ஏ.ஆர்.ஏ.பரீல்
தசாப்த காலமாக இழுபறிநிலையில் இருந்து வந்த முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் விரைவில் நிறைவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கொள்கை வேறுபாடுகளை புறந்தள்ளி முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் ஏகமனதாக ஒன்றுபட்டுள்ளனர்.
கடந்த 8 ஆம் திகதி வியாழக்கிழமை நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் அரசியல் சீர்திருத்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்து இத்திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலில் முன்னாள் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால், முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தலைமையில் 9 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இக்குழுவின் தலைவர் உட்பட 5 பேர் இக்கலந்துரையாடலில் பங்கு கொண்டிருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள்
குழுவின் சிபாரிசுகளுக்கு அங்கீகாரம்
முஸ்லிம் சமூகத்தில் பலதார மணம் தொடர்பில் முஸ்லிம் அமைப்புகள் சில தொடர்ந்து எதிர்ப்பு வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் 2021.03.08 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் பலதார மணத்தை தடை செய்வதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. அத்தோடு முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லையை 18 ஆக அதிகரிப்பதற்கு அங்கீகாரமளித்து பெண்கள் காதிநீதிபதிகளாக நியமிக்கப்படவேண்டும் எனவும் அமைச்சரவை தீர்மானித்தது.
சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தலைமையிலான ஆலோசனைக்குழு பலதாரமணம் சில நிபந்தனைகளுடன் அ-னுமதிக்கப்படவேண்டும் என்ற சிபாரிசினை முன்வைத்துள்ளது. வை.எம்.எம்.ஏ. மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை உட்பட முஸ்லிம் அமைப்புகள் முன்வைத்த ஆலோசனைகள் ஆலோசனைக் குழுவினால் கவனத்திற்கொள்ளப்பட்டன. இத்திருத்தங்களுக்கு கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சருடனான கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஏகமனதான விருப்பத்தினைத் தெரிவித்தனர்.
அத்தோடு குறிப்பிட்ட அமைச்சரவைக்கூட்டத்தில் காதிநீதிமன்ற முறைமை முற்றாக ஒழிக்கப்படவேண்டும் என்றும் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. எனினும் இவ்விடயத்தில் காதிநீதிமன்ற முறைமை ஒழிக்கப்படக்கூடாது. காதிநீதிமன்ற கட்டமைப்பிலுள்ள குறைபாடுகள் களையப்படவேண்டும், காதிநீதிபதிகளின் தகைமை அதிகரிக்கப்படவேண்டும், பயிற்சிகள் வழங்கப்படவேண்டும், உரிய ஊதியம் வழங்கப்பட வேண்டும் என ஆலோசனைக்குழு சிபாரிசினை முன்வைத்திருந்தது.
காதிநீதிபதிகளுக்கு மேலதிக மஜிஸ்திரேட்டின் அதிகாரம் வழங்கப்படவேண்டும். இதன்மூலம் பிள்ளை தாபரிப்பு,மனைவி தாபரிப்பு போன்ற தபாரிப்புகள் பிரதிவாதிகளால் செலுத்தப்படாவிட்டால் மஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கு காதிநீதிபதிகள் வலியுறுத்தக் கட்டளையை (Enforcement Order) அனுப்பி வைக்காது அவர்களாகவே இந்த தாபரிப்பினை சம்பந்தப்பட்டவர்களுக்குக் பெற்றுக்கொடுக்க முடியும். இந்த சிபாரிசுக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள். அத்தோடு மணப்பெண்ணின் கையொப்பம் திருமணப்பதிவின்போது கட்டாயமாகப் பெற்றுக்கொள்ளப்படவேண்டும். மேலும் ‘வொலி’யின் பிரசன்னம் திருமண பதிவின்போது மணப்பெண்ணின் விருப்பத்தின் பேரில் அமையலாம் என்னும் சிபாரிசும் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
காதி நீதிமன்றங்கள் ஒழிக்கப்பட
வேண்டும் என்றால் மாற்று வழி
காதிநீதிமன்றங்கள் இலங்கையில் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்று 2021.03.08 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில் காதி நீதிமன்ற முறைமையை இல்லாமற் செய்யாது பலப்படுத்த வேண்டும். மீண்டும் இதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என சப்ரி ஹலீம்தீன் தலைமையிலான ஆலோசனைக்குழு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்தோடு அவ்வாறு காதிநீதிமன்ற முறைமை முற்றாக ஒழிக்கப்பட்டால் அதற்கான மாற்றுவழி எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும் ஆலோசனைக்குழு சிபாரிசுகளை முன்வைத்துள்ளது.
