திலினியின் வலையில் சிக்கித்தவிக்கும் வர்த்தகர்கள்
பெற்றோல் இறக்குமதி செய்யவே மனைவி, பிள்ளைகளில் நகைகளை கொடுத்து உதவியதாக கூறுகிறார் கமல் ஹாசன்
றிப்தி அலி
திலினி பிரியமாலி. பிரபல வர்த்தகர்களை தனது வலையில் வீழ்த்தி அவர்களிடமிருந்து பல மில்லியன் கணக்கான ரூபாக்களை சுருட்டியமை தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளவரே இவர்.
நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இவரை எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் திலினி பிரியமாலியுடன் தொடர்புபட்ட மோசடி நடவடிக்கைகளுக்கு உடந்தையாக செயற்பட்டமைக்காக அவரது கணவர் என அறிமுகம் செய்யப்பட்டுள்ள இசுரு சாமிக பண்டார என்பவரையும் சி.ஐ.டி.யினர் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளார்.
திலினி மேற்படி நிறுவனத்தின் கீழ் பல கம்பனிகளை செயற்படுத்தி பல்வேறு வகையான வியாபாரங்களை மேற்கொண்டுள்ளார். இக்கம்பனிகள் அனைத்தும் கொழும்பு – 01 இலுள்ள உலக வர்த்தக மைய கட்டிடத் தொகுதியின் 34ஆவது மாடியிலேயே இயங்கியுள்ளன.
திலினி பிரியமாலியினால் நடத்தப்பட்டு வந்த எந்தவொரு கம்பனியும் இலாபமீட்டவில்லை என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. எனினும், இவரின் வங்கிக் கணக்கிலிருந்து கடந்த ஜனவரி முதல் ஜுன் வரையான ஆறு மாத காலப் பகுதிக்குள் மூன்று பில்லியன் ரூபாவிற்கு அதிகமான பணம் மீளப் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவரிடம் நிதி வைப்புச் செய்தவர்களின் முழுமையான பட்டியல் இன்று வரை வெளியாகவில்லை. எனினும், பல முஸ்லிம் வர்த்தகர்களும் இவரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்துள்ளனர் என்பதை இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பொலிஸ் முறைப்பாடுகள் மூலம் அறிய முடிகிறது.
இவ்வாறான நிலையில், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, திலினி பிரியமாலியிடம் 80 மில்லியன் ரூபா பணத்தினை வைப்புச் செய்ததாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் அண்மையில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். தான் காணி ஒன்றினை விற்றுக் கிடைத்த பணத்திலேயே குறித்த முதலீட்டை செய்ததாகவும் ஆவணங்களுடன் அசாத் சாலி முறையிட்டுள்ளார்.
இதேவேளை, அசாத் சாலியின் நண்பரான பிரபல ஆடைத் தொழிற்சாலையொன்றின் உரிமையாளரொருவர் 226 மில்லியன் ரூபா நிதியினை திலினி பிரியமாலியிடம் வைப்புச் செய்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. குறித்த வர்த்தகர், தனது வீட்டினை விற்பனை செய்து கிடைக்கப் பெற்ற பணத்தினையே இவரிடம் வைப்புச் செய்துள்ளார்.
உலக வர்த்தக மைய கட்டிடத் தொகுதியில் அலுவலகமொன்றினை நடத்தி வந்த வைத்தியரொருவரும் திலினி பிரியமாலியிடம் 750 மில்லியன் ரூபா நிதியினை வைப்புச் செய்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக அப்துல் ஹசன் கமல் ஹாசன் எனும் கொழும்பைச்சேர்ந்த வர்த்தகரும் அவரது மனைவி மற்றும் மகளுக்கு சொந்தமான 1080 கிராம் தங்கத்தினை திலினி பிரியமாலியிடம் கையளித்துள்ளார். அது மாத்திரமல்லாமல், 100,000 அவுஸ்திரேலிய டொலர் மற்றும் 60,000 அமெரிக்க டொலரினையும் திலினி பிரியமாலியிடம் வழங்கியுள்ளார். இது தொடர்பில் பிரபல யூ டியூப் நிகழ்ச்சி ஒன்றில் கருத்து வெளியிட்ட வர்த்தகர் கமல் ஹாசன் கூறுகையில், “திலினியின் கணவர் என்றறியப்படும் இசுரு பண்டாரவே என்னை முதலில் தொடர்பு கொண்டு தமது வியாபாரத்தில் முதலிடுமாறு கோரினார். இதனைத் தொடர்ந்து நாட்டில் எரிபொருள் நெருக்கடி உச்சத்திலிருந்த காலப்பகுதியில், கப்பலொன்றிலிருந்து கச்சா எண்ணெயை விடுவிப்பதற்கு வர்த்தகர் ஒருவருக்கு பணம் தேவைப்படுவதாகவும் அதற்கு உதவுமாறும் திலினி என்னிடம் கோரினார். இரண்டு நாட்களில் திறைசேரியிடமிருந்து பணம் கிடைத்தவுடன் அதனைத் திருப்பித் தருவதாக கூறினார். நான் நாட்டின் நன்மை கருதியே எனது மனைவி மற்றும் மகள்களுக்குச் சொந்தமான நகைகள் மற்றும் டொலர்களை கையளித்தேன். ஆனால் உறுதியளித்தவாறு இரண்டு நாட்களில் பணம் கிடைக்கவில்லை. பின்னர் எனது வங்கிக் கணக்கில் காசோலை வைப்பிலிடப்பட்டதாக திலினி கூறினார். ஆனால் அதுவும் கிடைக்கவில்லை. எனது பணத்திற்கு என்ன நடந்தது என அறிவதற்காக உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்திற்குச் சென்ற போது பொலிஸ் அதிகாரி ஒருவர் மூலமாக திலினி என்னை மிரட்டினார். இங்கிருந்து போகாவிட்டால் உண்னைக் கைது செய்வோம் என அந்த பொலிஸ் அதிகாரி கூறினார். அதன் பிறகுதான் இவர்கள் என்னை ஏமாற்றுகிறார்கள் என்பது தெரிய வந்தது. இதனையடுத்தே நான் சி.ஐ.டி.யில் முறைப்பாடு செய்தேன்” என வர்த்தகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, திலினி பிரியமாலியிடம் நிதி வைப்புச் செய்து ஏமாற்றப்பட்டவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. எனினும், இவர்களில் பெரும்பாலானோர் இந்த மோசடி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை. காரணம், தமக்கு பெருந்தொகைப் பணம் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பான தகவல்களை பொலிசார் கண்டறிந்துவிடுவர் என்ற அச்சமேயாகும்.
