“ஸ்ட்ரெந்தன் எம்.எம்.டீ.ஏ’ அமைப்பின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை
திருத்தங்களுக்கான குழுத் தலைவர்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முன்னாள் நீதியமைச்சர் சட்டத்தரணி அலிசப்ரியினால் நியமிக்கப்பட்ட முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை சிபாரிசு செய்வதற்கான குழு மீதான, ‘ஸ்ட்ரெந்தன் எம்.எம்.டீ.ஏ. ( Strengthen MMDA) அமைப்பின் குற்றச்சாட்டுகளும், குழுவின் பரிந்துரைகள் மீதான அதிருப்தியும் அடிப்படையற்றவை. குழுவின் அறிக்கையை படித்துப்பார்க்காது இந்த அமைப்பு நீதியமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடியிருக்கின்றமை நகைப்புக்குரியதாகும் என முன்னாள் நீதியமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
‘எமது குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை முன்னாள் நீதியமைச்சர் அலிசப்ரிக்கும், தற்போதைய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷவுக்கும் மாத்திரமே கையளிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் என்ன அடங்கியுள்ளது என படித்துப் பார்க்காது ஊகத்தின் பேரில் குழுவையும், குழுவின் பரிந்துரைகளையும் விமர்சிப்பது அடிப்படையற்றதாகும். குறிப்பிட்ட அமைப்பு முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் தொடர்பில் அரசியல் சுயநலம் அல்லது வேறு காரணங்களின் நிமித்தமே விமர்சிக்கிறது. எதிர்ப்பு வெளியிடுகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த இரு பெண்கள், ஐக்கிய இராச்சியத்திலிருந்து கொண்டு இங்குள்ள அமைப்பின் உறுப்பினர்களை வழிநடாத்துகிறார்கள். இதன் பின்னணியில் நிகழ்ச்சி நிரல் ஒன்று இருப்பதாகத் தெரிகிறது என்றும் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.
‘ஸ்ட்ரெந்தன் எம்.எம்.டீ.ஏ’ அமைப்பு கடந்த வாரம் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷவைச் சந்தித்து முன்னாள் நீதியமைச்சர் அலிசப்ரியினால் நியமிக்கப்பட்ட முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை சிபாரிசு செய்வதற்கான குழுவின் அறிக்கை தொடர்பாக விமர்சித்தது. அதிருப்தி வெளியிட்டது. அத்தோடு நாட்டில் நீண்ட காலமாக நல்லிணக்கத்தோடு வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும் அடையாளங்களையும் இல்லாமலாக்கும் வகையில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளது.
குழுவின் பரிந்துரைகள் பெரும்பான்மையான முஸ்லிம்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கவில்லை. பெரும்பான்மையான முஸ்லிம்களின் அதிருப்தியை பெற்றுக் கொண்டுள்ளது. அதனால் குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படக்கூடாது. அறிக்கை நிராகரிக்கப்பட வேண்டும். குறித்த திருத்தங்களுக்கான ஆலோசனைக்குழு கலைக்கப்பட வேண்டுமெனவும் ஸ்ட்ரெந்தன் எம்.எம்.டீ.ஏ அமைப்பு நீதியமைச்சரைக் கோரியுள்ளது.
திருத்தங்களுக்கான ஆலோசனைக் குழுவின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் மேலும் தெரிவிக்கையில், ‘எனது தலைமையில் குழு நியமிக்கப்பட்ட போது இவ்விவகாரம் என்ன நிலைமையில் இருந்தது என்பதை ஸ்ட்ரெந்தன் எம்.எம்.டீ.ஏ அமைப்பு அறிந்திருக்க வேண்டும். அப்போது கோத்தாபய ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருந்தார். ஞானசார தேரரின் தலைமையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியும் நியமிக்கப்பட்டிருந்தது. பலதார மணம் இல்லாமற் செய்யப்படுவதற்கும், காதிக்கோடு முறைமை ஒழிக்கப்படுவதற்கும் அப்போது அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. பெண்களின் திருமண வயதெல்லை 18ஆக அதிகரிப்பதற்கும், திருமணப் பதிவில் மணப்பெண்ணின் கையொப்பம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
2021இல் ஜூலை மாதம் நீதியமைச்சரிடமிருந்து எமது குழுவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அக்கடிதத்தில் காதிநீதிமன்ற முறைமை மற்றும் பலதார மணம் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டுள்ளதால் ஏனைய திருத்தங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குமாறு அக்கடிதத்தில் கோரப்பட்டிருந்தது.
என்றாலும் எமது குழு காதிநீதிமன்ற முறைமை ஒழிக்கப்படக்கூடாது. மேம்படுத்தப்பட வேண்டும். காதிநீதிபதிகளின் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டும். அவர்களது தகைமைகள் அதிகரிக்கப்பட வேண்டும். மஜிஸ்திரேட் தரத்தில் காதி நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்ற பரிந்து ரைகளை நாம் முன்வைத்தோம்.
இதேவேளை அமைச்சரவையின் தீர்மானம் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால் காதிநீதிபதிகள் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு அவர்கள் கொன்சிலியேட்டர் (Conciliator) ஆக நியமிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளோம். இவ்வாறு காதிநீதிமன்ற முறைமையை இல்லாமற் செய்யாது மாற்று பெயரில் இம்முறைமையைத் தொடரும் வகையிலே எமது சிபாரிசு அமைந்துள்ளது.
இவ்வாறான நிலையில் குறிப்பிட்ட அமைப்பு அறிக்கையை வாசிக்காமல் எங்களை எவ்வாறு விமர்சிக்க முடியும். எமது குழுவின் அறிக்கையை அவர்கள் பெற்றுக் கொள்வதில் பிரச்சினைகள் இருந்தால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் (RTI) அவர்கள் அறிக்கையைக் கோர முடியும். இதை விடுத்து குறிப்பிட்ட அமைப்பினர் சுயநலன் கருதி ஏதோவோர் நிகழ்ச்சி நிரலின் கீழ் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின் திருத்தங்கள் தொடர்பில் விமர்சிப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
தசாப்தகாலமாக இத்திருத்தங்கள் விமர்சிக்கப்பட்டு, சவாலுக்குட்படுத்தப்படுவது சமூகத்துக்குப் பாதகமாகவே அமையும்’ என்றார்.- Vidivelli