காதி நீதிமன்றங்கள் ஒழிக்கப்பட்டால் முஸ்லிம் விவாக விவாகரத்து விடயங்கள் பொது விவாக சட்டத்தின் கீழ் ஆளப்பட வேண்டிய நிலைமை ஏற்படலாம். அவ்வாறான நிலைமை உருவானால் முஸ்லிம்கள் மாவட்ட நீதிமன்றங்களை நாடவேண்டி ஏற்படும். இந்நிலைமையைத் தவிர்ப்பதற்காகவே காதி நீதிபதிகளுக்குப் பதிலாக காதிநீதிபதி என்ற பெயரைத் தவிர்த்து முஸ்லிம் கொன்சிலியேட்டர் (Muslim Conciliator) என்ற பெயரில் நியமனங்களை வழங்கவேண்டும். குடும்ப சமரசத்துக்கென ஆலோசனைச் சபையொன்று நியமிக்கப்பட வேண்டும். இங்கு தீர்க்கப்பட முடியாத குடும்பப் பிரச்சினைகள் மாத்திரமே மாவட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். இந்த Conciliator பதவியில் இருப்பவர்களுக்கு காதிநீதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் 75% த்தைக் கொடுத்துள்ளோம்.’ என அக்குழுவின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.
காதி நீதிமன்றங்கள் பறிபோகும் சூழ்நிலையில் அமைச்சரவை தனது தீர்மானத்தில் உறுதியாக இருந்தால் மாத்திரமே இவ்வாறான கொன்சிலியேட்டர்களை நியமிப்பதற்கு ஆலோசனைக் குழு சிபாரிசு செய்துள்ளது.
நாட்டில் ‘அரகலய’ போராட்டத்தின் பின்பே இன்று இவ்வாறான சுமுக நிலையொன்று ஏற்பட்டுள்ளது. கோத்தாபய ராஜபக்ஷ அதிகாரத்தில் இருந்த ஆட்சி தொடர்ந்திருந்தால் இன்று நிச்சயம் காதி நீதிமன்ற முறைமை இல்லாமற் செய்யப்பட்டிருக்கும்.
பாராளுமன்ற உறுப்பினர்
ரவூப் ஹக்கீம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அமைச்சருடனான கலந்துரையாடலின்போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டினை விளக்கினார்.
அவர் அங்கு விளக்கமளிக்கையில் “காதிநீதிமன்ற முறைமையில் பெரும் குறைபாடுகள் உள்ளன. ஆலோசனைக்குழுவும் தனது அறிக்கையில் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளது. காதிநீதிமன்ற முறைமையின் கீழ் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக பெண்கள் முறையிடுகிறார்கள். காதி நீதிமன்றங்களின் தரம், காதி நீதிபதிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் காதிநீதிமன்ற கட்டமைப்பைத் தரமுயர்த்தலாம். எனவே காதிநீதிமன்றங்கள் ஒழிக்கப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டிலே நாங்கள் இருக்கிறோம்.
மேலும் இக்கட்டமைப்பில் பிரச்சினைகள் இருந்தால் நாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.