குறித்த முதலீட்டாளர்களை திலினி பிரியமாலி நேரடியாக அன்றி தரகர்கள் மற்றும் முகவர்களின் ஊடாகவே அணுகியுள்ளார். மேலும் இந்த வைப்புக்களுக்கு அதிக இலாபம் வழங்கப்படும் எனவும் திலினி பிரியமாலியினால் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. அது மாத்திரமல்லாமல், இலங்கைக்கு எரிபொருளைக் கொண்டு வருவதற்காகவும் இந்த நிதியை பயன்படுத்துவதாக கூறி அவர் பலரை ஏமாற்றியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிரந்தி ராஜபக்ஷ உட்பட பல முக்கியஸ்தர்களுடன் தனக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாகவும் அவர்களும் இந்த வியாபாரத்தில் நேரடியாகத் தொடர்புபடுகின்றனர் என்றும் முதலீட்டாளர்களிடம் திலினி பிரியமாலி கூறியுள்ளார். எனினும் சிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட பல பிரமுகர்கள் திலினியுடன் தமக்கு எந்த தொடர்புமில்லை என அறிவித்துள்ளனர்.
திலினி பிரியமாலிக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ள பிரபல வர்த்தகர் அனீஸ் சத்தார் என்பவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்தன நீதிமன்றில் ஆஜராகி வருகின்றார். மறுபுறம் திலினி பிரியமாலி சார்பாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் புதல்வரான ரகித ராஜபக்ஷ ஆஜராகியிருந்தார். இதுவும் சர்ச்சையைத் தோற்றுவித்திருந்தது. பாரிய நிதி மோசடி தொடர்பான வழக்கு விசாரணையில் பிரதிவாதி தரப்பில் நீதி அமைச்சரின் கீழ் செயற்படும் கனிஷ்ட சட்டத்தரணிகள் ஆஜராவது நல்லதல்ல என்று எதிர்த்தரப்பு சட்டத்தரணிகள் குற்றஞ்சாட்டினர். எனினும், இந்த குற்றச்சாட்டினை கடந்த வெள்ளிக்கிழமை (21) பாராளுமன்றத்தில் நீதி அமைச்சர் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனிடையே, இதுவரை திலினியால் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் பணத்துக்கு என்ன ஆனது என்பது மர்மமாகவே இருந்து வருகின்றது. மோசடி செய்யப்பட்ட பணம் அவரது வங்கிக்கணக்கிலோ நிறுவன கணக்கிலோ வைப்புச் செய்யப்படவில்லை என தெரியவந்துள்ள நிலையில், அவை பணமாக நிறுவனத்தில் வைக்கப்பட்டிருக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது. மோசடி செய்யப்பட்ட முழு பணத் தொகையையும் சந்தேக நபர்கள் செலவு செய்திருக்க வாய்ப்பில்லை என கூறும் விசாரணையாளர்கள், இவ்வாறான நிலையில் அந்த பணத் தொகை எங்கோ ஒரு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கும் சி.ஐ.டி.யினர் தொடர்ச்சியாக பணத்தை கண்டுபிடிக்கவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இவ்வாறான சட்ட அங்கீகாரமற்ற நிறுவனங்களிடம் நிதி வைப்புச் செய்ய வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு வழிப்புணர்வூட்டி வருகின்றது. இந்த நிலையிலும் வர்த்தகர்கள் சட்டவிரோத நிதி நிறுவனங்களிடம் தொடர்ச்சியாக வைப்புச் செய்து ஏமாறுகின்றமை வேடிக்கையானதாகும்.
சக்விதி ரணசிங்க, பிரிவேல்த் குளோபலின் சிஹாப் ஷெரீப் முதல் திலினி பிரியமாலி வரை இலங்கை மக்களின் பல பில்லியன் ரூபாய்களை மோசடி செய்தவர்களின் வரலாறு நீண்டு கொண்டே செல்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இறுக்கமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.- Vidivelli