(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டில் காதிநீதிமன்ற முறைமை இல்லாமற் செய்யப்படக்கூடாது, பதிலாக காதிநீதிமன்றக் கட்டமைப்பு பலப்படுத்தப்படவேண்டும், காதிநீதிமன்றங்கள் தரமுயர்த்தப்படவேண்டும், தகுதியானவர்கள் காதிநீதிபதிகளாக நியமிக்கப்படவேண்டும் எனும் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கு சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீனின் தலைமையில் நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழுவின் சிபாரிசுகளுக்கு கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஏகமனதாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் சட்டத்தரணி சப்ரிஹலிம்தீன் தலைமையிலான ஆணைக்குழு சமர்ப்பித்த சிபாரிசுகள் அடங்கிய அறிக்கை தொடர்பில் அமைச்சர் முஸ்லிம் பாராளு-மன்ற அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கடந்த வியாழக்கிழமை 8 ஆம் திகதி கலந்துரையாடியிருந்தார். அக்கலந்துரையாடலின்போதும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சப்ரி ஹலிம்தீன் தலைமையிலான ஆலோசனைக்குழுவின் சிபாரிசுகளுக்கு ஏகமனதாக ஆதரவு வழங்கியிருந்தார்கள். ஆலோசனைக்குழுவின் அறிக்கையிலும் காதிநீதிமன்ற கட்டமைப்பு இல்லாமற் செய்யப்படக்கூடாது பாதுகாக்கப்படவேண்டும் என்றே தெரிவிக்கப்பட்டிருந்தது.
வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தொடர்ந்தும் விடிவெள்ளிக்கு இது தொடர்பில் விளக்கமளிக்கையில் ‘பலதார மணம் நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பெண்களை காதிநீதிபதிகளாக நியமிப்பதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு மணப்பெண்ணின் கையொப்பம் திருமணப்பதிவில் கட்டாயமாகப் பெற்றுக்கொள்ளப்படவேண்டும். மேலும் ‘வொலி’யின் பிரசன்னம் திருமணப்பதிவின்போது மணப்பெண்ணின் விருப்பத்தின் பேரில் அமையலாம் என்பதும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பெண்களின் திருமண வயதினை 18 ஆக அதிகரிப்பதற்கும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
காதிநீதிபதிகளின் தகைமை அதிகரிக்கப்படவேண்டும் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். உரிய ஊதியம் வழங்கப்படவேண்டும் என்பதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இத்திருத்த சிபாரிசுகள் வரைபுக்காக சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு அனுமதிக்கப்படும் எனவும் அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.- Vidivelli