(ஏ.ஆர்.ஏ.பரீல்)
மஹரகமயில் அமைந்துள்ள கபூரியா அரபுக்கல்லூரியில், மாவட்ட நீதிமன்றின் இடைக்கால உத்தரவினையடுத்து கல்லூரி நம்பிக்கை பொறுப்பாளர்களால் எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கைகள் காரணமாக கல்லூரி மாணவர்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரியின் அதிபராக இதுவரை காலம் பதவியில் இருந்தவர்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்ட நிலையில் நம்பிக்கை பொறுப்பாளர்களினால் புதிய அதிபர் ஒருவரும், உப அதிபர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்லூரி நம்பிக்கை பொறுப்பாளர் சபையினால் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட இடைக்கால உத்தரவின் பேரிலே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கபூரியா அரபுக்கல்லூரியில் அடிப்படைவாதம் போதிக்கப்படுகிறது, தடை செய்யப்பட்ட இஸ்லாமிய நூல்கள் போதிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தே கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கொழும்பு மாவட்ட நீதிமன்றம் கடந்த 4 ஆம் திகதி 14 நாட்களுக்கு இந்த இடைக்கால உத்தரவினை வழங்கியுள்ளதாக சட்டத்தரணி சபீனா மஹ்ரூப் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
கபூரியா அரபுக்கல்லூரியில் உண்மையில் தடைசெய்யப்பட்டுள்ள இஸ்லாமிய நூல்கள் மாணவர்களுக்குப் போதிக்கப்படவில்லை என்றும் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள விசாரணையின்போது இதனை வாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நீதிமன்றின் குறிப்பிட்ட உத்தரவு நேற்று முன்தினம் கல்லூரி அதிபருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று புதிய முகாமைத்துவக் குழு என்று கூறிக்கொள்ளும் ஏழுபேர் நம்பிக்கைப் பொறுப்பாளர் ஒருவருடன் சென்று கல்லூரி அதிபரைச் சந்தித்து இன்று முதல் இவர் தான் புதிய அதிபர் என்று ஒருவரையும், உப அதிபர் என்று ஒருவரையும் அறிமுகப்படுத்தியுள்ளதுடன் புதிய அதிபருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பழைய அதிபரைக் கோரியுள்ளனர்.
மாணவர்களின் கணினி அறையை பூட்டியுள்ளனர். அதிபர் காரியாலயத்துக்கு இரு பூட்டுக்கள் இடப்பட்டு வெவ்வேறு சாவிகள் பழைய அதிபருக்கும் புதிய அதிபருக்கும் வழங்கப்பட்டுள்ளன. பழைய அதிபர் தொடர்ந்தும் கல்லூரியிலே தங்கியிருக்கிறார். அவர் விலக்கப்படவில்லை என கபூரியா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஐ.எல்.டில்சாட் மொஹமட் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் கல்லூரி மாணவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். தற்போது கல்லூரியில் சுமார் 60 மாணவர்கள் கல்வி கற்கின்றமை குறிப்பிடத்தக்கது.– Vidivelli