ட 46 ஆண்கள் இவ்வாறு மீட்கப்பட்டனர். 70 வயதான முதியவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் அவர் தற்போது தமது ரோஹிங்யா பிரஜைகளினுடனேயே இருக்கின்றார்.
இதனைவிட படகை செலுத்திய இலங்கையர் ஒருவரும் கடற்படையினரால் இதன்போது தமது பொறுப்பில் எடுக்கப்பட்டு பின்னர் காங்கேசந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்களை காப்பாற்ற இலங்கை கடற்படையினர் 3 ரோந்துப் படகுகள், ஒரு தாக்குதல் படகு மற்றும் இரு டோரா படகுகளை பயன்படுத்தியதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
‘இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த உயிர்காக்கும் நடவடிக்கையை நாம் மெச்சுகின்றோம்.’ என இந்த நடவடிக்கை தொடர்பில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராலய ஆசிய பசுபிக் பணிப்பாளர் இந்ரிக்கா ரத்வத்த தெரிவித்துள்ளார். ‘ இது மனிதாபிமானம் குறித்த சிறந்த முன்னுதாரணமாகும்.. இதனை அனைத்து நாடுகளும் கடைப்பிடிக்க வேண்டும். ஆபத்தான கடல் பயணங்களின் போது கடலிலேயே உயிர்கள் காவு கொள்ளப்படுவதை தடுக்க வேண்டும்.’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சுமார் 200 பேருடன் மற்றொரு ரோஹிங்யா அகதிகள் கப்பலொன்றும் கடலில் விபத்துக்குள்ளாகி மூழ்கியதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராலயத்துக்கும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், ரோஹிங்யா செயற்பாட்டாளர்களும் அது குறித்து தகவல்களை வெளியிட்டிருந்தனர். வங்காள விரிகுடாவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில் இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாக ரோந்துப் பணிகளை முன்னெடுத்துள்ளபோதும் அவ்வாறு ஒரு படகு விபத்துக்குள்ளானமை தொடர்பில் நேற்று (21) மாலை இக்கட்டுரை எழுதப்படும் வரை எந்த சான்றுகளும் கண்டு பிடிக்கப்பட்டிருக்கவில்லை.
இந் நிலையில் இலங்கை கடற் பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான படகிலிருந்து மீட்கப்பட்ட மியன்மார் – ரோஹிங்யா பிரஜைகள் 103 பேரையும், மிரிஹானை தடுப்பு முகாமுக்கு மாற்றுமாறு மல்லாகம் நீதிவான் கடந்த 19 ஆம் திகதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இதன்போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட படகோட்டியாக செயற்பட்டதாக கூறப்படும் இலங்கையரை மட்டும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இந் நிலையில், குறித்த 103 ரோஹிங்யா அகதிகளையும் மிரிஹானைக்கு அழைத்துவரும் வரை அவர்கள் சிறைச்சாலைகள் அதிகாரிகளின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லை என கூறப்படுகின்றது.
பாதுகாப்பாக மீட்கப்பட்ட மியன்மார் பிரஜைகளுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக அவர்கள் அனைவரும் காங்கேசன்துறை முகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் தற்போது யாழ்., சிறை வளாகத்தில் பிரத்தியேக மண்டபம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இவர்களுக்கு துரித கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த முகாம் பகுதிக்கு மல்லாகம் நீதிவான் சென்று பார்வையிட்டார்.
இதன்போது, ரோஹிங்யா அகதிகளின் நலனுக்காக, சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீனின் ஆலோசனைக்கு அமைய சட்டத்தரணிகளான ரஜீந்ரன் ராமசந்ரன் மற்றும் அர்ச்சனா ஆகியோர் முன்னிலையாகினர்.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளும் இதன்போது அங்கு பிரசன்னமாகினர்.
இதன்போது ரோஹிங்யா பிரஜைகளுக்காக சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த மல்லாகம் நீதிவான், அவர்களை மிரிஹானை தடுப்பு முகாமுக்கு அனுப்பவும், அவர்கள் தொடர்பில் அரசாங்கமும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளும் இணைந்து பொருத்தமான நடவடிக்கையினை எடுக்கவும் ஆலோசனை வழங்கினார்.
குறித்த ரோஹிங்யா பிரஜைகளுக்கு பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் தேவையானவற்றை வழங்கி வருவதாக யாழ். சிறைச்சாலை வளாக தகவல்கள் தெரிவித்தன.
இந் நிலையில் குறித்த ரோஹிங்யா பிரஜைகள் மிரிஹானைக்கு மிக விரைவில் அழைத்து வரப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.
ஏற்கனவே இலங்கையில் ரோஹிங்யா அகதிகள் குழுவொன்று அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராலய தலையீட்டுடன் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை அகதி அந்தஸ்து கொடுத்து பொறுப்பேற்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன் வந்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. இந் நிலையில் அதற்கான சட்டத் தேவையை பூர்த்தி செய்ய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் அவர்களுடன் இணைந்த சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தலைமையிலான குழுவினர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த ரோஹிங்யா பிரஜைகள் கல்கிசை பகுதியில் தங்கியிருந்த போது பேரினவாதிகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளான போதும், மிரிஹானை தடுப்பு முகாமில் இருந்த ரோஹிங்யா சிறுமி ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த போதும், ரோஹிங்யா அகதிகள் ஆபத்தான கடல் பயணங்களின் போது கடற்படையினரால் மீட்கப்பட்ட சந்தர்ப்பங்களிலும் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தலைமையிலான குழுவினர் ஆஜராகி அவர்களுக்காக குரல் கொடுத்திருந்தனர்.
தாய் நாட்டின் இராணுவ, இனவாத அடக்குமுறைகளை சகித்துக்கொள்ள முடியாமல், சொந்த மண்ணை விட்டு வெளியேறும் ரோஹிங்யா முஸ்லிம்கள், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் பாரிய அவலங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தங்கள் விடிவுக்காக, ஆபத்தான கடற்பயணங்களை முன்னெடுத்து, உயிர்வாழ உகந்த பிரதேசங்களை தேடிக்கொண்டிருக்கின்றனர். பெண்கள், சிறுவர்கள், முதியோர் என்ற வேறு பாடின்றி இவ்வாறு தமது மண்ணை தொலைத்து நிம்மதி தேடி அலையும் ரோஹிங்யா முஸ்லிம்களின் அவலத்தை சர்வதேசமும் அவ்வளவு பெரிதாக அலட்டிக்கொள்வதாக தெரியவில்லை. இந் நிலையில், சொந்த மண்ணில் வாழ நாதியற்று அகதிகளாக தமக்கென பூமி தேடி அைலயும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்கவும், அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் உலக முஸ்லிம் சமூகம் முன் வரவேண்டும்.- Vidivelli