ஜனாதிபதியின் ஏற்றுமதிப் பொருளாதாரம்: செல்லரித்த அத்திவாரத்தில் அலங்கார மாளிகையா?

0 532

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

 

பிராந்­தியப் பொரு­ளா­தார ராட்­சதன்

ஜனா­தி­பதி விக்­கி­ர­ம­சிங்ஹ இலங்­கையை 2048ஆம் ஆண்­ட­ளவில், அதா­வது சுதந்­திரம் கிடைத்த நூறா­வது வரு­டத்தில், முதலாம் உலக நாடு­களுள் ஒன்­றா­கவும் அதன் பொரு­ளா­தா­ரத்தை ஏற்­று­ம­தியால் வளர்ச்­சி­பெற்ற ஒரு பிராந்­திய ராட்­ச­த­னா­கவும் மாற்­று­வ­தற்குத் திட்­ட­மிட்­டுள்ளார், உண்­மையைக் கூறு­வ­தானால் திட்­ட­மிட்­டுள்ளார் என்­ப­தை­விட கனவு கண்­டுள்ளார் என்­பதே பொருத்­த­மாகும். எனினும் விவா­தத்­துக்­காக அதனை ஒரு திட்டம் என்­ப­தையே ஏற்­றுக்­கொண்டு இன்­னு­மொரு உண்­மை­யையும் உண­ர­வேண்­டி­யுள்­ளது. அவ­ரு­டைய திட்டம் வெற்­றி­ய­டைந்­தாலோ தோல்­வி­ய­டைந்­தாலோ அதனை கொண்­டா­டு­வ­தற்கோ அது­பற்றி வருந்­து­தற்கோ 2048ல் அவ­ரு­டைய வயது 99ஐ எட்டி இருக்கும். அவர் நீடூழி காலம் சுக­தே­கி­யாக வாழ­வேண்­டு­மென வாழ்த்­தி­யபின் அவ­ரு­டைய பொரு­ளா­தாரத் திட்டம் செல்­ல­ரித்த அத்­தி­வா­ரத்­தி­ரத்தில் அமையும் ஓர் அலங்­கார மாளிகை என்­ப­தையே இக்­கட்­டுரை சுட்­டிக்­காட்ட விரும்­பு­கி­றது. அதற்­கு­ரிய கார­ணத்தை கீழே விப­ரிப்போம்.

யதார்த்­தத்தின் அவலம்

இலங்­கையின் இன்­றைய பொரு­ளா­தார நிலை­மையின் யதார்த்தம் என்ன? கடன் சுமை, திறை­சே­ரியின் வங்­கு­ரோத்து, பொருள் பற்­றாக்­குறை, தொழில்­வாய்ப்­பின்மை, வரு­மான வீழ்ச்சி, உண­வுப்­பஞ்சம், விலை­வாசி ஏற்றம் என்­ற­வாறு நாட்டின் பொரு­ளா­தாரப் பிணி­களை அடுக்­கிக்­கொண்டே செல்­லலாம். அவற்றால் பாதிக்­கப்­பட்­டுள்ள இலட்­சக்­க­ணக்­கான மக்­களின் மன­வேக்­காடும் ஏமாற்­றங்­களும் ஆட்­சி­யா­ள­ரின்மேல் வெறுப்பை ஏற்­ப­டுத்தி ஆங்­காங்கே அமைதிப் போராட்­டங்­க­ளா­கவும் சில சம­யங்­களில் வன்­முறை கலந்­த­ன­வா­கவும்   வெடிக்­கின்­றன. கடந்த பங்­குனி மாதம் காலி முகத்­தி­டலில் ஆரம்­ப­மான இளை­ஞர்­களின் அமை­திப்­போ­ராட்டம்  சர்­வ­தேசக் கவ­னத்­தையும் ஈர்த்து நாட்டு மக்­களின் ஆதர­வையும் பெற்­ற­தென்­பதை யாரும் மறுக்க முடி­யாது.  அது ஏற்­ப­டுத்­திய அர­சியல் மாற்­றங்­களுள் ஒன்­றுதான் இன்­றைய ஜனா­தி­ப­தியின் ஆட்சி. எனினும் இயற்கை வளங்­க­ளையும் இனிய மக்­க­ளையும் ஏற்­ற­மிகு கலா­சாரப் பொக்­கி­ஷங்­ளையும் கொண்டு மிளிர்ந்து பிறர் மதிக்க விளங்­கிய இந்தத் தீவு இன்று ஒரு பிச்­சைக்­கார நாடெ­னவும் தோல்­வி­ய­டைந்த அரசு எனவும் உல­கத்தால் மட்­டி­டப்­படும் அவ­லத்தை வெறும் வார்த்­தை­க­ளாலும் சுலோ­கங்­க­ளாலும் மறைக்க முடி­யாது. அதுதான் இன்­றைய யதார்த்தம்.