நீதிஅமைச்சர் அடுத்தகட்ட பேச்சு வார்த்தையில் இறுதித் தீர்மானத்துக்கு வந்து, சிபாரிசுகளை சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பி வரைபு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சட்ட திருத்தங்கள் கடந்து வந்த பாதை
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. குழுக்கள் நியமிக்கபட்டு சிபாரிசுகளும் முன்வைக்கப்பட்டன. இவ்வாறான முன்னெடுப்புகளில் 2009இல் அக்காலத்தில் நீதியமைச்சராக இருந்த மிலிந்த மொரகொடவினால் நியமிக்கப்பட்ட குழு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதியரசர் சலீம் மர்சூப் நியமிக்கப்பட்டிருந்தார். குழுவில் உலமாக்கள், நீதிபதிகள், சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் அங்கம் பெற்றிருந்தனர். 18 உறுப்பினர்களைக் கொண்ட இக்குழு 2009இல் தனது பணிகளை ஆரம்பித்து 2018 ஜனவரியில் தனது அறிக்கையை அப்போதைய நீதியமைச்சர் தலதா அத்துகோளவிடம் கையளித்தது.
இக்குழுவின் தலைவர் சலீம் மர்சூப்பினால் குழு அங்கத்தவர்களை ஒரே கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியாமற்போனது. குழு இரண்டாகப் பிளவுபட்டது. குழுவிற்குள் சில திருத்தங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டன. அறிக்கை தயாரிக்கப்பட்டு அங்கத்தவர்கள் கையொப்பம் அறிக்கையில் பெற்றுக்கொள்ளப்பட இருந்த நிலையில் அங்கத்தவர்களில் 9 பேர் வேறாக ஒரு அறிக்கை தயாரித்து தலைவரிடம் கையளித்தனர்.
இக்குழு ஒருமித்து திருத்தங்களைச் சிபாரிசு செய்திருந்தால் 2018ஆம் ஆண்டிலே திருத்தங்களை நிறைவேற்றியிருக்க முடியும். அவர்களிடையே நிலவிய முரண்பாடு காரணமாகவே முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்திருத்தங்கள் இழுபறியில் இருக்கின்றன.
அன்றைய நீதியமைச்சர் தலதா அத்துகோரளவிடம் இரு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதால் அவர் எந்த அறிக்கையை ஏற்றுக்கொள்வது எனத் திண்டாடினார். இந்நிலையில் அறிக்கைகளை ஆராய்ந்து தீர்மானம் ஒன்றினை எய்துவதற்கு அமைச்சரவை உப குழுவொன்றினை நியமித்தார். இக்குழுவில் அப்போதைய அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், எம்.எச்.ஏ.ஹலீம், கபீர் ஹாசிம், பைசர் முஸ்தபா, சந்திராணி பண்டார, சுதர்சனி பெர்ணான்டோ புள்ளே ஆகியோர் அங்கம் வகித்தனர். இக்குழுவினாலும் தீர்மானமொன்றினை எட்டமுடியாமற் போனது.
இந்நிலையிலே ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. புதிய அரசாங்கத்தில் நீதியமைச்சராக அலிசப்ரி நியமனம் பெற்றார். இதனையடுத்தே அமைச்சர் அலிசப்ரி சட்டத் திருத்தங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவொன்றினை நியமித்தார்.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின்
அறிக்கை கிடைக்கும் வரை ஒத்திவைப்பு
அப்போதை நீதியமைச்சராக பதவி வகித்த சட்டத்தரணி அலிசப்ரி கடந்த பெப்ரவரி மாதம் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்வதற்காக அமைச்சரவைப் பத்திரமொன்றினை சமர்ப்பித்திருந்தமையை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். குறிப்பிட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அன்று இனவாத அமைச்சர்கள் சிலர் பலத்த எதிர்ப்பினை வெளியிட்டார்கள். இதனையடுத்து அவ் அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டது. அத்தோடு அன்று அமைச்சரவை கூட்டத்துக்கு தலைமை வகித்த அப்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் சிபாரிசுகள் கிடைக்கும் வரை முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதில்லை என அறிவித்தார்.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் அறிக்கை
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் அறிக்கை அதன் தலைவர் ஞானசார தேரரினால் கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. அறிக்கையில் 43 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
குறிப்பிட்ட அறிக்கையில் முஸ்லிம் தனியார் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்ற சிபாரிசும் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு அரச சேவையிலுள்ள முஸ்லிம் பெண்களுக்கு ‘இத்தா’ கால விடுமுறை ரத்துச் செய்யப்பட வேண்டும் என்றும் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது.
