மஹர சிறைச்சாலை வளாகத்திலுள்ள பள்ளிவாசலை தாமதியாது மீளத்திறக்க ஏற்பாடு செய்க
கபூரியா விவகாரம் குறித்தும் நடவடிக்கை எடுக்குமாறு நீதியமைச்சரிடம் முஜிபுர் ரஹ்மான் வேண்டுகோள்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
மஹர சிறைச்சாலை வளாகத்தில் 100வருட காலத்துக்கும் மேற்பட்ட வரலாறு கொண்ட பள்ளிவாசலொன்று இருக்கிறது. இப்பிரதேச முஸ்லிம்கள் இப்பள்ளிவாசலிலே தங்களது சமயக் கடமைகளை நிறைவேற்றி வந்தனர். என்றாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளது. இப்பள்ளிவாசலை தாமதியாது மீளத்திறக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே முஜிபுர் ரஹ்மான் மேற்குறிப்பிட்ட கோரிக்கையை முன்வைத்தார்.
சிறைச்சாலை அதிகாரிகள் இப்பள்ளிவாசலை தமது வேறு தேவைகளுக்காக உபயோகப்படுத்துகின்றனர். இப்பகுதியில் வாழும் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் தமது சமயக்கடமைகளுக்காக வேறுபள்ளிவாசல் இன்றி அல்லலுறுகின்றனர்.அத்தோடு பள்ளிவாசலில் நடாத்தப்பட்டு வந்த அஹதிய்யா பாடசாலையும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் கவனம் செலுத்தி பள்ளிவாசலை அப்பகுதி மக்களுக்கு மீளப் பெற்றுக்கொடுங்கள் எனக்கோரியுள்ளார்.
மஹரகம கபூரிய்யா அரபுக்கல்லூரி
மஹரகமயில் இயங்கிவரும் அரபுக்கல்லூரி மற்றும் சுலைமான் வைத்தியசாலை இயங்கிவந்த, கபூரிய்யா அரபுக்கல்லூரிக்கு வக்பு செய்யப்பட்ட வக்பு சொத்துக்களையும் பாதுகாப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கோரியுள்ளார்.
விவாதத்தில் கலந்து கொண்டு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் தற்போது வக்பு சொத்துக்கள் தொடர்பாக பெரிதும் பேசப்பட்டு வருகிறது. வக்பு சொத்துக்களை அபகரித்துக்கொள்ளும் முயற்சியில் ஒருசிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
கபூரிய்யா அரபுக்கல்லூரிக்கென வக்பு செய்யப்பட்ட வக்பு சொத்தை மர்ஹூம் அப்துல் கபூரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அச்சொத்தைக் கையேற்று வக்புசட்டத்தையும் மீறி சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்.
கபூரிய்யா வக்பு சொத்தினை அவர் சொப்ட் லொஜிக் போன்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து அதனை குடும்பச் சொத்து என்கிறார்.
அன்று முஸ்லிம் தனவந்தர்களால் வக்பு செய்யப்பட்ட சொத்துகளை வக்பு சட்டத்தின் கீழ் பாதுகாத்துத் தருமாறு நீதியமைச்சரை வேண்டிக்கொள்கிறேன். வக்பு செய்யப்பட்ட சொத்துகளின் பரம்பரையைச் சேர்ந்த குடும்பத்தவர்கள் அந்த சொத்துக்கள் தனியார் சொத்து என்றுகூறி கையாட முயற்சிக்கின்றனர் என்பதையும் ஞாபகமூட்ட விரும்புகிறேன் என்றார்.- Vidivelli