1,600/8,000 மில்லியன் முஸ்லிம்கள்: பெருமையும் வேதனையும்

0 716

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

“சீவ வசீ­கரம் பெற்ற
இம்­மார்க்­கத்திற் சேர­வ­ரு­பவர்
எத்­தனை கோடி?” – (கவிஞர் அப்துல் காதர் லெப்பை)
உல­கத்தின் சனத்­தொகை எண்­ணா­யிரம் மில்லியனை எட்­டி­விட்­ட­தென சில தினங்­க­ளுக்­குமுன் வெளி­வந்த செய்­திகள் கூறு­கின்­றன. அந்தத் தொகையில் சுமார் ஐந்­தி­லொரு பகு­தி­யினர் முஸ்­லிம்கள் என்­பதும் ஒரு கணிப்­பீடு. இன்­னொரு மதிப்­பீட்டில் உலக சனத்­தொ­கையில் கால்­வா­சி­யினர் முஸ்­லிம்கள் என்றும் கூறப்­ப­டு­கி­றது. இதில் எதை ஏற்றுக் கொண்­டாலும் அந்தத் தொகை கணி­ச­மா­னது என்­பது உண்மை. மத­வா­ரி­யாக நோக்­கும்­போதும் கிறிஸ்­தவ மக்­களே உல­கத்தில் மிகப்­பெ­ரிய தொகை­யினர் என்று புள்ளி விப­ரங்கள் கூறு­கின்­றன. ஆனால் பலரின் பார்­வையில் மதப் பின்­பற்­று­தலை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நோக்­கினால் இஸ்­லா­மி­யரே அந்த இடத்தைப் பிடித்­துள்­ளனர் என்றும் கரு­தப்­ப­டு­கின்­றது. எந்தக் கோணத்­தி­லி­ருந்து நோக்­கி­னாலும் முஸ்­லிம்­களின் இந்தத் தொகை ஒரு பக்­கத்தில் பெரு­மை­யையும் இன்­னொரு பக்­கத்தில் வேத­னை­யையும் அளிக்­கின்­றது என்­ப­தையே இக்­கட்­டுரை தெளி­வு­ப­டுத்த விரும்­பு­கி­றது.

இந்தக் கட்­டு­ரையை எழுதத் தூண்­டி­யது நான் அண்­மையில் படித்­து­மு­டித்த அரே­பி­ய­ரைப்­பற்­றிய ஒரு வர­லாற்று நூல். அதன் விப­ரங்கள் இதோ: Tim Mackintos–Smith, Arabs: A 3,000- Year History of Peoples, Tribes and Empires, Yale University Press, 2019. அரபு மொழியை ஆழமாய் கற்று அரபு மக்­களின் மத்­தி­யிலே வாழும் இவ்­வ­ர­லாற்­றா­சி­ரி­யனின் நூலை இஸ்­லாத்தின் வர­லாற்றைப் படிக்கும் மாண­வர்கள் கட்­டாயம் வாசிக்க வேண்­டு­மென விரும்­பு­கிறேன்.

