கூரகலையிலிருந்து
றிப்தி அலி
“கூரகல மலைப் பிரதேசம் புனரமைப்பு செய்யப்பட்டமையினால் இன்று நான் தொழிலினை இழந்து நிர்க்கதியாகியுள்ளேன்” என்கிறார் இரண்டு பிள்ளைகளின் தந்தையான முஹம்மது தம்பி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலுக்கு அருகில் என்னால் நடத்தப்பட்டு வந்த கடை, சிலர் நபர்களினால் திட்டமிடப்பட்டு மூடவைக்கப்பட்டுள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாது இன்று நான் நடுத் தெருவில் நிற்கின்றேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
“முஸ்லிம்களுக்கு நன்மை செய்வதற்காகவே கூரகல மலைத் தொடர் புனர்நிர்மாணம் செய்யப்படுவதாக குறிப்பிட்டனர். ஆனால், புனர்நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த பின்னர் இங்குள்ள முஸ்லிம்கள் பல கஷ்டங்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக இங்குள்ள முஸ்லிம்களின் கடைகளில் பொருட் கொள்வனவில் ஈடுபட வேண்டாம் என வெளியூர்களில் இருந்து வருகின்ற சிங்களவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்” என முஹம்மது தம்பி கூறினார்.
இப்பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களை வெளியேற்றுவதே கூரகல புனித பூமிக்கு பொறுப்பான தேரரின் இலக்காகும் எனக் குற்றஞ்சாட்டிய அவர், பரம்பரை பரம்பரையாக இங்கு வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களை இறைவன் தான் பாதுகாக்க வேண்டும் என்றார்.
தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலை அண்டிய பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான ஒன்பது கடைகள் காணப்படுகின்றன. இந்தக் கடைகளில் பல கடைகள் இன்று மூடப்பட்டுள்ளன. இவ்வாறு மூடப்பட்டுள்ள கடைகளில் ஒன்றினை நடத்தியவரின் உள்ளக் குமுறலே இதுவாகும்.
கொழும்பிலிருந்து சுமார் 143 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள பலாங்கொடை நகரிலிருந்து சுமார் 45 நிமிட பஸ் பயணத்தில் சென்றடையக் கூடிய தென்ன எனும் கிராமத்திலேயே தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலும், கூரகல மலைத் தொடரும் காணப்படுகின்றது.
இங்கு சுமார் 130 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 600 முஸ்லிம்கள் பரம்பரை பரம்பரையாக சிங்கள மக்களுடன் இணைந்து பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். கூலித் தொழில், விவசாயம் போன்றனவே இங்குள்ள முஸ்லிம்களின் பிரதான தொழிலாகும்.
இக்கிராமத்திலுள்ள சிறுவர்கள், தஞ்சந்தென்ன மகா வித்தியாலயத்தில் சிங்கள மொழி மூலம் சாதாரண தரம் வரை கல்வி கற்று விட்டு உயர் தரத்திற்காக பலாங்கொடை நகருக்கு செல்வது வழமையாகும்.
ஈராக்கினைச் சேர்ந்த சன்மார்க்கப் போதகரும், அறிஞருமான குதுப் முஹியத்தீன் அப்துல் காதர் ஜீலானி அவர்கள் பாவா ஆதம் மலையை தரிசிப்பதற்காக கி.பி 1132 இல் இலங்கை வந்த போது இக்கிராமத்திலுள்ள மலையில் நீண்ட காலம் தியானத்தில் இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.
இதன் பின்னர் இம்மலைப் பிரதேசத்தினை பாரம்பரிய வணக்கஸ்தலமாக முஸ்லிம்கள் மாற்றிக் கொண்டு தொடர்ச்சியாக இங்கு வர ஆரம்பித்தனர். முஹியத்தீன் அப்துல் காதர் ஜீலானியின் ஞாபகார்த்தமாக தப்தர் ஜெய்லானி என இப்பிரதேசத்திற்கு பெயர் சூட்டப்பட்டது.
பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களினால் இங்கு சமய வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மூன்று நல்லடியார்களின் ஜனாஸாக்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இந்த தப்தர் ஜெய்லானி பற்றி இரத்தினபுரி கச்சேரியில் கடமையாற்றிய பல அரச அதிபர்கள், தத்தமது டயரிகளில் குறிப்புக்களை எழுதி உள்ளதாக வரலாறுகள் கூறுகின்றன.
சுமார் 56 ஏக்கர் நிலப்பரப்பினைக் கொண்ட இப்பிரதேசத்தினை காலஞ்சென்ற அமைச்சர் எம்.எல்.எம். அபூசாலியின் குடும்பத்தினரின் பங்களிப்புடன் தென்ன முஸ்லிம்கள் பராமரித்து வந்தனர்.
இவ்வாறான நிலையில் 1922ஆம் ஆண்டு சீ.எல்.எம் மரைக்காரினால் இங்கு பள்ளிவாசலொன்று நிர்மாணிக்கப்பட்டது. கப்பல் வடிவிலான மலையினை சார்ந்ததாக இப்பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையினால் கூரை தேவைப்படவில்லை. காரணம் அங்கிருந்த பாரிய கற்பாறை தேவையான நிழலையும் மழையில் இருந்து பாதுகாப்பையும் வழங்கக் கூடியதாக அமைந்திருந்தது.
