கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ ஒரு பக்கத்தில் ஹிட்லராகவும் மறு பக்கத்தில் ஒரு சமாதானப் பறவையாகவும் தன்னைக் காட்டிக்கொண்டு இலங்கையின் எதிர்காலத்தையிட்டு ஒரு கனவுலகைப் படைத்துக்கொண்டிருக்கிறார். அந்தக் கனவுலகையும் அவரது இரு வேடங்களையும் பற்றிய ஒரு சிறு குறிப்பே இக்கட்டுரை.
ஜனாதிபதியின் கனவு
இலங்கையின் நூறாவது சுதந்திரதின வருடத்தில், அதாவது 2048ல், வியத்தகு பொருளாதார முன்னேற்றத்தைக் கண்டு, முதலாவது உலக நாடுகளின் குடும்பத்துள் ஓர் அங்கத்தவனாக இலங்கை திகழும் என்று ஏற்கனவே ஓரிரு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி விக்கிரமசிங்ஹ பேசியுள்ளார். அந்தக் கனவை நனவாக்கும் பாதையில் அவர் எடுத்துவைத்த முதலாவது காலடிப்பதிவாக அமைந்துள்ளது அண்மையில் நிதி அமைச்சர் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2013ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு அறிக்கையும் அதனைத் தொடர்ந்து அவர் ஆற்றிய உரையும்.
திறந்த பொருளாதாரத்தின் அடிப்படையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கருவியாகக் கொண்டு வெளிநாட்டவரின் முதலீடுகளுடன் ஏற்றுமதித் துறையை வளர்த்து அந்த வளர்ச்சியின்மூலம் செல்வம் திரட்டி தனது கனவை நனவாக்க அவர் முயல்கின்றார். அதற்கு அடிப்படைத் தேவையாக அரசாங்கத்தின் பட்ஜட்டில் மிகை காணவேண்டும், அல்லது சமநிலை காணவேண்டும். அதுவும் முடியாவிட்டால் விரிவடைந்துசெல்லும் பற்றாக்குறையையாவது படிப்படியாகக் குறைக்க வேண்டும். அதைத்தான் சர்வதேச நாணய நிதி ஆலோசகர்களும் அந்நிதி உதவிக்கான நிபந்தனைகளுள் முக்கியமானதொன்றாக விதித்துள்ளனர். ஆகவே அரசாங்கத்தின் அவசியமற்ற செலவினங்களைக் குறைத்து வருமானத்தைப் பெருக்குவது அவசியம். எனவேதான் வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால் செலவினங்களோ எதிர்பார்த்தபடி குறையவில்லை. குறைப்பதும் கஷ்டம். இந்த விபரங்களை விரிவாக விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக, ஜனாதிபதியின் கனவு நனவாகுவதற்குச் சவால்களாக விளங்கும் பல விடயங்களுக்குள் இரண்டைப் பற்றிமட்டும் இக்கட்டுரை கவனம் செலுத்துகிறது. ஒன்று, இளந்தலைமுறையின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், மற்றது இனப்பிரச்சினை. இரண்டும் அவர் எதிர்நோக்கும் சவால்கள். முதலாவதுக்கு ஹிட்லராகவும் இரண்டாவதற்கு சமாதானப் பறவையாகவும் அவர் வேடம்போடத் தொடங்கியுள்ளார்.
ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை
இனிமேல் ஓர் அரகலய ஆர்ப்பாட்டம் நடைபெறுவதை படைகொண்டாகிலும் தடுப்பேன் என ஹிட்லர் வேடத்தில் அறைகூவல் விடுத்துள்ளார். அதாவது அடக்குமுறையைக் கையாண்டாவது தனது கனவை நனவாக்க அவர் துணிந்துவிட்டார் என்பதையே அந்த அறைகூவல் வெளிப்படுத்துகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் அரகலய இளைஞர்களின் ஆர்ப்பாட்டம் அன்று நடைபெறாதிருந்தால் விக்கிரமசிங்ஹ இன்று ஜனாதிபதியாகவும் நிதி அமைச்சராகவும் நிச்சயமாக பதவியிலிருக்க மாட்டார். அந்த இளைஞர்களின் முதுகை ஏணியாக்கி உச்சத்துக்கு வந்தபின் அந்த ஏணியையே எட்டி உதைக்கும் இந்த ஜனாதிபதியை பசுத்தோல் போர்த்திய புலி என அழைப்பதில் தவறுண்டா? முன்னைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை ஹிட்லராக மாறியாவது நாட்டை வளர்க்குமாறு ஒரு பௌத்த துறவி வேண்டிக் கொண்டார். ஆனால் அவர் ஹிட்லர் ஆகாமலே நாட்டை வங்குரோத்தாக்கி வெளியேறிவிட்டார். இப்போது அந்த வேடத்தை அணிந்து அரகலய ஆர்ப்பாட்டங்களைத் தடைசெய்ய முற்பட்டுள்ளார் ரவி.
அரகலயவை இவர் வெறுப்பதற்கும் அதைக்கண்டு பயப்படுவதற்கும் காரணம் என்ன?
அடிப்படைமாற்றம்
அரகலய இளைஞர்களின் முக்கியமான வேண்டுகோள் நாட்டின் அரசியலிலும் நிர்வாகத்திலும் பொருளாதாரப் பராமரிப்பிலும் அடிப்படை மாற்றம் வேண்டும் என்பதே. அந்த மாற்றத்தை கொண்டுவரும் துணிவும் வல்லமையும் இன்று நாடாளுமன்றத்துக்குள் குந்திக்கொண்டிருக்கும் அமைச்சர்களுக்கும் அவர்களின் பிரதிநிதிப் பரிவாரங்களுக்கும் இல்லை என்பதை அவ்விளைஞர்கள் உணர்ந்ததனாலேயே “225 வேண்டாம்” என்ற கோஷத்தையும் முன்வைத்துப் போராடினர். அவர்கள் வேண்டும் மாற்றத்தைப்பற்றி விளங்குதற்கு முன்னர் இந்த இளைஞர்கள் யார் என்பதை முதலில் அறிதல் அவசியம்.
விழிப்படைந்த இளையதலைமுறை
வெட்டிப் பேச்சுகளிலும் வேடிக்கையான கேளிக்கைகளிலும் காலத்தை கடத்தி, பொழுதுபோக்குக்காக பகலிலே ஆர்ப்பாட்டம் நடத்தி பொழுது மறைந்தபின் வீடுகளுக்குச் சென்று உறங்கும் உயர்தர, நடுத்தர வர்க்கங்களின் செல்லப் பிள்ளைகளோ அல்லது அரசியல்வாதிகளால் ஏவி விடப்பட்ட கைக்கூலிகளோ அல்ல இந்த இளவல்கள். மாறாக, இன்று உலகெங்கும் உருவாகியுள்ள இளைய தலைமுறை நவீன மாற்றங்களால் உந்தப்பட்டு, கல்வியினால் விழிப்புற்று, மனிதசந்ததி மட்டுமல்லாமல் அதனுடன் ஒன்றி இயற்கை அன்னையின் மடியிலே தவழும் அத்தனை ஜீவராசிகளும் அவற்றின் சூழலும் காலாதிகாலமாகப் பாதுகாக்கப்பட்டு வளர்ச்சி காணவேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன் செயற்படும் ஒரு துடிப்புள்ள சமுதாயம். அவ் இளவல்களின் விரிவானதும் மனிதாபிமானதுமான அபிலாஷைகள், அவர்கள் விளையாட்டுப் பொருள் போன்று பாவிக்கும் நூதனக் கருவிகள், அக்கருவிகள் புரியும் வித்தைகள், இவ் இளவல்களின் தலைமுறையின் உலகளாவிய தொடர்புகள் என்பனவெல்லாம் அவர்களின் பெற்றோருக்கும் பாட்டி பாட்டன்களுக்கும் புரியாத புதிர்கள். ஆயிரமாயிரம் கிலோமீற்றர் தொலைவில் நடைபெறும் சம்பவங்களைப்பற்றிய விபரங்களை அரைநொடியிலே உள்வாங்கி அதன் உண்மை பொய்மைகளை பகுத்தறிந்துணரும் வாய்ப்பையும் வல்லமையையும் அவர்கள் பெற்றிருப்பதால் அவர்களின் பெற்றோர்களும் முதியோர்களும் அரசியல்வாதிகளின் பொய்ப்பிரசாரங்களில் அன்று மயங்கியதுபோன்று இந்தத் தலைமுறை இன்று மயங்கமாட்டாது. இந்த இரகசியத்தை ஆட்சியாளர்கள் முதலிலே புரிந்துகொள்ளுதல் வேண்டும்.