பெருமை
உலக முஸ்­லிம்­களின் எண்­ணிக்கை பெரு­கு­வதை இக்­கட்­டுரை ஒரு பெரு­மை­யாகக் கரு­த­வில்லை. மனித இனம் பெரு­கும்­போது அதிலோர் அங்­க­மான முஸ்­லிம்­களின் தொகையும் பெரு­கு­வது தவிர்க்­க­டி­யா­தது. ஆனால், நாம­மது முஸ்­லிம்­க­ளெனக் கொண்­டீங்கு வாழ்தல் நன்றோ சொல்லீர்! என்று பாரதி நடையில் கேட்­கும்­போது எண்­ணிக்கை பெரு­கு­வதால் பெருமை இல்லை என்­பது புல­னா­க­வில்­லையா? அது ஒரு புற­மி­ருக்க, பழம்­பெ­ருமை பாடு­வ­தையும் இக்­கட்­டுரை விரும்­ப­வில்லை. அந்தப் பாட­லைத்­தானே முஸ்­லிம்­களின் இன்­றைய மேடை­களில் ஓயாது கேட்­கிறோம். எனினும் அதனை மறக்­க­வேண்டும் என்றும் இங்கு கூறப்­ப­ட­வில்லை. மனிதன் போன பாதையை மறத்­த­லா­காது.
இன்­றைய முஸ்லிம் சந்­ததி படிக்­க­வேண்­டிய பாடங்கள் எத்­த­னையோ அந்தப் பழ­மையில் உண்டு. ஒரே வச­னத்தில் கூறு­வ­தாயின் அன்­றைய முஸ்­லிம்­க­ளி­டையே அறிவுத் தாகம் இல்­லாது இருந்­தி­ருந்தால் இன்­றைய உலகின் நவீ­னத்­துவம் ஒன்றில் உரு­வாகி இருக்­காது அல்­லது காலம் தாழ்த்­தியே உரு­வாகி இருக்கும். அந்த அறிவுத் தாகத்­துக்கு எடுத்­துக்­காட்­டாக பின்­வரும் ஒரே­யொரு சம்­ப­வத்தை மட்டும் பெரு­மை­யுடன் இக்­கட்­டுரை நினை­வூட்ட விரும்­பு­கி­றது.

பத்தாம் நூற்­றாண்டுப் பார­சீ­கத்தின் ஒப்­பற்ற ஆட்­சி­ நி­புணன் அல்-­சாகிப் இப்னு அப்பாத். ஒரு முறை அதிக ஊதி­யத்­துடன் உயர்­ப­த­வி­யொன்று அவரை நாடி வந்­தது. அதனை ஏற்க அவர் மறுத்தார். ஏன் தெரி­யுமா? அந்தப் பத­வியை ஏற்­ப­தானால் வேறோரு பகு­திக்கு இடம்­பெ­யர்ந்து செல்­ல­வேண்டி இருந்­தது. அவ்­வாறு செல்­வ­தானால் தனது சொந்த நூல­கத்­தையும் கொண்­டு­செல்ல வேண்­டியும் இருந்­தது. அந்த நூல்­களைக் காவிச் செல்­வ­தற்கு குறைந்­தது 400 ஒட்­ட­கை­க­ளா­வது தேவைப்­பட்­டதால் அந்தப் பத­வி­யையே அவர் தூக்கி எறிந்தார். (அவ­ரு­டைய நூல்­களுள் அறு­பது ஒட்­ட­கைகள் சுமக்கும் அள­வுக்கு அர­பு­மொ­ழியைப் பற்­றிய நுல்கள் மட்டும் குவிந்­தி­ருந்­ததாம்).

ஆகவே மந்­தை­கள்போல் எண்­ணிக்­கை­யிலே மட்டும் பெருகி யாது பயன்? சிறந்த சிந்­த­னையும் செயற்­றி­றனும் கொண்ட முஸ்­லிம்கள் பெருக வேண்டும். அதி­லேதான் பெரு­மை­யு­முண்டு. இறை­வனின் சகல படைப்­பி­னங்­க­ளையும் பரா­ம­ரிக்­கத்­தானே மனி­தனை இறைவன் படைத்து அம்­ம­னி­த­னுக்குச் சிந்­தித்துச் செயற்­படும் சக்­தி­யையும் கொடுத்து தனது படைப்­பு­களை மனி­த­னிடம் அமா­னி­த­மாக ஒப்­ப­டைத்தான் என்று முஸ்­லிம்­களின் திரு­மறை கூறு­கின்­றது (அல்-­குர்ஆன்: 33:72). இதனை மிகவும் அழ­காக அல்­லாமா இக்பால் தனது ஜாவித் நாமாவில் பின்­வ­ரு­மாறு சித்­த­ரித்­துள்ளார். ஒரு முறை பூமி இறை­வ­னைப்­பார்த்து ‘ஏன் என்னைச் சேறும் சக­தியும் இருளும் பாறை­களும் நிறைந்த ஒன்­றாகப் படைத்­து­விட்டு வானத்­தை ­மட்டும் சந்­தி­ரனும் நட்­சத்­தி­­ரங்­களும் நிறைந்த ஒளி உல­காகப் படைத்தாய்’ என்று முறை­யிட்­டதாம். அதற்கு இறைவன், கொஞ்சம் பொறு, ‘உன் மடியில் இன்னும் ஒன்றைப் படைப்பேன். அது வானத்­தையும் பட்­டுப்போல் கிழித்­துக்­கொண்டு செல்­லக்­கூ­டிய வல்­ல­மை­யுடன் உன்னை அழ­கு­ப­டுத்­தும்’ என்று கூறிய பின் மனி­தனைப் படைத்­தானாம். இன்­றைய மனித இனம் அதிலும் முஸ்­லிம்கள் இறை­வனின் அமா­னி­தத்­தையும் இப்­பு­வி­யையும் கட்­டிக்­காத்­துள்­ளார்­களா என்­பதே அவர்­களை எதிர் நோக்கும் ஒரே கேள்வி. இந்தக் கேள்­விக்கு விடை தேடும்­போ­துதான் வேதனை எழு­கின்­றது. அந்த வேத­னை­யைப்­பற்றி இனி அல­சுவோம்.

