இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்
பாராளுமன்ற உறுப்பினர்
இலங்கை வரலாற்றில் பாரிய சமூக, சமயப் பணிகளை முன்னெடுத்த குடும்பத்தின் மற்றுமொரு தலைமுறை சார்ந்த நவாஸ் ஏ கபூரின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. கொழும்பு மத்திய தேர்தல் தொகுதியின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினரான மர்ஹூம் பழீல் ஏ கபூரின் மகனான இவர் இலங்கையில் பெரும் நன்கொடைகளை வழங்கிய வர்த்தகரான மர்ஹூம் என்.டி.எச்.அப்துல் கபூரின் பேரனுமாவார்.புகழ் பெற்ற கபூர் கட்டிடம், கபூர் & சன்ஸ் வர்த்தக நிறுவனங்கள் இக்குடும்பத்தவர்களையே சாரும். நேர்மையாக, சமூக மார்க்கப் பற்றுடனும், சமூக விருப்பார்வத்துடனும் வாழ்ந்த இவர் தனது 96 ஆவது வயதில் கடந்த 28 ஆம் திகதி வபாத்தானார்.
மஹரகம கபூரியா அரபுக்கல்லூரியை தமது சொந்த நிதிப் பங்களிப்பில் ஸ்தாபித்த இக்குடும்பத்தின் நான்காம் தலைமுறையினர் அதன் இருப்பை கேள்விக்குட்படுத்தும் சமகாலத்தில், இவரின் மறைவு ஆழ்ந்த சிந்தனைக்குரியது. சமூகம் பற்றிய கவலையுடனும் மார்க்கம் பற்றிய பிரக்ஞையுடனும் வாழ்ந்த ஒருவர். அவர் மறைந்தாலும் அவருக்காகச் செய்கின்ற கைமாறு, அவரது பணிகளை ஞாபகப்படுத்துவதும். அவருடைய சேவைகளை எடுத்துச் சொல்வதும், எதிர்கால சந்ததியினருக்கு அதனைச் சரியாகச் சொல்வதும் தான் மிகப் பொருத்தமானது என நினைக்கின்றேன்.
சமூக நலனுக்காக மிகவும் தூர நோக்கோடு 1967 இல் அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் இளைஞர் பிரிவு தோற்றம் பெற்றது. பின்னர் அது அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி என்ற பெயரில் இயங்கியது.1978 ஆம் ஆண்டு எனது தந்தையான மர்ஹூம் எம்.ஏ. பாக்கீர் மாக்காரின் அழைப்பின் பேரில் முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தில் இணைந்த அவர்,1980 இல் நாடளாவிய ரீதியில் பங்குபற்றிய பிரதிநிதிகளைக் கொண்டு கொழும்பு ரன்முத்து ஹோட்டலில் நடைபெற்ற பிரமாண்டமான கூட்டத்தின்போது பாக்கீர் மாக்கார் அவர்கள் புதிய அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் தேசிய தலைவராகவும் அல்ஹாஜ் ஏ.எம். நசீர் பொதுச் செயலாளராகவும், அல்ஹாஜ் நவாஸ் ஏ.கபூர் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டர்கள். தலைவரோடு அவர் நாட்டின் பல பாகங்களுக்கும் பயணம் மேற்கொண்டு அதன் வளர்ச்சிக்கும் சமுதாய மேம்பாட்டிற்கும் அயராது உழைத்தார். நவாஸ் ஏ.கபூர் ஸ்தாபக பொருளாராக கடமையாற்றினாலும் அவரது பங்களிப்பு பரந்த ஒன்றாக அமைந்திருந்தது.
மேலும் குருந்தலாவ சென் தோமஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஆரம்ப தொகுதியின் தலைவராக செயற்பட்டுள்ளார். கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி ஆளுநர் சபை தலைவராக இருந்துள்ளார், மருதானை பள்ளி பரிபாலன சபையின் தலைவராக மரணிக்கும் வரை செயற்பட்டார்.
இவர்களுடைய நிர்வாக காலத்தில் மஹரகம கபூரியா அரபுக்கல்லூரி நிர்வாகம், ஆசிரியர் குழாம் மற்றும் மாணவர்கள் இடையே சுமுகமான தொடர்புகளை பேணியவராவார்.வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தின தொழுகைகளுக்காக கபூரியா சென்று மாணவர்களின் குத்பா உரைகளை செவிமடுத்து திருப்திப்படுவார்.
