மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லாஹ் யாமீன், அவர் பதவியில் இருக்கும்போது முறைகேடான வகையில் நிதிக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பாக முதல் தடவையாக மாலைதீவுப் பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
கடந்த சனிக்கிழமை தலைநகர் மாலேயில் அவரது ஆதரவாளர்களும் எதிராளர்களும் எதிரும் புதிருமான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது.
சர்ச்சைக்குரிய வாக்களிப்புக்கு முன்னதாக அவரது தனிப்பட்ட கணக்கில் வைப்பிலிடப்பட்ட 22 மில்லியன் ரூபியா (1.5 மில்லியன் அமெரிக்க டொலர்) ரொக்கப் பணம் தொடர்பில் தன்னிடம் விசாரிக்கப்பட்டதாக கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்த யாமீன் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்.
இது அரசியல் நோக்கம் கொண்டது என 59 வயதான அவர் தனது கட்சித் தலைமையகத்திற்கு வெளியே வைத்து தெரிவித்தார். அவை சாதாரண கொடுக்கல் வாங்கல்களாகும். நான் போதைப்பொருள் கடத்தவுமில்லை, நிதி மோசடி செய்யவுமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.