தேவை போதைப் பொருளுக்கு எதிரான ஓர் ‘அரகலய’!

0 604

பாட­சாலை மாண­வர்கள் மத்­தியில் அதி­க­ரித்து வரும் போதைப் பொருள் பாவனை தொடர்பில் வெளி­வரும் தக­வல்கள் அதிர்ச்சி தரு­கின்­றன. களுத்­துறை பகு­தியில் நீண்ட கால­மாக பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு போதை மாத்­தி­ரை­களை விற்­பனை செய்­து­வந்த தனியார் வகுப்பு ஆசி­ரியர் ஒருவர் சில வாரங்­க­ளுக்கு முன்னர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இவர் கணிதம் மற்றும் விஞ்­ஞான பாடங்­களை கற்­பிக்கும் ஆசி­ரியர் என்றும் தன்­னிடம் கற்கும் மாண­வர்­க­ளுக்கு இம்­மாத்­தி­ரை­களை அதிக விலைக்கு விற்­பனை செய்து வந்­துள்ளார் என்றும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­தது. இவ­ரி­ட­மி­ருந்து சுமார் 1300 போதை மாத்­தி­ரைகள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

அண்மைக் கால­மாக பாட­சாலை மாண­வர்கள் மத்­தியில் போதைப் பொருள் பாவனை அதி­க­ரித்­துள்­ளமை தொடர்பில் லேடி ரிட்ஜ்வே வைத்­தி­ய­சா­லையின் வைத்­திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா ஊட­கங்­க­ளுக்கு வெளி­யிட்­டுள்ள கருத்­துக்கள் கூர்ந்து கவ­னிக்­கத்­தக்­கவை.

“இந்த நாட்டில் நாம் சந்­தித்த தீவி­ர­வா­தங்­களை விட தற்­போது பாட­சாலை மாண­வர்கள் மத்­தியில் ஊடு­ரு­வி­யுள்ள போதைப் பாவ­னையே மிகவும் தீவி­ர­மா­னது. இதற்கு எதி­ராக சக­லரும் இணைந்து ஓர் ‘அர­க­ல­ய’வை ஆரம்­பிக்க வேண்டும். விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ராக முழு நாடுமே ஒன்று திரண்டு போரா­டி­யது போல இதற்கு எதி­ரா­கவும் இன,மத, கட்சி வேறு­பா­டு­களை மறந்து ஒன்­று­பட வேண்டும் ” என அவர் தெரி­வித்­துள்ளார்.

“போதைப் பொருள் விற்­ப­னை­யா­ளர்கள் மாண­வர்­க­ளையும் கட்­டி­ளமைப் பரு­வத்­தி­ன­ரையும் இலக்கு வைத்தே தமது வியா­பா­ரத்தை முன்­னெ­டுக்­கி­றார்கள். குறிப்­பாக ஐஸ் போதைப் பொருள் இன்று மாண­விகள் மத்­தி­யிலும் ஊடு­ரு­வி­யுள்­ளது. நகர்ப்­புற பாட­சா­லை­களில் மாத்­தி­ர­மன்றி கிராமப் புற பாட­சா­லை­க­ளிலும் போதைப் பொருள் பாவனை தொற்­றி­யி­ருப்­பது கவ­னிப்­புக்­கு­ரி­யது” என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

பாட­சா­லை­களின் களி­யாட்ட நிகழ்­வு­களில் ஆரம்­பத்தில் மது பரி­மா­றப்­ப­டு­கி­றது. பின்னர் போதைப் பொருள் பயன்­ப­டுத்­து­கி­றார்கள். சில நாட்­களில் அவர்கள் ஐஸ் போன்ற பாரிய போதைப் பொருள்­க­ளுக்கு அடி­மை­யா­கி­வி­டு­கி­றார்கள் என்றும் டாக்டர் பெரேரா குறிப்­பிட்­டுள்ளார்.

இந்த போதைப் பொருள் எனும் தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ராக கிராம மட்­டத்­தி­லி­ருந்து அர­க­லய ஆரம்­பிக்­கப்­பட வேண்டும். குறிப்­பாக ஒவ்­வொரு பிர­தே­சத்­திலும் போதைப் பொருள் வியா­பா­ரத்தில் ஈடு­ப­டுவோர் இனங்­கா­ணப்­பட்டு அவர்­க­ளுக்கு எதி­ராக மக்கள் போராட்­டத்தில் இறங்க வேண்டும், அவர்­களை அப் பகு­தியில் இருந்து விரட்­டி­ய­டிக்க வேண்டும். அவர்­க­ளுக்கு மரண தண்­டனை போன்ற உச்­ச­பட்ச தண்­டனை வழங்­கப்­பட வேண்டும். குறிப்­பாக பாட­சா­லை­க­ளுக்கு இவ்­வா­றான தீய சக்­திகள் உள்­நு­ழை­வது தடுக்­கப்­பட வேண்டும்” என்றும் அவர் மேலும் குறிப்­பிட்­டுள்ளார்.

