தனியார் சட்ட திருத்த நகல் வரைபு தயார்- முஸ்லிம் எம்.பி.க்களுடன் நீதியமைச்சர் இன்று பேச்சு
விரைவில் இறுதி செய்து அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பு
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திருத்தங்கள் தொடர்பான இறுதித்தீர்மானம் விரைவில் எட்டப்படவுள்ளது. சட்டவரைஞர் திணைக்களம் நகல் சட்ட வரைபினைத் தயாரித்துள்ளது. இச்சட்டவரைபு நீதியமைச்சரினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை நீதி சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, அரசியல் சீர்திருத்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று பாராளுமன்றில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இதற்கான அழைப்பு அமைச்சரினால் விடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் தொடர்பில் அமைச்சர் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்டறியவுள்ளார்.
முன்னாள் நீதியமைச்சர் அலிசப்ரியினால் இச்சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழு ஏற்கனவே தனது அறிக்கையை தற்போதைய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளது. வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீனின் தலைமையில் இக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீதியமைச்சரின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இன்று இடம்பெறவுள்ள இக்கூட்டத்துக்கு சட்டத்திருத்த ஆலோசனைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீனும் பெண் சட்டத்தரணிகளும் அழைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விவகரம் தொடர்பில் ‘விடிவெள்ளி’ முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் கருத்து வினவியது,
பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்
‘ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக, முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திருத்தங்கள் இழுபறியில் இருக்கிறது. 2009 ஆம் ஆண்டு அப்போது நீதியமைச்சராக இருந்த மிலிந்த மொறகொடவினால் சட்டத்தில் திருத்தங்களை சிபாரிசு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டது.
நீதியரசர் சலீம் மர்சூபின் தலைமையில் நியமிக்கப்பட்ட இக்குழு இருபிரிவாக பிளவுபட்டு இருவேறு அறிக்கைகளை நல்லாட்சி அரசாங்கத்தில் நீதியமைச்சராக இருந்த தலதா அத்துகோரலவிடம் கையளித்தது. இக்குழுவில் ஐந்து விடயங்களில் முரண்பாடுகள் நிலவின. அன்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இத்திருத்தங்கள் தொடர்பில் ஆராய்ந்து கருத்துகளை தெரிவித்தோம்.
பின்பு, முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியான ‘ஒரேநாடு ஒரேசட்டம்’ மற்றும் அத்துரலிய ரதன தேரரினால் பாராளுமன்றத்தில் காதிநீதிமன்ற முறைமையை ஒழிப்பதற்கு முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணை என்பன மக்கள் மத்தியில் சந்தேகங்களை உருவாக்கியது.
இதனையடுத்து நீதியமைச்சராக இருந்த அலி சப்ரி திருத்தங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்கு சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தலைமையில் ஆலோசணைக் குழுவொன்றினை நியமித்தார். அக்குழு சிபாரிசுகள் அடங்கிய ஆலோசணைகளை வழங்கியுள்ளது.
தற்போது பெரும்பாலான விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டுவிட்டது. பெண் காதி நியமனம் தொடர்பிலும் முடிவு எட்டப்பட்டுள்ளது. ஆனால் சில விடயங்களில் சர்ச்சை நிலவுகிறது. காதி நீதிமன்றங்கள் தொடர்பில் சர்ச்சை நிலவுகிறது. இணக்கம் எட்டப்படாத விவாகரத்து விண்ணப்பங்களை சிவில் நீதிமன்றங்களில் விசாரிப்பதா? என்பதில் சர்ச்சை உருவாகியுள்ளது.முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் இது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானிப்போம்.
காதி நீதிமன்றங்கள் தொடர்பில் அதிருப்தி வெளியிடப்படுகிறது. பல குறைபாடுகள் காணப்படுகின்றன. அவற்றை எவ்வாறு சரி செய்யலாம் என ஆராயவேண்டும். வை.எம்.எம்.ஏ. இச்சட்டத் திருத்தம் தொடர்பில் சிறந்த ஆலோசனைகளை முன்வைத்துள்ளது. பெண்களின் குற்றச்சாட்டுகளும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். காதி நீதிமன்றங்கள் மீதான நீதிச் சேவை ஆணைக்குழுவின் கண்காணிப்பு போதாது.
மொத்தத்தில் இச்சட்டத் திருத்தங்கள் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்படக் கூடாது. அடுத்த வருடம் முற்பகுதியிலேனும் இத்திருத்தங்களை நாம் அமுலாக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீவிரமாக இருக்கிறோம் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர்
ரிஷாட் பதியுதீன்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கருத்து தெரிவிக்கையில்,
‘எம்மிடையே பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் இவ்விடயத்தில் நாம் அனைவரும் ஒரே நோக்கோடு ஒன்றுபடவுள்ளோம். திருத்தங்கள், இஸ்லாமிய வரையறைக்குள், நாட்டின் சட்டங்களையும் மதித்து அமைய வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்’ என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர்
எம்.எஸ்.தௌபீக்
‘நீதியமைச்சருடனான கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாம் ஒரே கருத்தினையே முன்வைக்கவுள்ளோம். பெண் காதி நியமனம் தொடர்பில் நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. காதி நீதிமன்றங்கள் மேம்படுத்தப்பட வேண்டும். காதிகளாக தகுதியானவர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்பட வேண்டும்’ என்றார்.
இராஜாங்க அமைச்சர்
காதர் மஸ்தான்
‘முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்மிடம் முரண்பாடான கருத்துகள் இருக்கலாம். இவற்றை வியாழக்கிழமை (இன்று) நடைபெறும் அமைச்சருடான கூட்டத்தில் தீர்த்துக்கொள்வோம்’ என இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
எஸ்.எம்.எம்.முஸர்ரப் எம்.பி.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்எம்.எம். முஸர்ரப் கருத்து தெரிவிக்கையில், ‘நீதியமைச்சருடன் கலந்துரையாடுவதற்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. எம்மால் பொதுவான இணக்கப்பாட்டினை எட்ட முடியும்’ என்றார்.-Vidivelli