தம்புள்ளை புனித பூமி திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை
ஏ 9 பிரதான வீதியை அபிவிருத்தி செய்யவே தீர்மானம்
(பீ.எம்.அன்வர்)
தம்புள்ள பள்ளிவாசலை அகற்றும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட புனித பூமி திட்டத்தின் ஆரம்பக் கட்டமான மாற்றுப் பாதை அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவித் திட்டத்தின்கீழ் கண்டி- யாழ்ப்பாணம் ஏ-9 வீதியின் நாவுல தம்புள்ள நகர வீதி அபிவிருத்தித் திட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சில தரப்பினரால் புனித பூமிப் பிரதேசம் என குறிப்பிட்டு புதிய மாற்றுப்பாதை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், பிரதான பாதையின் அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளதாக குறித்த வீதி அபிவிருத்தி திட்டத்தின் பிரதம பொறியியலாளர் சஞ்சீவ பர்ணான்டோ தெரிவித்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தீர்மானங்களுக்கு அமைய தம்புள்ள நகரிலிருந்து ஏ-9 வீதியூடாக நாவுல- போபெல்ல நகரம் வரையிலான வீதியை அபிவிருத்தி செய்வதற்கு மாத்திரம் தமக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தோடு, குறித்த புனித பூமி தொடர்பில் முயற்சி மேற்கொள்ளும் அமைப்பினர் குறிப்பிடும் தம்புள்ள விகாரை சந்தியிலிருந்து தம்புள்ள நிஸங்க மாவத்தை வரையிலான மாற்றுப் பாதைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் தமக்கு எவ்வித ஆலோசனைகளும் வழங்கப்படவில்லை எனவும் சஞ்சீவ பர்னான்டோ மேலும் குறிப்பிட்டார்.
தம்புள்ள விகாரைக்கு எதிர்ப்புறமாக சுமார் 80 மீற்றர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள வாகன தரிப்பிடப் பாதையை தம்புள்ள பிரதான வீதியின் நிஸங்க மாவத்தையுடன் இணைப்பதன் மூலம் ஜும்ஆப் பள்ளியை அங்கிருந்து அகற்றுவதை இலக்காகக் கொண்டே இந்த புனித பூமி திட்டங்கள் நகர்த்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதேவேளை இத்தகைய கெடுபிடிகளுக்கு மத்தியில் தம்புள்ள ஜும்ஆ பள்ளியை தற்போதுள்ள இடத்திலிருந்து அகற்றுவதற்கு முன்னர் புதிய பள்ளிவாயிலொன்றை நிர்மாணிப்பதற்கான காணியொன்று நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஒதுக்கப்பட்டது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பின்புறத்தில் ஒதுக்கப்பட்ட அக்காணியை துப்புரவு செய்யும் பணிகளை நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்கள் முன்னெடுத்தனர். எனினும், வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் ஏற்கனவே உள்ள ஏ 9 வீதியை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் புனித பூமி திட்டத்திற்கமைய தம்புள்ளை பள்ளிவாசலை அகற்றும் திட்டம் பின்னகர்த்தப்பட்டுள்ளது. – Vidivelli