இவ்வாறான நிலையில், 1960களில் கூரகல, பௌத்த துறவிகளும் தியானத்தில் ஈடுபட்ட ஒரு இடம் என்று பௌத்தர்கள் சிலர் உரிமை கோரத் தொடங்கியதாக அபுசாலி எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தொல்பொருள் திணைக்களம் தப்தர் ஜெய்லானியில் ஒரு புதிய பௌத்த கோபுரத்தை கட்டத் தொடங்கியது. 1971இல் இந்த பௌத்த கோபுரம் இரண்டடி உயரத்துக்கு கட்டப்பட்டது.
அதன்பின், இது 2,000 ஆண்டுகள் பழமையானது என பௌத்தர்கள் உரிமை கோர ஆரம்பித்தனர். இந்த விடயத்தில் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் நீண்ட காலமாக பாரிய இழுபறி காணப்பட்டது.
இந்த நிலையில் இப்பிரதேசம் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதுடன் புண்ணிய பூமியாகவும் பிரகனடப்படுத்தப்பட்டது. இதனையடுத்து இப்பிரதேசத்தினை சிங்களமயமாக்குவதற்கான நடவடிக்கைகள் கொண்டு வரப்பட்டாலும் அது கைகூடவில்லை.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2013ஆம் ஆண்டில் பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த போது இப்பிரதேசத்திற்கு விஜயம் செய்து புனரமைப்பதற்கான நடவடிக்கையினை ஆரம்பித்தார்.
இதன்போது, தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலிற்கு அருகிலிருந்த பல நூற்றாண்டுகள் பழமையான இரு சியாரங்கள் மற்றும் தங்குமிடம் போன்ற பல கட்டிடங்கள் இல்லாமலாக்கப்பட்டுள்ளன. அச்சமயத்தில் அங்கிருந்த விகாராதிபதியினால் சிங்களமயமாக்கல் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அது அவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
இதனால் கண்டி, முருத்தலாவ பிரதேசத்திலுள்ள நெல்லிகல மலையில் சர்வதேச பௌத்த நிலையத்தினை நிர்மாணித்த வத்துரக்கும்புர தம்மரத்ன தேரரிடம் கூரகலை மலைத் தொடரினை புனரமைப்புச் செய்யும் பணிகள் ஒப்படைக்கப்பட்டன.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதனை அடுத்து இதன் புனர்நிர்மாணப் பணிகள் மின்னல் வேகத்தில் இடம்பெற்றன. சுமார் இரண்டு வருடங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட இந்த புனரமைப்புப் பணிக்கு வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களினால் நிதியுதவி வழங்கப்பட்டதாக வத்துரக்கும்புர தம்மரத்தன தேரர் முன்னர் தெரிவித்திருந்தார்.
இதன் நிர்மாணப் பணிகளுக்கும் இலங்கை இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்பு படை ஆகியவற்றின் முழுமையான ஒத்துழைப்பும் கிடைக்கப் பெற்றது. கடந்த வெசாக் தினத்தின் போது (மே 7) புனரமைப்புச் செய்யப்பட்ட கூரகல பகுதி, அப்போதைய இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
இதனையடுத்தே இப்பிரதேச முஸ்லிம்களுக்கும், தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலுக்கும் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இப்பள்ளிவாசலின் விறாந்தை பகுதியிலுள்ள தகரக் கொட்டிலை அகற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சி இறுதியில் கைவிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இப்பள்ளிவாசல், ஹிஜ்ரி 883 இல் அடக்கம் செய்யப்பட்டுள்ள யெமனைச் சேர்ந்த தர்வேஷ் முஹையதீன் வலியுல்லாஹ் அவர்களின் சியாரம் ஆகியன ஒருபோதும் அகற்றப்படமாட்டாது என்றும் சிறிபாத போன்று இப்பகுதி அபிவிருத்தி செய்யப்படும் என வத்துரக்கும்புர தம்மரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இப்பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள சுரங்க மலை, ஜின் மலை, பாத மலை போன்றவற்றில் சுமார் 40 குகைகள் காணப்படுவதாக வரலாறுகள் கூறுகின்றன.
தற்போது சுரங்க மலை காணப்பட்ட பிரதேசத்தில் 167 அடி உயரமான தாதுகோபுரமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜின் மலை காணப்பட்ட இடத்தில் சிங்கமும் பாத மலை காணப்பட்ட இடத்தில் யானையும் கட்டப்பட்டுள்ளன.
இதேவேளை, இப்பள்ளிவாசல் அமையப்பெற்றுள்ளதை இலகுவில் அடையாளம் காண்பதற்காக நிர்மாணிக்கப்பட்டிருந்த மினாரா (வரவேற்பு கோபுரம்) இவ்வருட ஆரம்பத்தில் அத்துமீறி உடைக்கப்பட்டது.
