(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உள்ளூராட்சி மன்றங்களின் வட்டாரங்கள் இனப்பரம்பல், நிலத்தோற்றம் மற்றும் பொது வசதிகளை கருத்திற் கொண்டு புதிதாக எல்லை நிர்ணயத்துக்கு உட்படுத்தப்படும். தேசிய எல்லை நிர்ணயக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்கும் எல்லை நிர்ணயப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேசிய எல்லை நிர்ணயக்குழு எதிர்பார்த்துள்ளது என எல்லை நிர்ணயக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான கே. தவலிங்கம் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
அவர் எல்லை நிர்ணயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில் ‘எல்லை நிர்ணயப்பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பொது மக்களின் ஆலோசனைகளும் கோரப்பட்டுள்ளது. இம்மாதம் 25 ஆம் திகதிக்கு முன் மக்கள் தங்களது ஆலோசனைகளை எழுத்து மூலம் கொழும்பு, நாரஹேன்பிட்டி, நில அளவைத் திணைக்களத்தில் இயங்கி வரும் எல்லை நிர்ணய தலைமைக் காரியாலயத்துக்கு அனுப்பி வைக்க முடியும்.
மாவட்ட ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசாங்க அதிபர்களின் தலைமையில் உபகுழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுக்கள் அந்தந்த மாவட்டங்களின் எல்லை நிர்ணய பணிகளை முன்னெடுக்கும். இக்குழுவில் நில அளவைத்திணைக்களம், புள்ளி விபரத்திணைக்களம், தேர்தல் திணைக்களம், உள்ளூராட்சித் திணைக்களம் என்பவற்றை உள்ளடக்கி அங்கத்துவம் பெற்றுள்ளனர். மாவட்ட குழுக்களின் எல்லை நிர்ணய அறிக்கைகள் தலைமைக்காரியாலயத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த அறிக்கைகள் தலைமைக் காரியாலயத்தில் தேசிய எல்லை நிர்ணய குழுவினால் பரிசீலிக்கப்படும். மாவட்ட குழுக்களின் எல்லை நிர்ணயத்தில் ஏதும் பிரச்சினைகள் இருந்தால் அவை நிவர்த்தி செய்யப்படும்.
உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை 50 வீதத்தால் குறைப்பதற்காகவே எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்படுகிறது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதிக்கு முன்பு எல்லை நிர்ணய அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது.
குடிசன மதிப்பீட்டு திணைக்களம் 2020 ஆம் ஆண்டு மேற்கொண்ட மதிப்பீட்டளவிலான சனத்தொகை தரவுகளை கவனத்திற் கொள்ளுமாறு மாவட்ட எல்லை நிர்ணயக்குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக தேசிய எல்லை நிர்ணயக் குழு களவிஜயங்களை மேற்கொள்ளமாட்டாது. அவசியம் ஏற்பட்டால் மாத்திரமே கள விஜயங்களை மேற்கொள்ளும்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை உரிய காலத்தில் நடாத்துவதற்கு உதவும் வகையில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எல்லை நிர்ணயக்குழு தனது பணிகளை நிறைவு செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது என்றார்.- Vidivelli