பெளத்த குரு பட்டதாரி மாணவர்கள் சிலர் ஸஹ்ரான் போன்று செயற்படுகிறார்கள் என்கிறார் மிகிந்தலை ரஜ மகா விகாராதிபதி வலவாஹென்குனவெவே தம்மரதன தேரர்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இன்று பல்கலைக்கழகங்களில் பயிலும் சில பெளத்த பிக்கு மாணவர்கள் ஸஹ்ரானைப் போன்றவர்கள். தலைமயிர் மற்றும் தாடி வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். லெனின் கொள்கைகளைப் பின்பற்றிக்கொண்டு இவர்கள் தலிபான்கள் போன்று செயற்படுகின்றார்கள். தலிபான்கள் செய்யும் வேலைகளையே செய்கிறார்கள் என மிகிந்தலை ரஜமகாவிகாரையின் அதிபதி வலவாஹென்குனவெவே தம்மரதன தேரர் தெரிவித்தார்.
மிகிந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த வறிய குடும்பங்களின் 100 பிள்ளைகளுக்கு இலவசமாக பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலே தம்மரதன தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ‘பல்கலைக்கழகங்களில் பயிலும் பெளத்த குரு மாணவர்களுக்கு 3 வருடங்களில் அல்லது நான்கு வருடங்களில் பல்கலைக்கழகங்களை விட்டும் வெளியேறும் வகையில் சட்டம் கொண்டு வரப்படவேண்டும். இன்று பாலி மற்றும் பெளத்த பல்கலைக்கழகங்கள் உட்பட பல்கலைக்கழகங்களில் பயிலும் சில பெளத்த குரு மாணவர்களின் செயற்பாடுகள் காரணமாக முழு பல்கலைக்கழக கட்டமைப்பும் பாதிக்கப்படுகிறது. மாணவர் சங்கங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் கட்சிகளுடன் இணைந்து அக்கட்சிகளுக்கு அடிபணிகிறார்கள். பின்பு கண்ணீர்புகை தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். பின்பு சிறைக்குச் செல்கிறார்கள். அவர்களால் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள முடியாமற் போகிறது. பொலிஸ் சான்றிதழ் பெற முடியாது போகிறது.
இதனால் இந்நிலைமை உருவாகாமலிருப்பதற்கு மாற்று வழிகாண வேண்டும். நாட்டில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் பல்கலைக்கழகங்கள் கொத்தலாவலை பல்கலைக்கழகம் மற்றும் வடகிழக்கிலிருக்கும் பல்கலைக்கழகங்களே.இப்பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் ஏனைய பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களைப்போலன்றி தங்களது காலத்தில் முறையாகக் கற்று நாட்டுக்குப் பயன்தருபவர்களாக வெளியேறுகிறார்கள்.
ஜனாதிபதி, பிரதமர்,அமைச்சரவை மற்றும் பாராளுமன்றம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை வளர்க்கவேண்டும். நாட்டில் சிங்களவர்,தமிழர்,முஸ்லிம்கள் என மூவினத்தவர்கள் இருக்கின்றனர். சிங்களவர்களுக்கு தமிழ் மொழி தெரியாது. தமிழர் மற்றும் முஸ்லிம்களுக்கு சிங்கள மொழி தெரியாது. மக்களுக்கு இந்த மொழி பிரச்சினை காரணமாகவே கலவரங்கள் உருவாகின்றன.இனக்கலவரம் உருவாகிறது.இந்நிலைமையை சீராக்க கல்வி அமைச்சர் முன்வர வேண்டும்.
எனவே க.பொ.த.சாதாரண தரம் வரை சிங்கள மாணவர்களுக்குத் தமிழ் மொழி போதிக்கப்படவேண்டும். இதே போன்று தமிழ் முஸ்லிம் மாணவர்களுக்கு சிங்கள மொழி போதிக்கப்பட வேண்டும் இதற்கென அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படவேண்டுமென நான் கோரிக்கை விடுக்கிறேன். அப்படியென்றால் 10 வருடங்களின் பின்பு இப்பிரச்சினை தீர்ந்துவிடும்.
அத்தோடு நாடெங்கும் போதைப் பொருள் வியாபித்துள்ளது. என்றாலும் போதைப்பொருளை நாட்டுக்குக் கொண்டு வருவோரைக் கைது செய்யாது மாணவர்களின் புத்தகப்பைகளை சோதனையிடுகிறார்கள்.
இதனால் இன்று மாணவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. அரசியல் வாதிகள் நாட்டைச்சீரழித்துவிட்டார்கள். பெற்றோர் அடுத்து வரும் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்கவேண்டும்.
இராணுவம், பொலிஸ், உளவுப் பிரிவு, சிவில் பாதுகாப்பு செயலணி என்று அனைத்துப் பிரிவுகளையும் இணைந்து போதைப்பொருளை மாணவர்களிடம் தேடுகிறார்கள். பொலிஸ் மோப்பநாய் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் போதைப்பொருள் கடல் மார்க்கமாக கொண்டு வரப்படுகிறது. இதனைத் தடைசெய்ய வேண்டும். போதைப்பொருள் கடத்தல்காரர்களை இனங்கண்டு கைது செய்ய வேண்டும்.அவ்வாறென்றாலே போதைப்பொருளை ஒழிக்க முடியும்.
தற்கொலை குண்டுதாரி ஸஹ்ரான் தாடி வளர்த்துக் கொண்டுதான் தாக்குதலை முன்னெடுத்தார். அதன் பின்பு அநேகமானோர் ஸஹ்ரான்போன்று மாறினார்கள். தலைமயிர், தாடி வளர்த்துக் கொண்டார்கள். எமது பல்கலைக்கழகங்களில் இருக்கும் பிக்கு பட்டதாரி மாணவர்களும் ஸஹ்ரான் போன்று மாற்றமடைய ஆரம்பித்தார்கள்.
இன்று பாலி மற்றும் பெளத்த பல்கலைக்கழகங்களில் பயிலும் பட்டதாரி பிக்கு மாணவர்கள் குறிப்பாக கலைப்பீட மாணவர்கள் தலிபான்கள் போன்று செயற்படுகிறார்கள். லெனினின் கொள்கைகளைப் பின்பற்றுகிறார்கள். புத்தபெருமானின் போதனைகளை அவர்கள் பின்பற்றுவதில்லை’ என்றார்.- Vidivelli