அலவிய்யா ஸக்கியா குழுவின் முகாமையாளராகவும், வை எம் எம் ஏ அமைப்பின் தலைவராகவும், அகில இலங்கை ஹஜ் குழுவின் தலைவராகவும், டீ.பி.ஜாயா ஞாபகார்த்த நிதியத்தின் தலைவராகவும், அகில இலங்கை மாணிக்கக்கல் மற்றும் ஆபரண சங்கத்தின் தேசியத் தலைவராகவும்,Ceylon Chamber of Commerce இன் தலைவராகவும், இலங்கை மேசைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவராகவும், மூர் விளையாட்டுக் கழகத்தின் தலைவராகவும் என பல்வேறு மட்டங்களில் பல்பக்க சமூக சேவை பரப்பில் தன்னலம் பாராமல் செயற்பட்டுள்ளார். கோட்டைப் பகுதியில் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் அரச தொழிலாளர்களின் நலன் கருதி செத்தம் வீதி பள்ளிவாசலை இன்றுள்ள அளவில் விசாலமாக்கியதில் பெரும் பங்கு இவருக்குண்டு. கடும் சுகயீனமுற்று நடப்பதற்கு முடியாத கட்டம் வரும் வரை ஐநேரத்தொழுகைக்காக கொழும்பு செத்தம் வீதி பள்ளிவாசலுக்கே சென்றார்.
மஹரகம கபூரியா வளாகத்தை அண்டிய பொது விளையாட்டரங்கம், இரத்மலானை கட்புல செவிட்புலனற்றோர் நிலையம் என்பன இவரது நன்கொடைகளே.
எனது தந்தையார் பழைய பாராளுமன்ற கட்டிடத் தொகுதியிலும், சபாநாயகரின் வாசஸ்தலமான மும்தாஜ் மஹாலிலும் ஏற்பாடு செய்த முஸ்லிம் விவகாரம் சம்பந்தப்பட்ட சகல கூட்டங்களிலும் அவரின் பங்கேற்பை நான் சட்டக்கல்லூரி மாணவனாக இருக்கும் போது அவதானித்தமை இன்றும் நினைவில் நிழலாடுகிறது.
மர்ஹூம்களான என்.டி.எச்.அப்துல் கபூர், பழீல் ஏ கபூர் ஆகியோரின் உன்னத சமூக நல மேம்பாட்டு கரிசனை நவாஸ் ஏ கபூரிடமும் குடிகொண்டிருந்தமை அவரின் பரோபகார தன்மையிலிருந்து புலப்படுகிறது. இக்குடும்பத்தினர் இந்நாட்டு முஸ்லிம் சமூகத்திற்கு ஆற்றிய மகத்தான பணிகளை மனதில் கொண்டு அவர்கள் மீதான இரக்கத்தின் வெளிப்பாடாக எனது தந்தையார் அவர்களை அடிக்கடி நினைவூட்டுவதும் எனது நினைவில் நிழலாடுகிறது.
மர்ஹூம் பழீல் ஏ கபூரின் மறைவையொட்டி பாராளுமன்றத்தில் அவர் மீதான அநுதாப பிரேரணை நிறைவேற்றப்பட்ட போது முன்னாள் ஜனாதிபதி மறைந்த ரணசிங்க பிரேமதாஸ ஒரு வரலாற்று இரகசியத்தை முதன் முதலாக வெளிப்படுத்தியமை எனது நினைவுக்கு வருகிறது.“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தா காணியை கொள்வனவு செய்வதற்கு பழீல் ஏ கபூர் கூடிய நிதிப்பங்களிப்பை வழங்கிய ஒருவர்” என அவர் குறிப்பிட்டார். இந்த விடயத்தை வெளிப்படுப்படுத்துவதற்கு “பழீல் ஏ கபூர் ஒருபோதும் விரும்பாத, அதை வெளிப்படுத்தாத உன்னத நிலைப்பாட்டை கொண்டிருந்தார்” என்பதை தொடர்ந்தும் தனது அநுதாபப் பிரேரணை உரையில் பிரேமதாஸ அவர்கள் குறிப்பிட்டார்கள். இந்த அநுதாப பிரேரணையைத் தொடர்ந்து அப்போதைய சபாநாயகராக பணியாற்றிய எனது தந்தையாரின் குறிப்புகளுடனையே ஹன்சார்ட் பதிவுகளுக்காக அனுப்பப்பட்டது.
அவர் வலது கையால் கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் இருக்கட்டும் என்ற கோட்பாட்டை நிதர்சனமாக்கிய உதாரண புருஷர் என்றால் அது மிகையாகாது.
டி.ஸ்.சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க மற்றும் ஜே.ஆர் ஜயவர்தன போன்ற தலைவர்களின் நன்மதிப்பிற்கும் அன்பிற்கும் பாத்திரமாக வாழ்ந்த ஒரு மனிதராவார்.
எனது இந்த நினைவு முற்குறிப்பை இவ்வாறு நிறைவு செய்கிறேன்.ஒருவரின் மரணத்தின் பிற்பாடு அவர் தொடர்பான நலவுகளை பேசுமாறு இஸ்லாம் எமக்கு கற்பித்த கற்பிதங்களின் பிரகாரம் அவர் சார்ந்த நலவுகளையே இங்கு பதிவிட்டேன்.நலவுகளை ஏற்று குறைகளை மன்னித்து மேலான சுவனபதியை வழங்க தூய மனங்கொண்டு பிரார்த்திக்கிறேன். – Vidivelli