மஹிந்தவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டும்

 மஹிந்த அணி சபாநாயகருக்கு அறிவிப்பு

0 670

ரணில் விக்கிரமசிங்க பிரதமாராக நியமிக்கப்பட்டதை அடுத்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது அணியினர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமரத் தீர்மானம் எடுத்துள்ளதுடன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முன்வைக்கவுள்ளனர்.

நேற்றைய தினம் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து புதிய அமைச்சரவை இன்றைய தினம் நியமிக்கப்படவுள்ள நிலையில் தாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தினேஷ் குணவர்த்தன எம்.பி. தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகவும் அவரது அமைச்சரவையில் நாம் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றுகொண்டோம். ஆனால் ஜனாதிபதியின் தீர்மானத்தை எதிர்த்து நீதிமன்றம் சென்ற எதிர்க்கட்சியினர் நீதிமன்றத் தீர்ப்பில் வெற்றி பெற்றுள்ளனர். தீர்ப்பு மீது எமக்கு அதிருப்தி இருந்தாலும் கூட நீதிமன்ற தீர்ப்பை நாம் வரவேற்கின்றோம். ஆகவே இப்போது நாம் எதிர்ககட்சியாக செயற்படவே தீர்மானம் எடுத்துள்ளோம்.

கடந்த பாராளுமன்ற அமர்வுகளில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்ததன்  மூலம் அவர்கள் தொடர்ந்தும்   எதிர்க்கட்சியாக செயற்பட முடியாது. ஆகவே பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக நாம் செயற்படவுள்ளோம். இந்த கோரிக்கையை நாளைய தினம் (இன்று) சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்து அறிவிக்கவுள்ளோம். அதே போல் நாளை மறுதினம் (நாளை ) 18 ஆம் திகதி கூடும் பாராளுமன்ற அமர்வுகளுக்கு முன்னர் கட்சி தலைவர் கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக எழுத்துமூலம் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கையை நாம் முன்வைக்கவுள்ளோம். எமக்கு எதிர்க்கட்சி தலைவர் அனத்தும் அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும். ஆகவே அதனை எமக்கு பெற்றுத்தர வேண்டும்.

அதே போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து நாட்டினை நாசமாக்கும் பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்த அரசாங்கத்தை இயக்கும் பிரதான தரப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பே உள்ளது. ஆகவே தான் சுமந்திரன் போன்றவர்களுக்கு ரணில் முக்கிய இடம் கொடுத்து வைத்துள்ளார். எவ்வாறு இருப்பினும் எமது ஆட்சியை அமைக்கும் வரையில் இந்த அணிக்கு எதிராக எமது போராட்டம் முன்னெடுக்கப்படும். இந்த அரசாங்கம் செய்துவரும் ஊழல் செயற்பாடுகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கார்களின் குற்றங்கள் அனைத்திற்கும் எமது ஆட்சியில் பதில் கூறியாக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.