மாகொல முஸ்லிம் அநாதைகள் நிலையத்தின் மள்வானை கிளையின் பாடசாலையை தனியாருக்கு வழங்கி, அநாதரவான மாணவர்களின் சொத்துக்களை அபகரிக்க முயற்சிகள் இடம்பெறுவதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபை தீவிர அவதானத்தை செலுத்தியுள்ளது.
அநாதைகளின் நலனுக்காக மட்டும் பயன்படுத்த வக்பு செய்யப்பட்ட சொத்துக்களை கையாடல் செய்ய எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பில் ஜம் இய்யதுல் உலமா சபையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் தீர்மானம் ஒன்றினை எடுக்க ஜம் இய்யதுல் உலமா சபையின் பத்வா குழுவும், நிறைவேற்றுக் குழுவும் தீவிரமாக விடயத்தை ஆராய்வதாக அறிய முடிகின்றது.
இது தொடர்பில் , அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபை மாகொல முஸ்லிம் அநாதைகள் நிலையத்தின் தற்போதைய நிர்வாக சபையினரையும், பழைய மாணவர் சங்க பிரதி நிதிகளையும் தனித் தனியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கடந்த நவம்பர் 29 ஆம் திகதி அநாதைகள் நிலைய நிர்வாக சபையினரையும், நேற்று முன் தினம் 6 ஆம் திகதி பழைய மாணவர் சங்க பிரதி நிதிகளையும் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் தலைமையிலான குழுவினர் மாளிகாவத்தையில் உள்ள தமது தலைமையகத்துக்கு அழைத்து கலந்துரையாடி விடயங்களை கேட்டறிந்துள்ளனர்.
இந் நிலையில், அநாதைகளின் நலனுக்காக பயன்படுத்த வேண்டிய சொத்துக்களின் பாதுகாப்பு, அதன் பயன்பாடு மற்றும் பராமரிப்பு தொடர்பில் மிக விரைவில் ஜம் இய்யதுல் உலமா சபை தனது தீர்மானத்தை அறிவித்து, சுமுகமாக குறித்த பிரச்சினையை தீர்க்க எதிர்ப்பார்பதாக அறிய முடிகின்றது.- Vidivelli