“மரண தண்டனை நிறைவேற்றிவிட்டோம். மார்க்க கடமைகளை செய்து கொள்ளுங்கள்” என தகவல் அனுப்பினர்
கடத்தப்பட்டவர்களது உறவினர்கள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம்
எம்.எஸ்.எம்.நூர்தீன்
“வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்களை கண்டுபிடிக்க வேண்டும். அவர்களை எங்கு கொண்டு சென்று கொலை செய்தார்கள், அவர்களது உடலங்களை எங்கு வைத்துள்ளார்கள் என்பதை இந்த ஆணைக்குழு கண்டறிய வேண்டும்” என காத்தான்குடியைச் சேர்ந்த ஏ.எல். அம்ஜத் கோரிக்கை விடுத்தார்.
காத்தான்குடியில் இடம் பெற்ற வலிந்து காணாமலக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே அவர் இக் கோரிக்கையை முன்வைத்தார்.
உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையிலான இந்த ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி,ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சாட்சிமளித்தனர்.
கடந்த சனி (22) மற்றும் ஞாயிறு (23) ஆகிய இரு தினங்களிலும் விசாரணைகள் காத்தான்குடி ஹோட்டல் பீச்வே மண்டபத்தில் இடம் பெற்றன. இந்த விசாரணைகளின்போது பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இவ் விசாரணைகளின் போது காத்தான்குடியைச் சேர்ந்த ஏ.எல்.அம்ஜத் என்பவர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
“எனது தந்தை உமர்தீன் அப்துல் லத்தீப் 1985 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி மண்முனையிலிருந்து கொக்கட்டிச்சோலையிலுள்ள நூலகத்துக்கு சிறிய தோணி மூலம் சென்றபோது விடுதலைப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டார்.
கடத்தப்பட்ட முதல் மூன்று வாரங்கள் எனது தாயார் மண்முனையிலுள்ள பள்ளிவாசல்களின் நிருவாகிகள், குடும்ப உறவினர்களுடன் இணைந்து பல திசைகளிலும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மூன்று வாரங்களின் பின்னர் எமது மண்முனை பள்ளிவாசலுக்கு வருகை தந்த ஒரு ஆயுதக் குழுவினர் உமர்லெவ்வை அப்துல் லத்தீப் என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றிவிட்டோம். உங்களது மார்க்க கடமைகளை செய்து கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்கள்.
எனது தந்தை அக் கால கட்டத்தில் காத்தான்குடியைப் பிறப்பிடமாகவும் மண்முனைப் பிரதேசத்தில் வசிப்பிடமாகவும் கொண்டிருந்தார்.
எனது தந்தை மும்மொழியையும் சரளமாக பேசக் கூடியவர். அவரை என்ன காரணத்துக்காக கடத்திக் கொண்டு போய் கொலை செய்தார்கள் என இதுவரைக்கும் தெரியவில்லை.
அவர் கடத்தப்பட்ட போது எனக்கு 3 வயது. எனது சகோதரிக்கு 4 வயது. எனது இளைய சகோதரி தாயின் வயிற்றில். தாய் 7 மாதக் கர்ப்பிணியாக இருந்தார்.
அன்றிலிருந்து 35 வருடங்களுக்கு மேலாக எங்களது தாய் மிகவும் கஷ்டப்பட்டே எங்களை வளர்த்து வந்தார்.
தந்தை கடத்தப்பட்ட பின்னர் நாங்கள் சந்தித்த துயரங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. இது எங்களுக்கு மாத்திரமல்ல, இலங்கையில் கடத்தப்பட்டு வலிந்து காணாமலாக்கப்பட்ட அத்தனை பேருடைய நிலைமையும் இது தான்.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்களை இந்த ஆணைக்குழு கண்டுபிடிக்க வேண்டும். அவர்களை எங்கு கொண்டு போய் கொலை செய்தார்கள், அவர்களது உடலங்களை எங்கு வைத்துள்ளார்கள் என்பதை இந்த ஆணைக்குழு கண்டறிய வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிறிது பணத்தினை நஷ்டயீடாக கொடுத்தால் அவர்களது வாயை அடைத்து விடலாம் என சிலர் நினைக்கின்றார்கள். அதற்கு நாம் இணங்கமாட்டோம்.
இந்த கடத்தல்களை யார் செய்தார்களோ அக்குழுவினரை இனம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். இழப்புக்கான நீதியையும் நியாயத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும் என்றும் அம்ஜத் மேலும் குறிப்பிட்டார்.
இதன் போது ஆணைக்குழு முன் சாட்சியமளித்த காத்தான்குடியைச் சேர்ந்த தாயொருவர் கருத்து தெரிவிக்கையில், களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்கு 1985 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி வியாபாரத்துக்கு சென்ற எனது கணவர் இதுவரை வீடு வரவில்லை.
கடத்தப்படும் போது எனது கணவருக்கு வயது 28 ஆகும்.அப்போது எனக்கு 26 வயது. எனக்கு மூன்று பெண் பிள்ளைகள். மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் எனது பிள்ளைகளை வளர்த்தேன்.
இது வரை எந்த நீதியும் நியாயமும் கிடைக்கவில்லை. பல இடங்களிலும் தேடியும் எனது கணவர் கிடைக்கவில்லை. இப்போதும் நாம் கஷ்டத்துடனேயே வாழ்கின்றோம் எனக் கூறினார்.
இன்னுமொரு சகோதரி கருத்து தெரிவிக்கையில், எனது சகோதரன் 1990 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் 12 ஆம் திகதி கல்முனைக்கு சென்றவர் குருக்கள் மடத்தில் வைத்து கடத்தப்பட்டார். இதுவரை அவர் வீடு வந்து சேரவில்லை. கடத்தப்படும் போது அவருக்கு வயது 20. அவரின் இழப்பு எங்கள் குடும்பத்துக்கு பாரிய இழப்பாகும் என்றார். இதுவரை எந்த ஒரு நீதியும் நியாயமும் கிடைக்க வில்லை என தெரிவித்தார்.
இந்த இரு தினங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி,மண்முனைப் பற்று, மண்முனை வடக்கு, ஏறாவூர், ஓட்டமாவடி,வாழைச்சேனை, மீராவோடை பிரதேசங்களைச் சேர்ந்த 179 பேர் சாட்சியமளித்ததுடன் கடத்தப்பட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் மரண அத்தாட்சிப்பத்திரம், பொலிஸ் முறைப்பாட்டு பிரதி உட்பட ஆவணங்களும் உறவினர்களால் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டன.- Vidivelli