ஜனா­தி­ப­தியின் மாற்­று­வழி 

பொரு­ளா­தாரப் பிணி­களை அகற்­றாமல் இந்த நாட்­டுக்குச் சுபீட்­ச­மில்லை என்­பது யாவரும் அறிந்த ஒன்று. ஆனால் அவற்றை அகற்ற வேண்­டு­மாயின் அதற்கு உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­வது அன்­னி­யச் ­செ­லாவணி. அத­னைப்­பெற்று மக்­களின் அன்­றாடக் கஷ்­டங்­க­ளுக்கு ஒரு தீர்வை ஏற்­ப­டுத்தி ஓர­ள­வுக்­கேனும் அமை­தி­காண முடி­யு­மானால் அதனைத் தொடர்ந்து தனது கன­வுத்­திட்­டத்தை நிறை­வேற்­றலாம் என்­பதே இன்­றைய ஜனா­தி­ப­தியின் மாற்­று­வழி. அது எவ்­வ­ளவு கர­டு­மு­ர­டான பாதை என்­பதை இக்­கட்­டுரை தொடர்ந்து விளக்கும்.

முன்­னைய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்­சவும் செழிப்பும் மகோன்­ன­தமும் கொண்ட ஒரு நாட்டைக் கட்டி எழுப்­பு­வ­தா­கக்­கூறி அதற்­கொரு மாற்­று­வ­ழி­யையும் கையாள்­வதாக அறி­வித்து இறு­தியில் அந்த வழி அவ­ரையே நாட்டை விட்­டோடச் செய்த சோக காவி­யத்தை எதிர்­காலக் கவி­ஞ­னொ­ருவன் பாடட்டும். ஆனால் அதே­போன்ற இன்­னொரு சோக காவி­யத்­துக்கு இன்­றைய ஜனா­தி­பதி ஆளா­கக்­கூ­டாது என்ற எண்­ணத்­துடன் அவ­ரு­டைய அலங்­கார மாளி­கையின் உறு­தி­யற்ற அடித்­த­ளத்தை இங்கே சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது. அதற்கு முன்னர், மக்கள் பிணி­களைத் தீர்ப்­ப­தற்கும் மாளிகை கட்­டு­வ­தற்கும் தேவை­யான பணத்தைப் பெறு­வ­தற்கு ஜனா­தி­பதி கையாண்­டுள்ள வழி­யி­னைப்­பற்றி விளங்­குதல் வேண்டும்.

இது­வரை பட்ட கடன் சுமை ஒரு புற­மி­ருக்க இனியும் கடன் படு­வ­தன்றி அவ­ருக்கு வேறு வழி தெரி­ய­வில்லை. அதனால் ஓர் அவ­சரக் கடனைப் பெறு­வ­தற்கு சர்­வ­தேச நாணய நிதியின் கால­டியில் வீழ்­வ­தை­விட ஜனா­தி­ப­திக்கு வேறு­வழி கிடை­யாது. சர்­வ­தேச நாணய நிதியோ முத­லா­ளித்­துவப் பொரு­ளா­தா­ரங்­களின் பாது­கா­வலன். அதன் நோக்­கமும் கட­மையும் உள்­நாட்டு வரவு செல­வு­க­ளிலும் சர்­வ­தேசக் கொடுக்கல் வாங்­கல்­க­ளிலும் மிகை காண்­பது ஒரு­பு­ற­மி­ருக்க சம­நி­லை­யேனும் காண­மு­டி­யாமல் இரண்­டிலும் துண்­டு­வீழ்ச்சி கண்டு தத்­த­ளிக்கும் இலங்கை போன்ற நாடு­க­ளுக்கு அவ­சர நிதி­யு­தவி வழங்கி ஒரு­வி­த­மான நிலைப்­பாட்டை உரு­வாக்கி அதி­லி­ருந்து அவற்றின் பொரு­ளா­தா­ரங்­களை தொடர்ந்து வளர்ச்­சிப்­பா­தையில் அடி­யெ­டுத்­து­வைக்க வழி­வ­குப்­ப­தாகும். ஆனால் அதற்கு அடிப்­படைத் தேவை­யாக சில கட்­டுப்­பா­டு­களை அந்த நிதி விதித்து அவற்றை நிறை­வேற்­றினால் ஒழிய அதன் உதவி கிடைக்­காது என்­ப­தையும் வலி­யு­றுத்தும். இலங்­கைக்கும் அவ்­வா­றான கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­டுள்­ளன. அவற்றுள் சாதா­ரண பிர­ஜை­களைப் பாதிக்கும் ஒன்­றை­மட்டும் விளக்­கி­யபின் ஜனா­தி­ப­தியின் மாளி­கையின் அடித்­த­ளத்­தைப்­பற்றி விமர்­சிப்போம்.

