சவூதி அரேபியா துனிசியாவுக்கு 830 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்குவதாக வாக்குறுதியளித்துள்ளதாக துனிசியப் பிரதமர் யூசெப் சாஹெட் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவுக்கான விஜயத்தின் பின்னர் கடந்த சனிக்கிழமை ஊடகவியாலளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த சாஹெட் மேற்படி தகவலை வெளியிட்டார்.
வரவு செலவுத் திட்டத்திற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியினை எதிர்பார்ப்பதாகவும், வெளிநாட்டு வர்த்தக நிதியுதவியாக 230 மில்லியன் அமெரிக்க டொலரும், நிதித் திட்டங்களுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்த பிரதமர் அதன் விபரங்களை வெளியிடவில்லை.
சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோக்ஜி கொல்லப்பட்டதையடுத்து கடந்த மாதம் துனிசிய மக்கள் சவூதி அரேபிய பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் துனிசியாவுக்கு விஜயம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
நூற்றுக்கணக்கான துனிசிய மக்கள் வீதிகளில் இறங்கி சவூதி அரேபிய பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் துனிசியாவுக்கு விஜயம் செய்யக் கூடாது எனக் கோரியதோடு யெமன் யுத்தத்தில் சவூதி அரேபியாவின் வகிபாகத்தையும் கண்டித்தனர்.
எனினும் பொருளாதாரம் மற்றும் நிதி, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் தீவிரவாதம் மற்றும் பங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான பாதுகாப்பு மற்றும் இராணுவ உதவிகளை மேம்படுத்துவதற்காக இளவரசர் துனிசிய ஜனாதிபதி பீஜி கெய்ட் எசெப்ஸியை சந்தித்தார் என ஜனாதிபதி அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வரவு செலவுத்திட்ட துண்டு விழும் தொகையினை சமாளிப்பதற்கும், தளர்வடைந்துவரும் வெளிநாட்டு நாணயக் கையிருப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் சர்வதேசத் தலைவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்கும், பொதுச் செலவு மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்வது போன்ற மறுசீரமைப்பு கோரிக்கைகளை எதிர்கொள்வது போன்ற விடயங்களில் துனிசியா திணறிவருகின்றது.
வேலையில்லா திண்டாட்டம், வறுமை மற்றும் வரலாறு காணாத பணவீக்கம் என்பவற்றினால் ஏற்பட்ட ஆத்திரம் காரணமாக உருவான எழுச்சியினால் 2011 ஆம் ஆண்டு சர்வாதிகாரி ஸைனுல் ஆப்தீன் பென் அலி பென் அலி பதவி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடைந்தது.
-Vidivelli