அதனைப் புரிந்துகொண்ட பல ஜனநாயக நாடுகளும் சர்வதேச நிறுவனங்களும் இந்தத் தலைமுறையை அணைத்தே ஆட்சிநடத்தவும் கருமமாற்றவும் முன்வந்துள்ளன. ஆனால் அதைப் புரிந்து கொள்ளாமலும் அல்லது புரிய மறுப்பதினாலும் இலங்கையின் இன்றைய ஆட்சியாளர்கள் இளந்தலைமுறையைக்கண்டு அஞ்சுகின்றனர். அந்த அச்சத்தினாலேதான் ஜனாதிபதியும் அரகலய ஆர்ப்பாட்டத்தை முறியடிக்க முற்பட்டுள்ளார். அந்த எதிர் நீச்சலில் அவரும் அவரைத் தூக்கிப்பிடிக்கும் சக்திகளும் தோல்வியடைவர் என்பதுமட்டும் உறுதி. அரகலய போராட்டம் என்பது வாழத்துடிக்கும் ஒரு தலைமுறைக்கும் வாழ்ந்து முடிந்த ஒரு தலைமுறைக்கும் இடையே நடைபெறும் போராட்டம். காலமோ இளந்தலைமுறையின் பக்கம் நிற்கிறது.
அமைப்பையே மாற்றுவதா
செப்பனிடுவதா?
ரணிலை ஜனாதிபதியாக்கியது அரகலய. ஆனால் அவரை பாதுகாக்கிறது இன்றைய அமைப்பும் அவரைச் சுற்றியிருக்கும் அதன் பாதுகாவலர்களும். ஆகவே அரகலயவை தடைசெய்து அமைப்பினைச் செப்பனிட்டு அந்த அமைப்பின் பலத்தில் ஆட்சி நடத்த விளைகிறார் ஜனாதிபதி. அதனை முற்றாக ஒழிக்க வேண்டும் என்கிறது புதிய தலைமுறை. ஏன்? பெரும்பான்மை இனத்தை ஒரு துரும்பாகப்பாவித்து, இனவாதத்தை வளர்த்து, மக்களைப் பிரித்து, ஜனநாயகம் என்ற பெயரில் ஊழல் மலிந்த ஓர் அரசியல் கலாச்சாரத்தையும் உருவாக்கி, அதன்மூலம் தமது சுய நலன்களைப் பெருக்கி, பொருளாதார வளர்ச்சி என்ற போர்வையில் நாட்டின் செல்வத்தையும் சூறையாடிய ஒரு கும்பலே கடந்த ஏழு தசாப்தங்களாக மாறிமாறி ஆட்சிபீடம் ஏறி இந்த நாட்டைச் சீரழித்துள்ளது. அந்தச் சீரழிவின் உச்சக்கட்டமாகத்தான் இன்று நாடே வங்குரோத்து அடைந்துள்ளது. இதனை உணர்ந்த இளந்தலைமுறை இனபேதமோ மதபேதமோ இன்றி இலங்கையர் என்ற ஒரே போர்வைக்குள் யாவரையும் உள்ளடக்கி ஒரே குரலில் நடைமுறையிலிருக்கும் இந்த அமைப்பை முற்றாகக் களைந்தெறியாமல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்று கிளர்ந்தெழுந்துள்ளது. ஜனாதிபதியின் கனவு நனவாகுவதற்கு இந்தத் தலைமுறை ஒரு பெரும் தடை. எனவேதான் அவரின் ஹிட்லர் வேடம்.