வரவு செலவுக் கட்­டுப்­பாடு

அரசின் உள்­நாட்டு வர­வு­செ­ல­வு­களைச் சீர்­ப­டுத்த வேண்­டு­மாயின் செல­வி­னங்­களைக் குறைத்து வர­வு­களை கூட்ட வேண்டும். இங்­கேதான் ஜனா­தி­ப­தியின் மாற்றுப் பாதையில் மிகப்­பெ­ரிய குழி­யொன்று தெரி­கின்­றது. வர­வினைப் பெருக்க அர­சுக்­குள்ள வழிகள்; இரண்டு. ஒன்று வரி­களை உயர்த்­து­வது, மற்­றது அர­சுக்குச் சொந்­த­மான பொரு­ளா­தார நிறு­வ­னங்­களின் இலா­பத்தைப் பெருக்­கு­வது. இந்த நிறு­வ­னங்கள் எல்­லாமே நட்­டத்தில் ஓடு­வதால் இரண்­டா­வது வழியால் எந்தப் பிர­யோ­ச­னமும் இல்லை. அவற்­றையும் சீர்­செய்ய வேண்­டு­மென்­பது சர்­வ­தேச நாண­ய­நி­தியின் இன்­னொரு கட்­டளை. அதைப்­பற்றிப் பின்னர் ஆராய்வோம். முதலில் வரி­க­ளைப்­பற்­றிய ஜனா­தி­ப­தியின் மாற்­றங்கள் யாவை?

வரி­களும் அவற்றின் வசூலும்

வரிகள் இரண்டு வகைப்­படும். ஒன்று வரு­மான வரி­போன்ற நேர் வரிகள். அவற்றை வரு­மானம் பெறும் நபரோ தனியார் நிறு­வ­னமோ கட்­ட­வேண்டும்.  மற்­றது பொருள்­களின் பெறு­ம­தியில் சுமத்­தப்­படும் நேரில் வரிகள். இரண்­ட­வதின் பளு பொருள்­களை வாங்­கு­வோரின் தலையில் சுமத்­தப்­ப­டு­வதால் அதனை நேரில் வரி­யென அழைப்பர். இரண்­டுமே இப்­போது அதி­க­ரிக்­கப்பட்டுள்­ளன. அவற்றை அதி­க­ரிப்­பதும் இன்­றுள்ள நிலையில் தவிர்க்­க­மு­டி­யாத ஒன்று எனவும் கூறலாம். ஆனால் வரி­களை அதி­க­ரிப்­பது இலகு. அந்த வரிகள் எதிர்­பார்த்த வரு­மா­னத்தை ஈட்­டுமா என்­ப­துதான் கேள்­விக்­குறி. காரணம் வரித்­தி­ணைக்­க­ளத்தின் நிர்­வாக ஊழல்கள். இது ஒரு நீண்­ட­காலச் சீர்­கேடு மட்­டு­மல்ல, ஓர் ஊழல் கலாச்­சா­ரத்தின் தவிர்க்­க­மு­டி­யாத அங்­க­மா­கவும் காணப்­ப­டு­கி­றது. உதா­ர­ண­மாக, ஒரு குறிப்­பிட்ட வரித்­தி­ணைக்­கள அதி­காரி ஒரு பக்­கத்தில் வரி ஆணையை குறிப்­பிட்ட வர்த்­த­க­நி­று­வனம் ஒன்­றுக்கு அனுப்­பி­விட்டு மறு­பக்­கத்தில் அதே அதி­காரி அந்த நிறு­வ­னத்­துக்குச் சென்று வரித்­தொ­கையை எவ்­வாறு குறைப்­ப­தென்ற இர­க­சி­யத்­தையும் ஒரு குறிப்­பிட்ட சன்­மா­னத்­துக்­காகச் சொல்லிக் கொடுத்தால் வரித்­தி­ணைக்­களம் எதிர்­பார்த்த வரித்­தொ­கையை திரட்­டுமா? இவ்­வா­றான ஊழல் நெடுங்­கா­ல­மாக நடை­பெற்­று­வந்­துள்­ளது. அண்­மையில் மத்­திய வங்­கியின் ஆளு­னரும் வரி­செ­லுத்த வேண்­டி­ய­வர்­க­ளுக்கு எந்தச் சலு­கையும் வழங்­கக்­கூ­டா­தென எச்­ச­ரித்­துள்­ளமை திணைக்­க­ளத்­தையே எச்­ச­ரித்­த­துபோல் இல்­லையா?

