கடந்த காலங்களில் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக பதிவுக்கட்டணம் செலுத்தி தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ள விண்ணப்பதாரிகள் தங்களது பதிவுக்கட்டணமான 25 ஆயிரம் ரூபாவை முஸ்லிம் சமய பண்பாட்டலுவலகள் திணைக்களத்துக்கு நேரில் விஜயம் செய்யாமலே பெற்றுக்கொள்ள முடியுமென அரச ஹஜ்குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் தெரிவித்தார்.
திணைக்களத்தில் பதிவு செய்து கொண்டும் இதுவரை ஹஜ் வாய்ப்பு கிடைக்காத விண்ணப்பதாரிகள் தங்கள் பதிவுக்கட்டணத்தை மீளப் பெற்றுக்கொள்ளலாம் என திணைக்களம் அறிவித்ததையடுத்து அதிகமானோர் இதில் ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
4800 விண்ணப்பதாரிகளில் சுமார் 500 பேர் இதுவரை பதிவுக்கட்டணத்தை மீளப்பெற்றுக்கொண்டுள்ளதாகவும் நவம்பர் மாதத்தில் சுமார் 250 பேர் பதிவுக் கட்டணத்தை மீளப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
திணைக்களத்துக்கு நேரில் வருகை தராது பதிவுக்கட்டணத்தை மீளப்பெற்றுக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரிகள் தங்களது கடவுச்சீட்டின் பிரதி, பதிவுக்கட்டணம் செலுத்திய ரசீது, விலாசம் மற்றும் வங்கி கணக்கிலக்கம் என்பனவற்றை பதிவுத் தபால் மூலம் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும். அதனுடன் திணைக்களத்தின் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இணைத்து அனுப்ப வேண்டும்.
திணைக்களம் ஆவணங்களைப் பரிசீலித்த பின்பு விண்ணப்பதாரியின் வங்கிக் கணக்கிற்கு பதிவுக்கட்டணத்தை அனுப்பி வைக்கும்.
விண்ணப்பதாரியின் பெயரில் வங்கி கணக்கிலக்கம் இல்லையேல், வேறு நபரின் பெயருக்கு குறிப்பிட்ட பதிவுக்கட்டணம் அனுப்பி வைக்கப்பட வேண்டுமெனின் அது தொடர்பில் விண்ணப்பதாரி சத்தியக்கடதாசியொன்றும் அனுப்பப்படவேண்டுமெனவும் அவர் கூறினார். -Vidivelli