வேத­னைகள்
எகிப்து நாட்டின் ஷாம் அல்-ஷேக் நக­ரிலே ஐக்­கிய நாடுகள் சபையின் கால­நிலை பற்­றிய மகா­நா­டொன்று கடந்த இரு ­வா­ரங்­க­ளாக நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கி­றது. அதில் முஸ்லிம் தலை­வர்­களும் பங்கு கொண்­டுள்­ளனர். இந்த மகா­நாட்டின் அவ­சி­யத்­தைப்­பற்றிக் கூறு­வ­தானால், அது திரு­மறை கூறும் இறைவனின் அமா­னி­தத்தை மனிதன் கட்­டிக்­காக்கத் தவ­றி­யதால் ஏற்­பட்ட ஒரு மகா­நா­டென்று வருணிக்­கலாம்.

இயற்­கைக்கு தன்­னைத்­தானே பாது­காத்­துக்­கொள்ளும் சக்தி இயற்­கை­யா­கவே உண்டு. அவ்­வா­றுதான் யுக­யு­க­மாக தன்­னைத்­தானே பாது­காத்­துக்­கொண்டும் அதே சமயம் மனித இனத்­துக்கும் பயன்­பட்டுக் கொண்டும் இயற்கை இயங்­கி­வந்­துள்­ளது. மனித இனமும் அது உரு­வா­கிய காலம் தொடக்கம் நவீன விஞ்­ஞான யுகம் ஆரம்­பிக்­கும்­வரை இயற்­கை­யுடன் ஒன்­றியே வாழ்ந்து வந்­துள்­ளது. ஆனால் விஞ்­ஞான யுகம் ஆரம்­ப­மா­கி­ய­துடன் அந்த ஒற்­று­மையும் சம­நி­லையும் படிப்­ப­டி­யாகச் சீர்­கு­லை­ய­லா­யிற்று. இயற்­கை­யையே தனது சக­பா­டி­யாக அல்­லாமல் ஓர் அடி­மை­யாக மாற்றி, தன்­னினம் மட்டும் உய­ர­வேண்டும் என்ற இறு­மாப்­புடன் மனித இனம் காடு­களை அழித்து, மலை­களை உடைத்து, நதி­களை மறித்து, சமுத்­தி­ரங்­க­ளையும் ஆகா­யத்­தையும் விஞ்­ஞா­னி­களின் விளை­யாட்­டுத்­தி­டல்­க­ளாக்கி, இயற்­கையின் செல்­வங்கள் அனைத்­தையும் சூறை­யாடி அத­னையே நாக­ரீகம் என்றும் நவீன வளர்ச்சி என்றும் கருதிப் புகழ்ந்து வாழ்ந்­ததால், இன்று இயற்­கையின் சீற்­றத்­துக்கு ஆளாகி வரட்சி, வெள்ளம், தீ, பூகம்பம் என்­ற­வாறு மாறி­மாறி இயற்­கையின் அனர்த்­தங்­க­ளுக்குள் சிக்கிச் சீர­ழி­கின்­றது. கண் கெட்­டபின் சூரிய நமஸ்­காரம் என்­ப­துபோல் இப்­போ­துதான் மகா­நா­டு­களைக் கூட்டி என்ன செய்­வ­தென்று மனித இனம் சிந்­திக்கத் தொடங்­கி­யுள்­ளது. இதுவே கடந்த நான்கு அல்­லது ஐந்து நூற்­றாண்­டு­களின் விஞ்­ஞா­ன­யுக வர­லாறு.

அந்த யுகத்­துக்கு வித்­திட்­ட­வர்கள் முஸ்­லிம்கள் என்­பதை ஒரு பெரு­மை­யாகக் கரு­தி­னாலும் அந்த யுகத்தை தொடர்ந்து வழி­ந­டாத்த முஸ்­லிம்கள் தவ­றி­விட்­டார்கள் என்­பதே இன்­றைய வேதனை. இந்தத் தவறு எப்­படி ஏற்பட்டது? அதற்கு விடை­காண வேண்­டு­மானால் பதி­னாலாம் நூற்­றாண்டு தோற்­று­வித்த முஸ்லிம் மாமேதை இப்னு கல்தூன் எழு­திய அல் முகத்­திமா என்ற நூலைப் புரட்­டிப்­பார்க்க வேண்டும். அப்­பா­சி­யர்­களின் அற்­பு­த­மான ஆட்சி மொங்­கோ­லி­யரின் படை­யெ­டுப்பால் அழிந்­த­தோடு தொடங்­கிய வீழ்ச்சி இன்றும் தொடர்­கி­றது. அந்தச் சோக வர­லாற்றை மிகவும் துல்­லி­ய­மாக எடுத்து விளக்­கு­கி­றது இக்­கட்­டு­ரையை எழுதத் தூண்­டிய அரே­பி­ய­ரைப்­பற்­றிய அந்த வர­லாற்று நூல். ஒரே வச­னத்தில் கூறு­வ­தானால் என்று தர்க்­க­ரீ­தி­யான சிந்­த­னா­ வ­ளர்ச்­சிக்குத் தடை­போட்டு சொன்­ன­தையே திருப்பிச் சொல்லும் கிளிப்­பிள்ளைப் பாட­மாக முஸ­லிம்­களின் கல்வி மாறி­யதோ அன்றே உல­கத்தை வழி­ந­டத்­தக்­கூ­டிய வல்­ல­மையை முஸ்லிம்கள் தவ­ற­விட்டு விட்­டார்கள் என்று கூறலாம். அல்-­குர்ஆன் அறி­மு­கப்­ப­டுத்­திய இல்ம் அல்­லது அறி­வுக்கும் உல­மாக்கள் வளர்த்த இல்­முக்கும் இடையே உள்ள வித்­தி­யாசம் இதுதான். அந்த இல்ம் முஸ்­லிம்­களை உலக அரங்கின் முன்­வ­ரி­சையில் வைத்­தது. இந்த இல்ம் அந்த அரங்கின் விளிம்பில் வைத்­துள்­ளது. உல­மாக்கள் வளர்த்த கல்­வியால் வெளி­வந்த அத்­தனை நூல்­களும் அறிவு வளர்ச்­சிக்குத் தடை­யா­கி­விட்­டன என்று இப்னு கல்தூன் ஏமாற்­றத்­துடன் தனது நூலின் ஒரு அதி­கா­ரத்­துக்குத் தலை­யங்கம் இட்­டுள்ளார். அன்று முஸ்­லிம்கள் வழி­காட்­டிகள். இன்று மற்­றவர் வழி­காட்டப் பின்­தொ­டரும் மந்­தைகள். இந்த மந்­தை­களின் பெருக்­கத்தால் என்ன பெரு­மையோ? ஐக்­கிய நாடுகள் நிறு­வ­னத்தின் பாது­காப்புச் சபையில் ஒரு முஸ்லிம் நாட்­டுக்கும் இது­வரை இட­மில்­லாமல் போனது எதனால்? 1,600 மில்லியன் முஸ்­லிம்­க­ளுக்கும் அவர்­களின் ஐம்­பத்­தேழு நாடு­களுள் ஒன்­றுக்­கேனும் அச்­ச­பையில் இட­மில்­லா­தி­ருப்­பது வேதனை இல்­லையா?