ஏற்­று­ம­தியின் அடிப்­ப­டையில் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை மாற்­றுவேன் என்று திட­சங்­கற்பம் பூண்­டுள்ள ஜனா­தி­பதி ஏற்­று­ம­தி­செய்யும் தனியார் துறைக்கு வரு­மான வரியை அதி­க­ரித்தால் அது அத்­து­றையின் ஊக்­கத்­துக்குத் தடை­யா­காதா? ஏற்­க­னவே சில நிறு­வ­னங்கள் வரி குறைந்த நாடு­களை நோக்கி தமது தொழிலை நகர்த்­த முயற்­சிகள் எடுப்­ப­தா­கவும் பத்­தி­ரிகைச் செய்­திகள் கூறு­கின்­றன. எனவே ஒரு பக்­கத்தில் நிர்­வாக ஊழல் வரி ஈட்டும் வரு­மா­னத்தை குறைக்க மறு­பக்­கத்தில் ஏற்­று­மதி செய்யும் தொழில்கள் ஊக்­க­மி­ழந்து ஜனா­தி­ப­தியின் ஏற்­று­மதிப் பொரு­ளா­தார அலங்­கார மாளி­கைக்கு அடிக்கல் வைக்­கவும் தயங்கும் என்­பது தெளி­வா­கின்­றது.

நட்­டத்தில் இயங்கும் அரச நிறு­வ­னங்கள் 

சமூ­க­நலன் கருதி உள்­நாட்டுப் போக்­கு­வ­ரத்து, நீர் விநி­யோகம், மின்­சார சேவை போன்ற சில அத்­தி­யா­வ­சிய துறை­களை தனியார் துறைக்கு விடாமல் அர­சாங்­கமே பொறுப்­பேற்று நடத்­து­வதிற் பல நன்­மை­க­ளுண்டு. ஆனால் அவையும் ஊழல் நிறைந்த நிறு­வ­னங்­க­ளாக இயங்­கினால் நட்டம் அடை­வதைத் தடுக்க முடி­யாது. இலங்கை அரசின் எல்லா பொரு­ளா­தார நிறு­வ­னங்­களின் கதையும் அதுவே. அதைச் சீர்­ப­டுத்­து­மாறு சர்­வ­தேச நாணய நிதி கட்­ட­ளை­யிட்­டுள்­ளது. அதற்கு ஜனா­தி­ப­தியின் பதில் அந்த நிறு­வ­னங்­களை தனியார் துறைக்கு விற்­று­வி­டு­வதே. அதனால் தலை­யிடி தொலைந்­தது என்று ஜனா­தி­பதி ஆறுதல் அடை­யலாம். ஆனால் அதன் பார­தூ­ர­மான விளை­வு­களை மக்கள் அனு­ப­விக்­கும்­போது அந்த விளை­வுகள் ஏற்­ப­டுத்தும் தலை­யிடி ஜனா­தி­ப­தியின் மூளை­யையே பாதித்­து­வி­டலாம். தனி­யார்­து­றைக்கு விற்­று­வி­டு­வதால் போட்­டியை ஏற்­ப­டுத்தி அதன்­மூலம் அந்­நி­று­வ­னங்கள் வழங்கும் சேவையின் கட்­ட­ணங்­களை குறைக்­கலாம் என்­பது தனி­யார்­ம­யப்­ப­டுத்­தலை ஆத­ரிப்போர் கூறும் ஒரு நியாயம். உதா­ர­ண­மாக, இலங்­கை­யின் விமான சேவையை தனியார் நிறு­வ­ன­மொன்­றுக்கு விற்­று­வி­டு­வ­தாக வைத்­துக்­கொள்வோம். இந்த நிறு­வனம் யாருடன் போட்டி போடப் போகின்­றது? இன்­னு­மொரு விமான சேவை இந்த நாட்டில் உண்டா போட்டி போடு­வ­தற்கு? அது­வன்றி, வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளு­டன்தான் அந்தப் போட்டி இருக்கும் என்று கூறினால் அந்தப் போட்டி இப்­போதும் உண்­டு­தானே. இலங்கை விமான சேவையின் உண்­மை­யான பிரச்­சினை போட்­டி­யல்ல, அதில் நிலவும் ஊழல். அதனை ஒழிக்க முயன்றால் அது அர­சியல் பிரச்­சி­னை­யாக மாறும் என்­பதால் ஜனா­தி­பதி அதனை விற்­ப­தற்குத் தயா­ரா­கிறார். இதே நிலைதான் இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்­திலும் தொலை­பேசித் தொடர்பு நிறு­வ­னத்­திலும் காணப்­ப­டு­கின்­றது. ஏன் இந்த ஊழல் கலா­சாரம்?