சமாதானப் பறவை
இனவாதமே, அதிலும் குறிப்பாக சிங்கள பௌத்த பேரினவாதமே, மேலே விளக்கப்பட்ட அமைப்பின் இதயநாடி. அந்த அமைப்பு ஒரு வண்டி என்றால் அது உருண்டோடுவதற்கான அச்சாணியே பேரினவாதம். அந்த அச்சாணியை கழற்றிவிட்டால் வண்டியே புதைந்துவிடும். அரசியல் ரீதியில் இனவாதத்தைப் பாதுகாத்து வளர்க்காமல் ஆட்சியில் அமரமுடியாது என்பதை ஒவ்ெவாரு பொதுத் தேர்தலும் ஞாபகப்படுத்திக் கொண்டே வந்துள்ளன. ஆனால் அது எவ்வாறு பொன்விளையும் பூமியொன்றை போர்க்களமாக்கி, ஆயிரமாயிரம் உயிர்களைக் கொன்று குவித்து, பறவைக் கூண்டுக்குக் கல்லெறிந்ததுபோல் லட்சக்கணக்கான குடும்பங்களைச் சிதறடித்து நாடோடிகளாக்கி, திறனாளிகளையும் நாட்டைவிட்டு ஓடச் செய்து, செல்வமிழந்து, பிற நாடுகளிடம் பிச்சைப்பாத்திரம் ஏந்துகிற நிலைக்குத் தள்ளிவைத்துள்ளது என்பதை மற்றவர்கள் உணராவிட்டாலும் ஜனாதிபதி உணர்ந்துள்ளார் என்பதையே அவர் ஒரு சமாதானப்பறவையாக தமிழினத்தின் துயர் துடைக்க முன்வந்துள்ளமை காட்டுகின்றது. ஆனால் இதுவும் அரசியல் லாபத்துக்காக அவர்போடும் இன்னொரு வேடமா என்ற சந்தேகம் எழுகின்றது. ஏன் இந்தச் சந்தேகம்?
தொடுவானம்போன்று தூரமாகிக்கொண்டே செல்கின்றது இனப்பிரச்சினை. அனால் அதற்கு விரைவில் தீர்வு காணவேண்டுமென சர்வதேசம் இப்போது குரல் எழுப்புகிறது. அதுமட்டுமல்ல, இனப்பிரச்சினையால் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் சமுதாயமொன்று உலக அரங்கில் பலம்கொண்ட அழுத்தங்களை கொடுக்கக்கூடிய ஒரு சக்தியாக மாறியுள்ளது. இந்த நிலையில் பொருளாதார உதவிக்காகச் சர்வதேசத்தின் தயவையும் புலம்பெயர் சமூகத்தின் முதலீடுகளையும் நாடிநிற்கும் இலங்கை, இனப்பிரச்சினையை இனியும் தட்டிக்கழிக்க முடியாது. அதை உணர்ந்துள்ளார் ஜனாதிபதி. அதனாலேதான் அவர் ஒரு சமாதானப் பறவையாகவும் முகம் காட்டுகிறார்.
தமிழ் தேசியப் பிரச்சினையா? சிறுபான்மையோர் தேசியப்
பிரச்சினையா?