‘அரகலய’ போராட்டத்தினையடுத்தே முன்னாள் ஜனாதிபதி பதவி துறந்தார். நாட்டை விட்டும் வெளியேறிச் சென்றார். இவ்வாறான ஒரு அரசியல் மாற்றம் நிகழாமலிருந்தால் காதிநீதிமன்றக் கட்டமைப்பு எத்தனை எதிர்ப்புகள் மேலெழுந்தாலும் அகற்றப்பட்டிருக்கும். முஸ்லிம் சமூகம் பொதுச்சட்டத்தின் கீழே ஆளப்படுவதற்கு வழி சமைந்திருக்கும். முஸ்லிம்கள் நாம் நூற்றாண்டு காலமாக அனுபவித்து வந்த உரிமைகளை இழந்திருப்போம். எமது குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள நாம் மாவட்ட நீதிமன்றப் படிகளை ஏறியிறங்க நேர்ந்திருக்கும்.
அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றபின் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ அறிக்கையை அமுல்படுத்தப் போவதில்லை என்று தெரிவித்தார். அதன்பின்பே முஸ்லிம் சமூகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டதெனக் கூறலாம்.
காதிநீதி மன்றக் கட்டமைப்பை
காப்பாற்றித் தாருங்கள்
ஏற்கனவே அமைச்சரவை காதிநீதிமன்றக் கட்டமைப்பை இல்லாமற் செய்வதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் நீதியமைச்சரை அண்மையில் சந்தித்த ஆலோசனைக் குழுவின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன், ‘அமைச்சரவையில் கலந்துரையாடி முஸ்லிம் சமூகத்தின் நூற்றாண்டு கால வரலாறு கொண்ட காதிநீதிமன்ற கட்டமைப்பை காப்பாற்றித் தாருங்கள்’ எனக் கோரியுள்ளார்.
காதிநீதிமன்றங்களுக்கு எதிராக பெண்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். அதனை மறுப்பதற்கில்லை. ஒரு சில காதிநீதிவான்களின் தவறான செயல்களால் இக்கட்டமைப்பையே இல்லாமற் செய்ய வேண்டும் என போராடுவது ஆரோக்கியமானதல்ல.
காதிநீதிமன்ற கட்டமைப்பு பலப்படுத்த வேண்டும். காதிநீதிபதிகள் ஒரு சில ஆயிரம் ரூபா கொடுப்பனவுகளுக்கே பணி புரிகிறார்கள். அவர்களுக்கு வழக்கு விசாரணைகளை மேற்கொள்வதற்கு எவ்வித கட்டிட வசதிகளும் வழங்கப்பட வில்லை. ஒரு சிலரே நீதிவான் நீதிமன்ற கட்டமைப்புக்குள் விசாரணைகளைத் தொடர்கின்றனர். ஏனையோர் பாடசாலைகளிலும், பள்ளிவாசல்களிலும், வீடுகளிலும் நீதிமன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.
மொத்தத்தில் காதிநீதிமன்ற கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட வேண்டும். தகுதியானவர்கள் காதிகளாக நியமிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய வேதனம் வழங்கப்பட வேண்டும். இதுவே ஆலோசனைக் குழுவின் சிபாரிசுகளாகும். தியமைச்சர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.– Vidivelli