இரண்டு நாட்களாக தெற்கு எத்தியோப்பியாவில் இரு இனக் குழுக்களுக்களிடையே ஏற்பட்ட தீவிரமான கலவரம் காரணமாக 21 பேர் பலியாகியுள்ள அதேவேளை நூற்றுக்கணக்கானோர் அண்டை நாடான கென்யாவுக்கு தப்பியோடியுள்ளனர்.
எத்தியோப்பியாவின் பெரும்பான்மை ஓரமோ இனத்தினராலும், சோமாலி இனக் குழுவினராலும் தமக்கே சொந்தமான பிராந்தியமாக உரிமை கோரப்படும் கென்யாவின் எல்லையில் அமைந்துள்ள மொயாலே நகருக்கு அருகில் கடந்த வியாழன், வெள்ளி ஆகிய தினங்களிலேயே இக்கலவரங்கள் இடம்பெற்றன.
இந்தக் கலவரங்கள் காரணமாக 61 பேர் காயமடைந்துள்ளதாக அரசுடன் தொடர்புடைய ஊடகமான பானா ரேடியோ ஒரோமியா, பிராந்திய மாநில தொடர்பாடல் அலுவலகத்தை மேற்கோள்காட்டி தகவல் வெளியிட்டுள்ளது.
எத்தியோப்பியாவின் நவீன வரலாற்றில் முதலாவது ஒரோமே தலைவரான அபீ அஹமட் கடந்த ஏப்ரல் மாதம் பிரதமராக பதவியேற்றதிலிருந்து நாட்டின் தென்பகுதியில் ஒரோமோ இனத்தவர்களுக்கும் ஏனைய இனத்தவர்களுக்கும் இடையேயான கலவரங்கள் ஆரம்பமாகின.
கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அறிக்கை மற்றும் ரொய்ட்டர் செய்தித் தாபனத்தின் மீளாய்வு என்பனவற்றின் பிரகாரம் பாரிய ஆயுதங்கள் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த முரண்பாடு கென்யாவிலும் பரவும் ஆபத்து காணப்படுகின்றது.
பல டசின்கணக்கான மக்கள் இந்த சண்டை காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டில் இதற்கு முன்னர் இடம்பெற்ற வன்முறைகளைவிட தீவிரமாகக் காணப்படுவதாக எத்தியோப்பிய தலைநகரிலுள்ள மொயாலே மக்களுடன் தொடர்புகளைக் கொண்டுள்ள வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நூற்றுக்கணக்கான எத்தியோப்பிய மக்கள் எல்லை கடந்து கென்யாவுக்கு தப்பிச் சென்றுள்ளதை மொயாலே உபமாநில பிரதி ஆணையாளர் பற்றிக் முமாலி உறுதிப்படுத்தினார்.
இவ்வாண்டின் ஆரம்பத்தில் நாட்டின் தென் பகுதியில் கிளர்ச்சிக்காரர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என எத்தியோப்பிய இராணுவத்தால் தெரிவிக்கப்படும் நடவடிக்கையில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டதையடுத்து 5000 எத்தியோப்பியர்கள் கென்யாவில் தஞ்சம் கோரும் நிலைமை ஏற்பட்டது.
ஒரோமோ இனத்தவர்களுக்கும் சோமாலி கர்ரே போராளிகளுக்கும் இடையேயான மோதலின் போது மக்கள் கொல்லப்பட்டனர், வர்த்தக வளாகங்கள் மீது குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன, வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன என கென்யா பகுதி மொயாலேயிலுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளரான வாரியோ சோறா தெரிவித்தார்.
நாட்டின் மிகப் பெரும் பகுதியான ஒரோமியா பிராந்தியத்தில் எல்லைப் பிரச்சினைக்கு மேலதிகமாக குறைந்தது நான்கு வகையான இனப் பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதன் மூலம் மேலும் வன்முறைகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக உதவிக் குழுக்கள் தெரிவிக்கின்றன.
-Vidivelli