செல்­ல­ரித்த அத்­தி­வாரம்

இலங்­கையின் இன்­றைய அவ­லத்­துக்கும் ஜனா­தி­ப­தியின் ஏற்­று­மதிப் பொரு­ளா­தார அலங்­கார மாளிகை தடை­யா­வ­தற்கும் கார­ணமாய் அமைந்­துள்­ளது நாட்டின் அர­சியல் அத்­தி­வா­ரத்தின் பல­வீனம். அந்த அத்­தி­வா­ரத்தை உடைத்­தெ­றிந்­து­விட்டுப் புதி­ய­தொரு அத்­தி­வா­ரத்தை அமைக்­காமல் எந்த ஒரு பொரு­ளா­தாரத் திட்­டமும் இந்த நாட்­டுக்குச் சுபீட்சம் தர­மாட்­டாது. அந்த அத்­தி­வா­ரத்­தைப்­பற்றி இனிச் சில வார்த்­தைகள்.

சுதந்­திரம் கிடைத்த காலம் தொட்டு இன்­று­வரை இலங்­கையின் அர­சியல், பொரு­ளா­தார, கலா­சார, சமூக அமைப்­பு­களின் நோக்­கையும் போக்­கையும் நிர்­ண­யிப்­பது சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம். ஆயிரம் வரு­டங்­க­ளுக்கும் மேலாகப் பல்­லின மக்­க­ளையும் பல்­லின கலா­சா­ரத்­தையும் மொழி­க­ளையும் மதங்­க­ளையும் தன் மடியில் வைத்துத் தாலாட்டி வளர்த்த இலங்கைத் தாயின் வயிற்­றிலே இறு­தி­யாகப் பிறந்த துஷ்டக் குழந்­தையே இப்­பே­ரி­ன­வாதம். அது வளர்ந்து ஆளாகி இலங்­கையர் என்னும் குடும்­பத்­தையே சீர்­கு­லைத்­துள்­ளது. அந்தச் சீர்­கு­லைவின் லட்­ச­ணத்­தையே இன்­றைய பொரு­ளா­தாரப் பிணி­களும் நிர்­வாக ஊழல்­களும் படம்­பி­டித்துக் காட்­டு­கின்­றன.

