(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘பெண் காதிநீதிபதிகளை நியமிப்பதற்கான அனுமதி வழங்கப்பட முடியாது. அவ்வாறு நியமிப்பது எமது மார்க்க வழிகாட்டலுக்கு முரணானது. அத்தோடு பலதார மணம் எமது சட்டத்திலிருந்து நீக்கப்படக் கூடாது’ எனும் கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றினை ‘ஸ்ட்ரெந்தன் எம்.எம்.டீ.ஏ’ அமைப்பு நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளது.
குறிப்பிட்ட கோரிக்கைகள் அடங்கிய மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘பலதார மணத்திற்கு மார்க்க அறிஞர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக நிபந்தனைகளின் கீழ் அனுமதி வழங்கலாம்.
பெண் காதிகளை நியமித்தல் என்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத ஒரு விடயம். இது பெண்களுக்கு எதிரான ஒரு பாரபட்சம் எனக் கொள்ளக்கூடாது.
திருமணம் செய்வதற்கான ஆகக் குறைந்த வயதெல்லையாக 18 வயதை நிர்ணயிக்கின்றபோது விஷேட சந்தர்ப்பங்களில் பயன்படுத்தக்கூடியவாறான விதிவிலக்கு வாசகம் ஒன்று கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும். விதிவிலக்கு வாசகம் என்பது இளவயதில் பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடு அல்ல. மாறாக விசேட சந்தர்ப்பங்களில் 18 வயதுக்கு முன்னர் திருமணம் செய்து வைக்கவேண்டிய அவசியம் ஏற்படுகின்றபோது மாத்திரம் காதியின் அ-னுமதியைப் பெற்று திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடாகும்.
திருமணத்தில் மணமகளின் சம்மதம் பெறப்படுவதற்கான பொறிமுறையாக உள்வாங்கப்படலாம். ஆனால் அது ‘வொலி’ யின் சம்மதம் என்ற அவசியத்தை இல்லாமலாக்கக்கூடாது.
வழக்காற்று திருமணங்கள் சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட நிக்காஹ்வை சட்டம் வலிதற்ற திருமணம் எனக் கூறுவது தவறு. மேலும் சட்டம் அவ்வாறு கூறுமானால் அதனால் பாதிக்கப்படப்போவது பெண்களும், அத்திருமணத்தில் பிறக்கும் குழந்தைகளுமே.
காதிநீதிமன்றம் என்ற சொல்லாடல் சட்டத்திலிருந்து நீக்கப்பட முடியாது. இது இலங்கை முஸ்லிம்களுடைய ஒரு நூற்றாண்டுகால அடையாளமாகும்.
காதிநீதிமன்றத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள், அந்த நீதிமன்ற முறைமையினை மேம்படுத்துவதைக்கருத்திற் கொண்டு சுட்டிக்காட்டப்படவேண்டுமே ஒழிய, அக்குறைபாடுகளைக் காரணம் காட்டி நீதிமன்றங்களின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டு தரவிறக்கம் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது.
நீதியமைச்சருக்கு இவ்விவகாரத்தில் ஆலோசனை வழங்குவதற்கென அமைக்கப்பட்டு அக்குழுவினால் தயாரிக்கப்பட்ட திருத்த சிபாரிசுகள் அடங்கிய அறிக்கை நீதியமைச்சரினால் நிராகரிக்கப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli