பல்லின சமூகங்களின் ஒற்றுமையை சீர்குலைத்த சிலர் இன்று முஸ்லிம் சமூக ஐக்கியத்தைக் கூறுபோட முயற்சிக்கின்றனர்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர்
(ராபி சிஹாப்தீன்)
சமூகங்களைக் குழப்புவதற்கும் பிரித்து விடுவதற்கும் அன்று பல முயற்சிகளை முன்னெடுத்த சில சக்திகள் இன்று முஸ்லிம் சமூகத்தினுள் பிரவேசித்து பிரிவினையை தூண்டி ஊக்குவித்து வளர்ப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இது குறித்து முஸ்லிம்கள் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்பட வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர் தெரிவித்தார்.
தேசிய சூறா சபையின் நான்காவது பொதுச்சபை கூட்டத்தில் விஷேட பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சுதந்திரத்திற்கு பின்னர் இந்நாட்டில் சாந்தியையும் சமாதானத்தையும் நாம் தேடிக் கொண்டிருக்கிறோம். அதனை இற்றைவரையும் காண முடியவில்லை.
பராக்கிரமபாகு மன்னரின் ஆட்சிக்காலத்தில் பராக்கிரம சமுத்திரத்தைக் கட்டுவதற்கு அன்றைய முஸ்லிம்கள் பொருளாதார ரீதியில் உதவியுள்ளதாக சிங்கள சமூக வரலாற்று பேராசிரியர்கள் எழுதியுள்ளனர். அன்றிலிருந்தே இந்தத் தேசத்திற்கு முஸ்லிம்கள் தேசப்பற்றுடன் உதவியுள்ளனர். முஸ்லிம்கள் இந்நாட்டுக்கும் அதன் இறைமைக்கும் எதிராக ஒருபோதும் செயற்பட்டவர்கள் அல்லர்.
ஆனால் 1962 இல் முன்னெடுக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதி தோல்வியுற்றது. இது கத்தோலிக்க சதி முயற்சி என்றும் கூறப்படுகிறது. அதேபோன்று 1971, 1989 இல் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த முன்னணியினர் ஆயுத ரீதியில் இம்முயற்சியை முன்னெடுத்தனர். இந்துக்களையும், கத்தோலிக்கர்களையும் கொண்டிருந்த புலிகள் இயக்கத்தினரும் ஆயுத ரீதியில் நாட்டை பிரிக்க முற்பட்டனர்.
இருந்த போதிலும் இந்நாட்டு முஸ்லிம்கள் ஒரு போதும் நாட்டின் இறைமைக்கு குறி வைக்கவில்லை. இந்நாட்டு முஸ்லிம்களின் தேசப்பற்று ஏனைய சமூகங்களை விடவும் முன்னிலையில் உள்ளது என்பதை இந்நாட்டு மக்கள் மறக்கலாகாது. இருந்தும் கூட இந்நாட்டில் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களாவர். குறிப்பாக 1990 இல் காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 103 பேர் ஒரே இரவில் படுகொலை செய்யப்பட்டனர்.
ஆனாலும் சுதந்திரத்தின் பின்னர் இந்நாடு கண்ட முதலாவது இன மோதல், 1956 இல் சிங்கள – தமிழ் சமூகங்களுக்கிடையில் இடம்பெற்றது. அதன்பின்னர் 1958 இலும் மற்றுமொரு தமிழ் – சிங்கள மோதல் நாடெங்கிலும் பரவியது. அச்சமயம் மாளிகாவத்தையில் நாம் வசித்துக் கொண்டிருந்தோம். அன்று எங்களது வீட்டிலும் இரண்டு தமிழ் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கும் மேலாக நாம் பாதுகாப்பு அளித்தோம். சில சிங்கள குடும்பங்களும் கூட இவ்வாறு தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு அளித்ததை நாம் அன்று கண்டோம்.
5000 வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட இந்து மற்றும் பௌத்த கலாசாரங்களும் 2000 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட கத்தோலிக்க கலாசாரங்களும் ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட முஸ்லிம் கலாசாரமும் இந்நாட்டில் காணப்படுகிறது. இருந்த போதிலும் இந்நாட்டில் மக்கள் சமாதானமாக வாழ்வதற்கு அவை எவ்வாறான பங்களிப்புக்களை நல்கியுள்ளன என்ற கேள்வியும் எழவே செய்கிறது.
1979 ஜூலை 24 ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டம் (பி.ரி.ஏ) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது வடக்கைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட சட்டமான போதிலும், அது பயங்கரவாதத்தை ஒழிக்க உதவவில்லை. வடக்கில் பயங்கரவாதம் வளர்ச்சி பெற உதவிய இச்சட்டத்திற்கு பதிலாக தமிழ் மக்களின் தலைவர்களுடன் அன்றைய ஆட்சியாளர்கள் கலந்துரையாடி பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டிருந்தால், 1983 ஜூலை 24 ஆம் திகதி பாரிய ஜூலைக் கலவரம் ஏற்பட்டிருக்காது.
