(ஏ.ஆர்.ஏ.பரீல்)
திருத்தப்பட்ட இஸ்லாம் பாடநூல்களை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்பு அனைத்து பாடசாலைகளுக்கும் விநியோகிக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள் அதன் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் தலைமையிலும் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் மற்றும் நீதிக்கான மய்யத்தின் உறுப்பினர்கள் அதன் தலைவர் சட்டத்தரணி ஷஹ்பி தலைமையிலும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவைச் சந்தித்து திருத்தப்பட்ட இஸ்லாம் பாடநூல்களின் மீள் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடினர். இதன்போதே கல்வியமைச்சர் அதிகாரிகளுக்கு இவ்வாறு உத்தரவிட்டார்.
இக்கலந்துரையாடல் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் விடிவெள்ளிக்குத் தெரிவிக்கையில், ‘தரம் 6,7,8,10 மற்றும் 11ஆம் தரங்களுக்குரிய இஸ்லாம் பாடநூல்களில் அடிப்படைவாத வசனங்கள் உள்ளடங்கியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலமளிக்கப்பட்டதனையடுத்து அந்நூல்களின் விநியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டன.
இந்நூல்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீள் விநியோகம் செய்வதில் நிலவும் தாமதம் குறித்து அமைச்சருடன் கலந்துரையாடினோம். இதன்போதே இஸ்லாம் பாடநூல்களை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்பு அனைத்து பாடசாலைகளுக்கும் விநியோகிக்குமாறு கல்வி அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
அத்தோடு தற்போது பாடநூல்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் சரியானதா? அல்லது வேறு திருத்தங்கள் செய்ய வேண்டுமா? என்பது தொடர்பில் உலமா சபையின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் இஸ்லாம் பாடநூல்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் உலமா சபை ஆலோசனை வழங்கும் என்றார்.
இதனிடையே நாட்டின் தேசிய கல்விக் கொள்கையினை வகுக்கும் தேசிய கல்வி நிறுவனத்துக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தீர்மானித்துள்ளார். ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்கள் மற்றும் இஸ்லாம் சமய பாடம் தொடர்பில் உலமா சபையின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
இதற்கென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் 3 அங்கத்தவர்கள் கொண்ட ஆலோசனைச் சபையொன்றினை நியமிக்குமாறு கல்வி அமைச்சர் உலமா சபையைக் கோரியுள்ளார்.
எதிர்காலத்தில் இஸ்லாமிய பாடநூல்களில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் உலமா சபையின் ஆலோசனைகள் கட்டாயமாகப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனவும் கல்வி அமைச்சர் அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.- Vidivelli