ஞானசாரரின் செயலணிக்காக 43 இலட்சம் அரச நிதி செலவீடு
‘விடிவெள்ளி’யின் தகவல் கோரிக்கைக்கு ஜனாதிபதி செயலகம் பதில்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் நியமிக்கப்பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணிக்காக 43 இலட்சம் ரூபா அரச நிதி செலவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இந்த செயலணிக்காக செலவிடப்பட்ட நிதி தொடர்பில் விடிவெள்ளி பத்திரிகை சமர்ப்பித்த தகவலறியும் விண்ணப்பித்திற்கமைவாகவே இந்த விபரம் தெரியவந்துள்ளது.
2021.10.26 ஆம் திகதி முதல் 2022.06.17 ஆம் திகதி வரை இச் செயலணி இயங்கியதாகவும் இக் காலப்பகுதியில் இச் செயலணிக்காக அரசாங்கத்தின் திரண்ட நிதியத்திலிருந்து 43 இலட்சத்து 22 ஆயிரத்து 589 ரூபா 44 சதம் செலவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல் அலுவலர் எஸ்.கே. சேனாதீரவினால் வழங்கப்பட்ட பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே இச் செயலணியின் கால எல்லை முடிவடைவதற்குள் அதன் உறுப்பினர்களான பேராசிரியர் தயானந்த பண்டா, விரிவுரையாளர் மொகமட் இந்திகாப் மற்றும் அசீஸ் நிசார்தீன் ஆகியோர் பதவி விலகியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த செயலணியின் இறுதி அறிக்கை இதுவரை வெளியிடப்படாதுள்ள நிலையில், குறித்த அறிக்கையின் பிரதி ஒன்றை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கப் பெறவில்லை. “இறுதி அறிக்கையில் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் முன்வைத்த கருத்துக்களும் யோசனைகளும் உள்ளடங்குகின்றன. இந்த அறிக்கையில் உள்ள தகவல்களை வெளிப்படுத்துவதன் மூலம் நாட்டின் பாதுகாப்பிற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படலாமென்பதால் இந்த அறிக்கையின் பிரதிகளை வழங்குவதை தகவல் கோரிக்கைக்கான சட்டத்தின் 5 (1) அ, 5 (1) எ மற்றும் 5(1) (ஆ), i பிரிவுகளின் ஏற்பாடுகளின் கீழ் நிராகரிக்கிறேன்” என குறித்த அதிகாரியினால் பதில் வழங்கப்பட்டுள்ளது.
அறிக்கையை வழங்காமை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் பெயர் குறிக்கப்பட்ட அதிகாரிக்கு ‘விடிவெள்ளி’ பத்திரிகையினால் மேன்முறையீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli