(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பிரபல சட்டமேதை ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கண்டி மாவட்டத்தின் மடவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சட்டத்தரணி மர்ஹும் எஸ்.எம்.முஸ்தபாவின் மகனாவார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை 15 ஆம் திகதி முதல் எதிர்வரும் 5 வருட காலத்துக்கு இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவர் ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக 2002 முதல் 2005 வரை கடமையாற்றியுள்ளார். மேலும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக 2000 ஆம் ஆண்டு முதல் 2003 வரை பதவி வகித்துள்ளார். கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றுள்ள இவர் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் ஒரு பிரிவுக்கு தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இவர் முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி, பைசர் முஸ்தபாவின் தந்தையாவார். பைசர் முஸ்தபா ஜனாதிபதியின் சட்ட ஆலோசகராக 2015 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பாயிஸ் முஸ்தபாவின் மகளும் ஓர் சட்டத்தரணியாவார். இவரது குடும்பம் நான்-கு தலைமுறை யாக சட்டத்தரணிகளைக் கொண்டுள்ளது.- Vidivelli