தனியார் சட்ட திருத்தத்தை சாத்தியமாக்குவோம்

0 400

இலங்­கையில் முஸ்லிம் தனியார் சட்­டத்தை திருத்­து­வ­தற்­கான முயற்­சிகள் கடந்த பல தசாப்­தங்­க­ளாக முன்­னெ­டுக்­கப்­பட்ட போதிலும் அவை இது­வரை வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. 1951 ஆம் ஆண்டின் பின்னர் இச் சட்­டத்தில் எந்­த­வித திருத்­தங்­களும் மேற்­கொள்­ளப்­ப­டா­ததன் கார­ண­மாக, சம­கா­லத்தில் முஸ்லிம் சமூகம் பல்­வேறு சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்டி ஏற்­பட்­டுள்­ளது.

இச் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­ள­வென 2009 இல் அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொ­ட­வினால், ஓய்­வு­பெற்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. இக் குழு சுமார் 9 வருட கால இழு­ப­றியின் பின்னர் தனது அறிக்­கையை கைய­ளித்­தது. எனினும் இக் குழுவின் அங்­கத்­த­வர்கள் இரு வேறாகப் பிரிந்து மற்­றொரு அறிக்­கை­யையும் சமர்ப்­பித்­ததால் சலீம் மர்சூப் தலை­மை­யி­லான குழுவின் அறிக்­கையை அமுல்­ப­டுத்­து­வதில் இழு­பறி தோன்­றி­யது. 2009 இன் பின்னர் நீதி­ய­மைச்­சர்­க­ளாக பதவி வகித்த பலரும் இச் சட்­டத்தை திருத்­து­வ­தற்­கான தமது ஆர்­வத்தை வெளிப்­ப­டுத்­திய போதிலும் இதனை நடை­மு­றைப்­ப­டுத்தும் துணிவைப் பெற்­றி­ருக்­க­வில்லை.

இந் நிலை­யில்தான் 2019 இல் “ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கோஷத்­துடன் ஆட்­சிக்கு வந்த பொது ஜன பெர­முன தலை­மை­யி­லான அர­சாங்கம் முஸ்லிம் தனியார் சட்­டத்தை இல்­லா­தொ­ழிப்­ப­தையும் தனது இலக்­கு­களில் ஒன்­றாகக் கொண்­டி­ருந்­தது.
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலைத் தொடர்ந்து முஸ்­லிம்கள் தொடர்­பாக முன்­னெ­டுக்­கப்­பட்ட தவ­றான பிர­சா­ரங்­களும் இதற்கு வலுச்­சேர்த்­தன. இந் நிலை­யில்தான் முஸ்லிம் தனியார் சட்­டத்தை முற்­றாக நீக்க வேண்டும் என்ற பிர­சா­ரங்கள் மேற்­கி­ளம்­பின. இன­வாத ஊட­கங்கள் காதி நீதி­மன்­றங்­களால் பாதிக்­கப்­பட்ட பெண்கள் என்ற போர்­வையில் பலரைக் கொண்­டு­வந்து முஸ்லிம் தனியார் சட்­டத்­திற்கு எதி­ரான தப்­ப­பிப்­பி­ரா­யங்­களை கட்­டி­யெ­ழுப்­பின.

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால், ஞானசார தேரரை தலைவராக கொண்டு தோற்றுவிக்கப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் நோக்கமும், முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிப்பதாகவே இருந்தமை வெளிப்படையானது. இருப்பினும் கோத்தபாய ஆட்சியில் இருக்கும் போதும் முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்தவோ ஒழிக்கவோ சாத்தியப்படவில்லை.

இந் நிலையில் இறுதியாக இடம்பெற்ற அமைச்சரவையிலும் சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவை அமர்வு ஒன்றிலும் மீண்டும் இத்திருத்த விவகாரம் ஆராயப்பட்டுள்ளது. இதன்போது காதி நீதிமன்றக் கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வரும் வகையிலான யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன. முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரியினால் நியமிக்கப்பட்ட குழு திருத்தங்கள் தொடர்பாக சமர்ப்பித்துள்ள அறிக்கையை மையப்படுத்தியே அமைச்சரவையில் ஆராயப்பட்டுள்ளது. எனினும் அதில் எவ்வாறான பரிந்துரைகள் உள்ளன என்பது இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தின் போது காதிநீதிமன்றக் கட்டமைப்பை இல்லாதொழிப்பது தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

குறிப்பாக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அகமட் காதி நீதிமன்ற கட்டமைப்பை முற்றாக நீக்கும் யோசனைக்கு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந் நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச கடந்த வாரம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தார். இதன்போதும் எம்.பி.க்கள் காதி நீதிமன்றக் கட்டமைப்பை முற்றாக இல்லாதொழிக்காது அதிலுள்ள குறைபாடுகளை களைவது குறித்து கவனம் செலுத்துமாறு கோரியுள்ளனர்.

காதி நீதி­மன்ற முறை­மை­யிலும் காதி நீதி­ப­தி­க­ளிலும் பல்­வேறு குறை­பா­டுகள் உள்­ளன என்­பதை அனை­வரும் ஏற்றுக் கொள்­கின்­றனர். எனினும் இக் குறை­பா­டு­களை நிவர்த்­தித்து இந்த முறை­மையை மேலும் வலுப்­ப­டுத்­து­வதே இதற்குத் தீர்­வாகும். மாறாக இதனை இல்­லா­தொ­ழிப்­ப­தல்ல என்­பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். காதி நீதிமன்றக் கட்டமைப்பை ஒழித்துவிட்டு மாவட்ட நீதிமன்றங்களிடம் வழக்குகளை ஒப்படைப்பது எந்தவிதத்திலும் தீர்வாக மாறப் போவதில்லை. இது மேலும் இழுத்தடிப்புகளுக்கும் குடும்ப சீரழிவுகளுக்குமே வழிவகுக்கும்.

எனவேதான் இருக்கின்ற காதி நீதிமன்ற கட்டமைப்பின் அதிகாரத்தையும் வளங்களையும் மேம்படுத்துவதன் ஊடாக அதனை வலுப்படுத்தவே நாம் முயற்சிக்க வேண்டும். இதனை நோக்கியே சகல தரப்பினரும் செயற்பட வேண்டும்.
வருடக் கணக்கில் இந்த விவகாரத்தை இழுத்தடித்து அரசியல் செய்யாது விரைவில் ஒரு தீர்மானத்திற்கு வருமாறு முஸ்லிம் அரசியல், சிவில் மற்றும் மார்க்க தலைமைகளிடம் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறோம்.- –Vidivelli

Leave A Reply

Your email address will not be published.