இக்கலவரம் தான் முப்பது வருட கால யுத்தத்தின் ஆரம்பமாக அமைந்தது. அன்று ஆரம்பித்த யுத்தத்தின் விளைவாக இந்நாட்டின் பொருளாதாரமும் டொலர்களும் ஆயுதக் கொள்வனவுக்காக செலவிடப்பட்டன. அமெரிக்கா, ரஷ்யா, ஜேர்மனி, பிரான்ஸ், இஸ்ரேல், சீனா போன்ற நாடுகளின் வளர்ச்சிக்கே, இந்நாடு யுத்தத்திற்கு செலவிட்ட நிதியும் சொத்துக்களும் உதவின.
யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னர் அதற்கு வழிவகை செய்யும் வகையில் அமைந்திருந்த விடயங்களுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் அன்றே தீர்வு காணப்பட்டிருந்தால் இந்நாடு இன்று பிச்சைத்தட்டுடன் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. அத்தோடு கடந்த மூன்று வருட காலப்பகுதியில் நாட்டை ஆட்சி செய்தவர்களின் தவறானதும் பிழையானதுமான நடவடிக்கைகளால் தோற்றம் பெற்ற வங்குரோத்து நிலையும் தான் இந்நாட்டு மக்கள் என்றுமே எண்ணிப் பார்த்திராத உணவுப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வழிவகுத்திருக்கிறது.
ஜூலைக் கலவரத்தின் பின்னர் 1984 இல் சர்வகட்சி மாநாடும் 1985 இல் அரசியல் கட்சிகள் மாநாடும் நடாத்தப்பட்டன. இருந்தும் அவை காலம் கடந்த ஞானமாகவே அமைந்திருந்தன.
தற்போது இந்நாட்டில் 60 அல்லது 70 இலட்சத்துக்குட்பட்ட மக்கள் இரு வேளை உண்ணாமல் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அண்மையில் நாட்டைவிட்டுத் தப்பியோடிய நிலையில் வியட்நாம் கடலில் தந்தளித்த 303 இலங்கையரை ஜப்பானிய கப்பலொன்று பாதுகாப்பாக மீட்டெடுத்து வியட்நாமில் தங்க வைத்துள்ளதைக் கேள்வியுற்றிருப்பீர்கள். அங்கு தங்கியுள்ள இந்த இலங்கையர்கள், ‘தங்களை எங்காவது அனுப்புங்கள். இலங்கைக்கு மட்டும் அனுப்ப வேண்டாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். இது நமது நாட்டுக்கு வந்திருக்கும் கேடு. எங்களை அறிந்திராத ஒரு நாட்டில் எங்களது மானம் கப்பலேறுகிறது. ஒரு காலகட்டத்தில் லெபனான், லிபியா, சிரியா போன்ற நாடுகளது பிரஜைகள் தான் இவ்வாறு குறிப்பிட்டதை நாம் அறிந்திருந்தோம். ஆனால் இப்போது எமது பிரஜைகளே இவ்வாறு கூற ஆரம்பித்திருப்பது பெரும் கவலைக்குரிய நிலைமையாகும்.
கடந்த சில வருடங்களாக எந்தவித நீதி நியாயங்களோ, ஆதாரங்களோ இன்றி முஸ்லிம்களுக்கு எதிராகப் பல போலிக் குற்றச்சாட்டுக்கள் முன்னெடுக்கப்பட்டன. அவற்றில் அபாயா விவகாரம், ஹலால் பிரச்சினை, மத்ரஸா விவகாரம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறிப்பிடத்தக்கன. இப்போதும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. இந்நிலையில் நமது கடமை என்ன? என நாம் சிந்திக்க வேண்டும்.
கடந்த காலங்களில் பல காத்திரமான முயற்சிகளை தேசிய சூறா சபை முன்னெடுத்துள்ளது. அதனால் தற்போதுள்ள பிரச்சினைகளை சரியாக அடையாளப்படுத்தி செயற்பட வேண்டிய தேவை காணப்படுகிறது. தேசிய சூறா சபை சமூகங்களை ஒன்று சேர்ப்பதற்கு ஏற்கனவே பல முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.
ஆனாலும் சமூகங்களைக் குழப்புவதற்கும் பிரித்து விடுவதற்கும் அன்று பல முயற்சிகளை முன்னெடுத்த சில சக்திகள் இன்று முஸ்லிம் சமூகத்தினுள் பிரவேசித்து பிரிவினையைத் தூண்டி ஊக்குவித்து வளர்ப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளன. இது குறித்து முஸ்லிம்கள் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்படுவது அவசியம். எவருக்கும் பட்டப் பெயர் சூட்ட இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஆனால் சூபி, தவ்ஹீத்வாதி என்றெல்லாம் பட்டப் பெயர்கள் கூறி நாம் அழைக்கின்றோம்.