பேரி­ன­வாதம் அமைத்த அர­சியல் அத்­தி­வா­ரத்தில் இலங்கை இலங்­கை­ய­ருக்கே என்ற இரும்புக் கம்பி அகற்­றப்­பட்டு சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கு மட்­டுமே என்ற மரப்­ப­லகை மாட்­டப்­பட்­டதால் அந்த அத்­தி­வா­ரத்தை செல்­ல­ரிக்கத் தொடங்­கி­யுள்­ளது. இதனை இன்­றைய ஜனா­தி­பதி உட்­பட எந்­த­வொரு பெரும்­பான்மை இன அர­சியல் தலை­வனும் துணி­வுடன் சுட்­டிக்­காட்டி அந்த அத்­தி­வா­ரத்­தையே உடைத்­தெ­றியத் தைரி­ய­மற்­ற­வ­னாக இருக்­கிறான். மாறாக, அதே அத்­தி­வா­ரத்­தி­லேயே விக்­கி­ர­ம­சிங்­ஹவும் தனது அலங்­கார மாளி­கையை நிர்­மா­ணிக்கத் துணிந்­துள்ளார். அது கன­வா­கவே முடியும் என்­பதில் சந்­தே­கமே இல்லை.

பேரி­ன­வா­தமும் தேயிலை ஏற்­று­ம­தியும்

பேரி­ன­வாதம் எப்­படி பொரு­ளா­தா­ரத்தை பாதித்­தது என்­ப­தற்கு தேயிலை ஏற்­று­ம­தியின் வர­லாறு ஒரு சிறந்த எடுத்­துக்­காட்டு. சுதந்­திரம் கிடைக்­கும்­போது இலங்கைத் தேயி­லைக்கு உலக சந்­தையில் ஒரு தனி மதிப்பு இருந்­தது. ஆனால் அந்த மதிப்பை பின்­வந்த அர­சாங்­கங்­களால் காப்­பாற்ற முடி­ய­வில்லை. அதற்குக் காரணம் தேயி­லையின் தரமோ உலக சந்­தையின் மதிப்புக் குறைவோ அல்ல. கைத்­தொழில் மய­மாக்கம், ஏற்­று­மதிப் பன்­மு­கப்­ப­டுத்தல் என்ற போர்­வை­களில் தேயிலை உற்பத்தியை ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அரசாங்கங்கள் அணுகியதனாலேயே. அதற்கான உண்மையான காரணம் தேயிலைத் தோட்டங்கள் தமிழர்களின் தொழிற்படையினால் முற்றுகையிடப் பட்டிருப்பதே. சிங்கள பௌத்த பேரினவாதிகள் தமிழருக்கெதிரான தமது எதிர்ப்பை தேயிலை உற்பத்தியில் காட்டத் தொடங்கினர். இது தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப்பிழை என்பது போல் இல்லையா?

அதே மாதிரியான பேரினவாதமே இப்போது முஸ்லிம்களின் வியாபார வளர்ச்சிக்கும் எதிரியாகச் செயற்படுகின்றது. இந்த நிலையில் பொருளாதாரம் எவ்வாறு வளர்ச்சி அடையும்?

எல்லாவற்றுக்கும் மேலாக பேரினவாதமே ஊழலையும் வளர்க்கின்றது என்பதை இனியும் மறைக்க முடியாது. பேரினவாதத்தை ஆத­ரிக்கும் தலை­வர்­களை ஆட்­சியில் அமர்த்தி அவர்­களின் அத்­து­மீ­றல்­க­ளையும் தனது மௌனத்தால் ஆத­ரிக்கும் இந்தத் தத்­து­வமே ராஜ­பக்ச ஆட்­சி­யி­னரை நாட்­டையே கொள்­ளை­ய­டிக்கச் செய்­தது. ஊழல்­க­ளைப்­பற்றி அடிக்­கடி அங்­க­லாய்க்கும் அர­சியல் தலை­வர்கள் ஏன் அதன் அடித்­த­ளமாய் அமைந்­துள்ள பேரி­ன­வா­தத்தை கண்­டிக்­கி­றார்கள் இல்லை? உண்மை என்­ன­வெனில் அந்தத் தத்­து­வத்தை நிரா­க­ரிப்­ப­தற்கு பெரும்­பான்மை இனத்­தி­லுள்ள எந்தத் தலை­வ­னுக்கும், விக்­கி­ர­ம­சிங்ஹ உட்­பட, துணி­வில்லை. காரணம், அதனை எதிர்த்தால் ஆட்­சியில் அமர முடி­யாது. இந்த துர்ப்­பாக்­கிய நிலை நீடிக்­கும்­வரை இந்த நாட்­டுக்கு விமோ­ச­னமே இல்லை. ஜனா­தி­ப­தியின் அலங்கார மாளிகையும் மணல் வீடாகவே மாறும் என்பது உறுதி.  – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.