ஐக்கிய தேசிய முன்னணி எதிர்வரும் 26 ஆம் திகதி இந்த ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதோடு 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் பாராளுமன்றத்துக்கு கையளிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எதிர்வரும் ஜனவரி மாதத்துக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடுக்கான அனுமதி கிடைக்கப்பெறாவிட்டால் நிதியினை செலவு செய்யவோ நிர்வகிக்கவோ முடியாது. ஆகையால் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற சேவைப்பிரிவுகளுக்கு அது பாரிய பிரச்சினையாக உருவெடுக்கும். அரச அதிகாரிகளின் கொடுப்பனவுகளிலும் பிரச்சினை ஏற்படும். ஆகவே எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் அமைச்சரவையை தெரிவுசெய்தவுடன் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம்.
எதிர்வரும் 26 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்போது ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி இந்த வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்படும். இதேவேளை இவ்வருடம் முடிவடைவதற்குள் இடைக்கால வரவு செலவுத்திட்டம் நடைமுறைக்கும் வரும் வகையில் 2 நாள் அல்லது 3 நாட்களில் விவாதங்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த இடைக்கால வரவு செலவுத்திட்டம் டிசம்பர் நிறைவுக்கு வருமுன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் விரைவில் ஜனவரி மாதத்தின் ஆரம்ப செயற்பாடுகளுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை. .அதேபோன்று அரசாங்கத்தால் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவேண்டிய அனைத்து கொடுப்பனவுகளையும் ஜனவரிமுதல் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
அதன் பின்னர் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் 2019 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். பெப்ரவரி மாதம் அரைபகுதியை அடையும் போது வரவு செலவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடியதாகவும் அமையும். ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டால், நிலையியல் கட்டளையின் பிரகாரம் வரவு செலவு திட்டம் மீதான விவாதங்களின் பின்னர் இரண்டாம் முறை வாசிப்புக்காக 7 நாட்கள் ஒதுக்கப்படும். அதன்பின்னர் 19 நாள் குழு கலந்துரையாடல்கள் இடம்பெறும். மொத்தமாக 25 நாள் கலந்தரையாடல்களின் பின்னர் பெப்ரவரி இடைப்பகுதியாகும் போது வரவு செலவுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
-Vidivelli