அல் குர்ஆன் எங்களை ‘முஸ்லிம்கள்’, ‘ நம்பிக்கையாளர்கள்’ என்று மாத்திரமே அழைக்கின்றது. முஸ்லிம் சமூகம் சூபிக்கள் முதல் தௌஹீத்வாதிகள் வரையானோரை உள்ளடக்கிய ஐக்கிய சமூகமாகும். அதனால் முஸ்லிம்களை ஒவ்வொரு பெயர்களிலும் அடையாளங்களிலும் பிரித்தாள எவருக்கும் இடமளிக்க முடியாது. முஸ்லிம்கள் கருத்து வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தாமல் தம் ஐக்கியத்தைப் பேணிப் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். இவ்வேலைத்திட்டத்தை ஏனைய அமைப்புக்களுடன் இணைந்து தேசிய சூறா சபை முன்னெடுக்க வேண்டும். இதன் நிமித்தம் நீண்டகால வேலைத்திட்டங்களை வகுத்து, அமுலாக்கவும் வேண்டும்.
2019 ஏப்ரல் தாக்குதலை சாட்டாக வைத்து அநியாயமாக சிறை வைக்கப்பட்டிருக்கும் பல சிறைக்கைதிகள் மற்றும் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள், முஸ்லிம் விவாக விகாரத்து சட்டம், வடக்கு கிழக்கு இணைப்பு எனப் பல பிரச்சினைகள் இப்போதும் முக்கிய பேசுபொருளாகவே உள்ளன. ஆட்சியாளர்கள் இவற்றைத் தவறான முறையில் கையாளக்கூடாது.
கடந்த திங்களன்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்திற்கு முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்ட திருத்த யோசனை கொண்டு வரப்பட்டுள்ளது. காதி நீதிமன்ற முறையை ஒழித்து ‘கொன்சிலியேட்டர்’ என்றழைக்கும் சட்டத் திருத்தத்திற்கான முயற்சி நடைபெற்றது. இதன்படி கொன்சிலியேட்டர் முறையில் இருந்து மாவட்ட நீதிமன்றத்திற்கு விவாக விவகாரத்துக்காக முஸ்லிம்கள் செல்ல வேண்டிவரும். இத்திருத்தப் பிரேரணையைத் தற்போதைய நீதியமைச்சர் கொண்டு வந்துள்ளார். அதற்கு சுற்றாடல் அமைச்சர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதனால் இவ்விடயத்தில் தலையிட்ட ஜனாதிபதி இத்திருத்த யோசனையைப் பிற்போட்டுள்ளார்.
இது விடயத்தில் முஸ்லிம் சமூகம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்நாட்டில் காதி நீதிமன்ற முறைமை சுமார் 900 வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. அதனால் இந்த காதி நீதிமன்ற முறைமை அழிக்கப்படலாகாது. அது பேணிப் பாதுகாக்கப்படுவதோடு வலுப்படுத்தப்படவும் வேண்டும். அதுவே நாட்டின் பாரம்பரிய மரபுரிமைகளை மதித்து கௌரவிக்கும் செயற்பாடாக அமையும்.
நீதியமைச்சு பதவியை ஏற்கனவே வகித்த தற்போதைய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மாவட்ட நீதிமன்றங்களில் 20, 25 வருடங்கள் வழக்குகள் இழுபடுவதாகக் குறிப்பிட்டிருக்கின்றார். அப்படியிருக்கையில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தை மாவட்ட நீதிமன்றத்திற்கு ஏன் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். காதி நீதிமன்றத்திற்கு செல்பவர்களுக்கு செலவுகள் ஏற்படுவதில்லை. சட்டத்தரணிகள் தேவைப்படாது. ஆனால் மாவட்ட நீதிமன்றத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் சட்டத்தரணிகளுக்காக பெருமளவில் செலவிட வேண்டும். அத்தோடு தீர்வைப் பெற்றுக்கொள்ளவும் பல வருடங்கள் காத்திருக்க வேண்டும். இது முஸ்லிம்களைப் புதிய நெருக்கடிகளுக்குள் தள்ளிவிடவே வழிவகுக்கும்.
தற்போதைய காதி நீதிமன்ற முறைமையில் பிரச்சினைகள் இருக்கலாம். அவற்றை உரிய அணுகுமுறையினைக் கையாண்டு சீரமைக்க முடியும். ஆனால் இன்று காதியாருக்கு வழங்கப்படும் மாத சம்பளம் 15000 ரூபா என அறிய முடிகிறது. அவர்களது சம்பளமும் அந்தஸ்தும் அதிகரிக்கப்பட வேண்டும். தற்போதைய முறைமையின் கீழ் ஒரு விவாகரத்திற்கு காதியிடம் தீர்வு கிடைக்கப்பெறாவிட்டால் காதிகள் சபையிடம் தீர்வு பெறலாம். அங்கும் தீர்வு கிடைக்காது போனால் மேன்முறையீடு செய்யவும் அதற்கு மேல் உச்ச நீதிமன்றத்திற்கும் செல்ல முடியும். அரசாங்கத்திற்கு தவறான யோசனைகள் வழங்கப்ப டுகின்றன. இவ் விடயங்களில் நல்ல தீர்வுகளைப் பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம்.– Vidivelli