கசப்­பான ஓர் உண்மை
1970களின் பிற்­ப­கு­தியில் ஏற்­பட்ட மூன்று மாற்­றங்கள் ஏன் முஸ்­லிம்­களை மற்­ற­வரைப் பின்­பற்றும் மந்­தை­க­ளாக மாற்­றி­யுள்­ளது என்­பதை உணர்த்­து­கின்­றன. முத­லா­வது மாற்றம் எண்­ணெய்­வள முஸ்­லிம் ­நா­டு­களில் ஏற்­பட்ட செல்­வச்­செ­ழிப்பு. இரண்­டா­வது மாற்றம் சீனாவில் ஏற்­பட்ட சந்தைப் பொரு­ளா­தார அடிப்­படை மாற்றம். மூன்­றா­வது இந்­தி­யாவில் ஏற்­பட்ட முத­லா­ளித்­துவப் பொரு­ளா­தார மாற்றம். எண்­ணெய்­வள முஸ்லிம் நாடு­களோ ஆடம்­ப­ரத்தை வளர்­ச்சி­யெ­னக் ­க­ருதி அதி­லேயே ஊறித்­தி­ளைக்க. மற்­றைய இரு நாடு­களும் பொருள் வளமும் படை­ப­லமும் கொண்டு அறி­வா­ல­யங்­களை வளர்த்து பிராந்­திய வல்­ல­ர­சு­க­ளாக வளர்ந்து ஏன் உலக வல்­ல­ர­சு­க­ளா­கவும் மாறத் துடிக்­கின்­றன. உலக அரங்கின் முன் ஆசனங்களில் இந்தியாவும் சீனமும் அமர பின் ஆசனங்களில் முஸ்லிம் நாடுகள் இடம் தேடுகின்றன. இத்தனை பணம் இருந்தும் உலகத்தின் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு விஞ்ஞான ஆய்வுகூடமோ அருஞ்சுவடிச்சாலையோ நூலகமோ எண்ணெய் வள முஸ்லிம் நாடுகளில் இல்லை. இந்த நிலையில் மற்றவர்களைப் பின்தொடராமல் அவர்களுக்கு வழிகாட்டியாக இயங்க முடியுமா?

2076 ஆம் ஆண்டு அமெ­ரிக்கா தனது நான்­கா­வது சுதந்­திர நூற்­றாண்­டுக்குள் காலடி வைக்­கப்­போ­கி­றது. சீனமும் இந்­தி­யாவும் தமது இரண்­டா­வது சந்­தைப்­பொ­ரு­ளா­தா­ர நூற்றாண்டுக்குள் நுழையவிருக்கின்றன. அதே நேரம் முஸ்லிம்கள் தமது 1500ஆவது ஹிஜ்ரி ஆண்டுக்குள் நுழைவர். அந்த வருடத்தில் இந்த நால்வரும் எந்தெந்த நிலையில் உலக அரங்கில் வீற்றிருப்பரோ தெரியாது. ஆனால் முஸ்லிம் நாடுகள் இன்றுள்ள போக்கிலேயே போனால் மற்றைய மூவரின் கைப்பொம்மைகளாக இயங்குவதன்றி சுதந்திரமாக இயங்க முடியாது என்பது மட்டும் உறுதி.
உங்களை நீங்களே மாற்றாதவரை இறையும் உங்களைத் தொடா (குர்ஆன்) – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.