சிங்கள பௌத்த பேரினவாதம் 1948லிருந்து அரசியலுக்குள் புகுந்த காலம் தொடக்கம் தமிழினத்தையே முக்கியமாகக் குறிவைத்துச் செயற்பட்டு வந்துள்ளபோதும் அண்மைக் காலங்களில் அது முஸ்லிம்களையும் உள்ளடக்கி சிறுபான்மை இனங்களின் எதிரியாக இயங்கத் தொடங்கியுள்ளது. ஆகவே இன்று தீர்க்கப்படவேண்டிய தேசியப் பிரச்சினையை தமிழினத்தோடு மட்டும் சம்பந்தப்படுத்தாமல் இலங்கையின் அனைத்து சிறுபான்மை இனங்களோடும் சம்பந்தப்படுத்த வேண்டும். எனினும் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் தமிழினமே மிகப்பெரும் இழப்புகளுக்கு ஆளாகியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
இப்பிரச்சினையை ஜனாதிபதி உண்மையிலேயே அரசியல் லாபம் கருதாது தூய மனத்துடனும் துணிவுடனும் தீர்க்கவேண்டுமாயின் முதலில் அவர் ஒன்றைச் செய்யவேண்டும். அதாவது சிங்கள பௌத்த பேரினவாதிகள் இலங்கையை சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமான ஒரு நாடென்ற பொய்யை பகிரங்கமாகவே பறைசாற்றித் திரிகின்றனர். உதாரணமாக, 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் கண்டி நகரில் நடைபெற்ற ஒரு பகிரங்கக் கூட்டத்தில் பொதுபல சேனையின் செயலாளர் ஞானசார தேரர் இலங்கை சிங்கள மக்களுக்கே சொந்தமான நாடென்றும் அதில் வாழும் சிறுபான்மை இனங்கள் சிங்களவர்களின் நீண்டகாலக் குத்தகைக் குடியினர் என்றும் பேசி இருந்தார். அந்தக் கூற்றை காலஞ்சென்ற மங்கள சமரவீர துணிவுடன் எதிர்த்தபோது அவரை பேரினவாதிகள் ஒரு சமூகத் துரோகியெனக் கணித்து பௌத்த வைபவங்களிலிருந்து அவரை விலக்கியே வைத்திருந்தனர். இன்றுவரை வேறு எந்த சிங்கள அரசியல்வாதியோ தலைவனோ தலைவியோ ஞானசாரரின் கூற்றை எதிர்க்கவில்லை. மகிந்த ராஜபக்சகூட ஓரிரு சந்தர்ப்பங்களில் வடக்கு கிழக்கு மாகாணங்களைப்பற்றிப் பேசியபோது அவை எந்த ஓர் இனத்துக்குமட்டும் சொந்தமானவை அல்ல என்று கூறி இருந்தார். ஆனால் நாடே எந்த ஒரு இனத்துக்குமட்டும் சொந்தமானதல்ல என்பதை அவர் எந்தச் சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. ஏன்? ஆகவே ஜனாதிபதி அவர்கள் இந்த நாடு இங்கு பிரஜைகளாக வாழும் சகல மக்களுக்கும் சொந்தம் என்பதை துணிவுடன் கூறி அதனை அரசியல் யாப்பிலும் புகுத்தி பேரினவாதிகளின் ஆதாரமற்ற கூற்றை பகிரங்கமாகவே நிராகரிக்க வேண்டும். அந்தத் துணிவு இல்லையென்றால் தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் அவர் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தைகள் தனது பதவியைக் காப்பாற்ற நடத்தும் நாடகமேயன்றி வேறில்லை.
ஹிட்லராக மாறி இளையதலைமுறையின் எதிர்ப்பை அடக்க முயல்வதுபோன்று சமாதானப் பறவை என்ற பெயரில் சிறுபான்மை இனங்களின் உரிமைகளைப் பாதுகாக்கப் போவதாக வெளியுலகுக்கு அவர்காட்டும் முகமே இதுவென்று கருதத் தோன்றுகிறது.- Vidivelli