சிறுபான்மைக்கு ரணில் என்ன கைமாறு செய்யப் போகிறார்?

0 898

இலங்கை அரசியல் வரலாற்றில் கரும்புள்ளிகள் படிந்த மோசமான நாட்களாக கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி முதல் டிசம்பர் 12 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை கணிக்க வேண்டியிருக்கிறது. இலங்கை அரசியலில் என்றுமில்லாதவாறு அரசியல் அதிகாரத்திலுள்ளவரால் அரசியலமைப்பு மீறப்பட்டமையே இதற்கான பிரதான காரணமாகும். எனினும் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை காரணமாக நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு புத்துயிரளிக்கப்பட்டிருக்கின்றமை ஆறுதல் தருவதாகும்.

இதற்கப்பால், ஜனாதிபதியின் இந்த திடீர் அரசியல் நடவடிக்கை காரணமாக நேரடியாக பாதிக்கப்பட்ட தரப்பான ஐக்கிய தேசியக் கட்சி தாம் இழந்த அதிகாரத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்காக போராடியது. எனினும் தாம் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதாகவே அக்கட்சி குறிப்பிட்டது. ஜனாதிபதியின்  ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக தனது முழுமையாக பலத்தை பிரயோகித்தது. இதன்மூலம் அக் கட்சி மேலும் பலமடைந்தது. ஐக்கிய தேசியக் கட்சியை தலைமையாகக் கொண்ட ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஜாதிக ஹெல உறுமய என்பனவும் சோரம்போகாது ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டத்தில் உறுதியாக இருந்தன. இவற்றுக்கு அப்பால் எதிர்க்கட்சியில் இருந்த மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தனித்தனியே தமது கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருந்தனர். மேலதிகமாக சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள் உள்ளிட்டோரும் ஜனநாயத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தை வீரியமாக முன்னெடுத்து தமது பங்களிப்பை நல்கியிருந்தனர்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 தேர்தலில் மஹிந்த ஆட்சியை வீழ்த்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை விட இந்த ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான போராட்டம் சக்திவாய்ந்ததாக அமைந்திருந்தது என்றும் குறிப்பிடுவது தவறல்ல.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஐ.தே.க.வுக்கு இருக்கின்ற நிலையில் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் அமர்த்தியமை முதற்கொண்டு பாராளுமன்றத்தை கலைத்தமை வரையிலான ஜனநாயக விரோத செயற்பாடுகளை 19 ஆம் திருத்தச் சட்டம் கட்டுப்படுத்தியிருக்கிறது.

ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக கடந்த நவம்பர் மாதம் உயர் நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பிரதம நீதியரசர் தலைமையிலான 7 பேர் கொண்ட நீதியரசர்களினால் ஜனாதிபதியின் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி சட்டவிரோதமானது என்ற தீர்ப்பு கடந்த வியாழக்கிழமை வெளியானது.

குறித்த தீர்ப்பானது நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றியாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்தார். எனினும் ஐ.தே.க. பிரதமர் பதவிக்காகவும் தேர்தலை பிற்போடுவதற்காகவுமே நீதிமன்றை நாடியதாக முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் ஆற்றிய விசேட உரையின் போது குறிப்பிட்டிருந்தார்.

எது எப்படியோ, தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் முழுமையாக தம்மை அர்ப்பணித்துள்ளமை வரலாற்றில் பதியப்பட வேண்டியதாகும்.  ஜனநாயகத்தை மீறிய தரப்பினரிடம் பணத்துக்காக, பதவிக்காக சோரம்போகவில்லை. இது இந்த நாட்டுக்கு சிறுபான்மையினர் வழங்கிய தேசியப் பங்களிப்புமாகும்.

இவ்வாறானதொரு நிலையில் தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பினூடாக தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு பாடுபட வேண்டிய முழுமையான பொறுப்பு பிரதமரிடம் இருக்கிறது. புதிய அரசியலமைப்பை இன்னும் இருக்கும் ஒன்றரை வருடத்திற்குள் கொண்டுவந்து அதனூடாக நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொள்ள வழியமைக்க வேண்டும்.

அத்தோடு, முஸ்லிம் மக்கள் கடந்த மஹிந்த ஆட்சியிலும் சரி நல்லாட்சியிலும் சரி பல்வேறுபட்ட துன்பங்களுக்காளாகியதுடன் சட்டம் ஒழுங்கு சரியாக நிலைநாட்டப்படாமையினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சூழலும் தொடர்ந்தன. இன்றும் ஆங்காகங்கே திடீர் திடீரென முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தீயில் கருகிச் சாம்பராகின்றன. இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.  முஸ்லிம் மக்களும் தேசத்தின் மீது நேசம்கொண்ட தேசிய பிரஜைகள் என்ற அடிப்படையில் அவர்களது பாதுகாப்பையும் உரிமைகளையும் பெற்றுக்கொடுக்க ரணில் அர்ப்பணிப்புடன் செயற்பட  வேண்டும். கடந்த கால யுத்தம் மற்றும் வன்செயல்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சரியான முறையில் இழப்பீடுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும். அத்தோடு இனிவரும் காலங்களில் இன, மத ரீதியிலான அசாதாரண சூழ்நிலைகள் ஏற்படாத வகையில் பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக வழிமைக்க வேண்டியது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னுள்ள பணியாகும். இதனை அவர் உணர்ந்து செயற்படுவார் என நம்புகிறோம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.