மேலும் இவ்­வாறு போதைக்கு அடி­மை­யா­ன­வர்­க­ளது 12 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான பிள்­ளைகள் தற்­போது சிறுவர் பரா­ம­ரிப்பு இல்­லங்­களில் தங்­கி­யுள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். டாக்டர் பெரே­ராவின் மேற்­படி கருத்­துக்கள் எதிர்­கால சந்­த­தி­யையும் இந்த போதை மாபி­யாக்கள் விட்டு வைக்­க­வில்லை என்­பதைத் தெளி­வாக நிரூ­பிப்­ப­தாக உள்­ளன.

இந் நிலை­யில்தான், பாட­சா­லை­களை மையப்­ப­டுத்தி போதைப் பொருள் விற்­பனை செய்யும் வலை­ய­மைப்பை முறி­ய­டிக்கும் வகையில் அர­சாங்கம் நாட­ளா­விய ரீதியில் உள்ள சுமார் 10,150 பாட­சா­லை­களில் சோதனை நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக கல்­வி­ய­மைச்சர் தெரி­வித்­துள்ளார். முதற்­கட்­ட­மாக கொழும்பில் உள்ள 144 பாட­சா­லை­களில் இந்த சோதனை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பாட­சா­லை­களில் உள்ள உண­வ­கங்கள், மாண­வர்­களை ஏற்றிச் செல்லும் வாக­னங்கள் உட்­பட பல இடங்கள் பொலி­சா­ரி­னாலும் கல்வி அதி­கா­ரி­க­ளாலும் சோத­னைக்­குட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். எனினும் கல்­வி­ய­மைச்சின் இந்த வேலைத்­திட்டம் எந்­த­ளவு தூரம் வெற்­றி­ய­ளிக்கும் என்­பது கேள்­விக்­கு­ரி­யதே.

அர­சாங்கம் அண்­மையில் 5 கிரா­முக்கு அதி­க­மான ஐஸ் போதைப் பொருளை வைத்­தி­ருப்­ப­வர்­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்கும் வகையில் சட்­டத்தைத் திருத்­தி­யுள்­ளது. இது வர­வேற்­கத்­தக்­கது என்ற போதிலும் கிலோ கணக்கில் போதைப் பொருட்­களை விற்­பனை செய்­ப­வர்கள் கூட பொலி­சாரின் உத­வி­யுடன் சட்­டத்­தி­ட­மி­ருந்து தப்­பித்து விடு­கின்­ற­மையே இந்த நாட்டின் சாபக்­கே­டாகும்.

அது­மாத்­தி­ர­மன்றி, கைப்­பற்­றப்­பட்டு நீதி­மன்­றத்தின் பொறுப்பில் வைக்­கப்­படும் போதைப் பொருட்­களைக் கூட அதற்குப் பொறுப்­பான பொலிசார் மீண்டும் சந்­தைக்கு விடு­வித்து பணம் சம்­பா­திப்­ப­தாக சில தினங்­க­ளுக்கு முன்னர் நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக்ச குறிப்­பிட்­டி­ருந்தார். இவ்­வா­றுதான் நாட்டின் நீதித்­து­றையும் பாது­காப்புத் துறையும் உள்­ளது. இவ்­வா­றி­ருக்­கும்­போது இந்த ‘போதை தீவி­ர­வா­தத்­துக்கு’ எதிராக போராடுவது எந்தளவு சாத்தியம்? மக்கள் எவ்வாறு இந்த அரகலயவில் தைரியமாக களமிறங்குவார்கள்?

எனவேதான் முதலில் போதைப் பொருள் விற்பனை வலையமைப்புகளுக்கு உதவி ஒத்தாசையாக இருக்கின்ற, அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குகின்ற சகலரும் பொலிஸ் சேவையிலிருந்து உடனடியாக களைபிடுங்கப்பட வேண்டும். இந்த புதிய தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு இதய சுத்தியுடனான வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும். இன்றேல், இலங்கை எனும் இந்த சிறிய தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது போய்விடும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.