இதனால், இப்பள்ளிவாசலை இலகுவில் அடையாளம் காண்பதற்கான எந்தவொரு அடையாளமுமில்லை. இப்பள்ளிவாசலை திட்டமிட்டு மறைக்கும் நோக்கில் இதற்கு அருகிலுள்ள திறந்தவெளிப் பகுதி சுவர்களினால் கட்டப்பட்டு ஐந்து அரச மரங்கள் நடப்பட்டுள்ளன.
சுமார் 10 அடி அகலமான சிறிய வீதியொன்றின் ஊடாகவே தற்போது இப்பள்ளிவாசலுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதன் காரணமாக புதிதாக இப்பள்ளிவாசலுக்குச் செல்வோர் பள்ளிவாசலை அடையாளம் காண்பதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். அது போன்ற நிலையினை இக்கட்டுரையாளரும் எதிர்நோக்கினார்.
இப்பள்ளிவாசலுக்கான நிர்வாக சபை 1936 இலிருந்து நியமிக்கப்பட்டுள்ளதாக வரலாறுகள் கூறுகின்றன. எனினும், வக்பு சபையினால் இன்று இப்பள்ளிவாசலுக்காக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளில் அதிகமானோர் கொழும்பினைச் சேர்ந்தவர்களாவர். அத்துடன் தென்ன கிராமத்தினைச் சேர்ந்த எவரும் இந்த நிர்வாக சபையில் உள்வாங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் இப்பிரதேசம் கொண்டுவரப்பட்டுள்ளமையினால், இப்பள்ளிவாசலின் எந்தவொரு செயற்பாட்டுக்கும் குறித்த திணைக்களத்தின் அனுமதியினை பெற வேண்டியுள்ளது.
தப்தர் ஜெய்லானியில் 1890 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கொடியேற்றமும், கந்தூரி நிகழ்வும் கடந்த 133 வருடங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. எவ்வாறாயினும், இவ்வருட கந்தூரி கடந்த நவம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை இரவும், 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பகலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் வத்துரக்கும்புர தம்மரத்தன தேரரின் ஆலோசனையின் பிரகாரம் குறித்த நிகழ்வு 30ஆம் திகதி புதன்கிழமை இரவிற்கும், 1ஆம் திகதி வியாழக்கிழமை பகலிற்கும் மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு கந்தூரிக்கான திகதி மாற்றப்பட்டமை இதுவே முதற் தடவையாகும்.
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் அதிக சிங்களவர்கள் இந்த மலைத் தொடருக்கு விஜயம் செய்வதனாலேயே இவ்வாறு வேறு திகதிக்கு மாற்றப்பட்டிருக்கலாம் என இப்பள்ளிவாசலின் நிர்வாகியொருவர் தெரிவித்தார்.
குறித்த தினங்களில் சுமார் ஒரு இலட்சம் பௌத்தர்கள் கூரகல மலைத் தொடரினை பார்வையிட வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை ஊக்குவிக்கும் நோக்கில் பல நிகழ்ச்சித் திட்டங்கள் சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
“இந்த பிரதேச முஸ்லிம்களை வெளியேற்றுவதே வத்துரக்கும்புர தம்மரத்தன தேரரின் இலக்காகும். இதற்காக முஸ்லிம்களின் காணிகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் அவர் தற்போது களமிறங்கியுள்ளார்” என இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் முஸ்லிம் குடும்பமொன்றிடம் இருந்து சுமார் அரை ஏக்கர் காணியினை 25 இலட்சம் ரூபாவிற்கு கூரகல ரஜமகா விகாரை நிர்வாகம் கொள்வனவு செய்துள்ளதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.
இதேவேளை, கூரகல புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக முஸ்லிம்கள் வாழும் பகுதி காபட் வீதியாக புனரமைப்பு செய்யப்பட்டது. குறித்த வீதி இருக்கத் தக்கதாக இன்று கூரகலைக்கு செல்வதற்காக புதிய வீதியொன்று நிர்மாணிக்கப்பட்டு முஸ்லிம் பிரதேசம் திட்டமிட்டு ஒதுக்கப்படுவதை நேரடியாக அவதானிக்க முடிந்தது.
முன்னரைப் போன்று தற்போது முஸ்லிம்கள் இப் பகுதிக்கு விஜயம் செய்வது குறைவு என்பதும் இங்கு கவனிக்கத்தக்கதாகும். இதேவேளை ஜெய்லானிக்கு வருகை தரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டியது இப்பள்ளிவாசல் நிர்வாகத்தின் பொறுப்பாகும்.
இதனிடையே, திட்டமிடப்பட்டு வரலாற்றிலிருந்து இல்லாதொழிக்கப்படுகின்ற தப்தர் ஜெய்லானி பற்றி இதுவரை எந்தவொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரும் வாய் திறக்கவில்லை.
இலங்கை முஸ்லிம்களுக்கு பாவா ஆதம் மலைக்குப் பிந்திய மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு இருப்பியல் அடையாளமான தப்தர் ஜெய்லானியை பாதுகாப்பதற்காக இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் கொள்கை வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவையாகும்.- Vidivelli