வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு சரியாக 32 வருடங்கள் பூர்த்தியாகின்றன. எனினும் அன்றிலிருந்து இன்று வரை பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் அனுபவிக்கும் துயரங்கள் எழுத்தில் வடிக்க முடியாதவை.
1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், வடபுல முஸ்லிம்கள் 75,000 பேர் இரண்டு வார காலப்பகுதியினுள் அவர்களின் வாழ்விடங்களை விட்டு பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்ட துயரம் நடந்தேறிய ஒக்டோபர் மாதத்தினைக் கறுப்பு ஒக்டோபர் என்றால் அது மிகையாகாது.
அதிகமான குடும்பங்கள் 500 ரூபா பணத்துடன் சில உடுதுணிகளை மாத்திரமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டன. சில குடும்பங்கள் வெறுங்கையுடன் வெளியேறியிருந்தன. தென் மாகாணத்தின் எல்லையினை நெருங்கும் வரை போக்குவரத்தினைப் பெற்றுக்கொள்ள முடியாத மக்கள் பல நாட்கள் நடந்தே ஊரைக் கடந்திருந்தனர். இற்றைவரை எம் சமுதாய மக்களின் துன்பங்களும் துயரங்களும் அடையாளம் காணப்படவுமில்லை, ஆற்றப்படவுமில்லை. மூன்று தசாப்த காலமாக உள்ளூர்க் குடியிருப்பாளர்களும் அரசாங்க அதிகாரிகளும் சர்வதேசக் கொடையாளர்களும் தெற்கு முஸ்லிம்களும் காட்டிய புறக்கணிப்பும் புரிதலின்மையும் நம்புவதற்கு யாருமில்லையே எனும் உணர்வினை இந்த வடபுல மக்களின் உள்ளங்களில் விதைத்துவிட்டன.
வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவினை நியமிக்கப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ 2005ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வாக்குறுதியளித்திருந்தார். 2009 இல் யுத்தம் முடிவடைந்தமையினை நினைவுகூர்ந்து நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார் “வடபுல முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டு அவர்களின் வாழிடங்களை விட்டுப் பலவந்தமாகப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டபோது அவர்களின் இடப்பெயர்வினைத் தடுத்து நிறுத்த யாரும் முன்வரவில்லை. இப்போது எனது அரசாங்கம் பயங்கரவாதத்தினை முடிவுக்குக் கொண்டுவந்துள்ள காரணத்தினால், 2010 மே மாதமளவில் முஸ்லிம்களை மீளக் குடியமர்த்த சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.” அவரின் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. யுத்தத்திற்குப் பின்னரான தேசத்தினைக் கட்டியெழுப்பும் துரித செயன்முறையில் வடபுல முஸ்லிம்களின் உரிமைகளை முன்னுரிமைப்படுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தவறிவிட்டார். அதன் பின்னர் முஸ்லிம்களின் ஆதரவுடன் பதவிக்கு வந்த மைத்திரிபால சிறிசேனவும் வட புல முஸ்லிம்களின் விடயத்தில் எந்தவித கரிசனையையும் காட்டவில்லை.
2015 முதல் 2019 வரையான நிலைமாறுகால நீதிக் காலப்பகுதியின் போது சூழ்நிலை தொடர்ந்தும் மாறாமலேயே இருந்தது. முன்மொழியப்பட்ட பொறிமுறைகள் மூலம் வடக்கு முஸ்லிம்களின் துயரங்களைத் தீர்ப்பதற்கான ஆரம்பகால முயற்சிகள் கைவிடப்பட்டன. ஜ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை, 2002 பெப்ரவரி யுத்தநிறுத்தம் முதல் 2011 வரையான காலப்பகுதியினை மட்டுமே ஆராய்ந்தது. ஆனால், 1990 இல் நடத்தப்பட்ட முஸ்லிம் மக்களின் வெளியேற்ற நிகழ்வு போன்ற முன்னைய குற்றச் செயல்களை ஆராயாமல் விட்டுவிட்டது.
மீள்குடியேற்றத்தைப் பொறுத்தவரை அது ஒரு சிக்கலான பொறிமுறையாகவே மாறியுள்ளது எனலாம். திரும்பிச் செல்பவர்கள் புத்தளத்தில் ஒரு பிடிமானத்தினை வைத்துள்ளனர் என்பது உண்மையாகும். ஆனால், இம்மக்களின் பூரண மீள்திரும்பலைப் பாதிக்கும் தடைகளை இந்த யதார்த்தம் பிரதிபலிக்கின்றது என்றால் அது மிகையாகாது. இம்மக்களின் காணிகள் காடுகளாக மாறி அவற்றில் குடியேறி வாழ்வதே சாத்தியமற்றதாக இருக்கும் நிலையில் இம்மக்களுக்கு மீள்குடியேற்ற உதவிகள் வழங்கப்படுவதற்கான எச்சாத்தியமும் தென்படாத சூழ்நிலையே நிலவுகின்றது. இவ்வாறான சூழமைவில் இந்த மக்கள் 32 வருடங்களாக வாழ்ந்த இடங்களை விட்டுச் சடுதியாகத் திரும்பிச் செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். திரும்பிச் செல்லும் இடங்களில் அடிப்படை வசதிகள் இல்லை என்பது ஒரு புறமிருக்க இவ்வாறு திரும்பிச் செல்லும் மக்களை அரசாங்க அதிகாரிகளும் வரவேற்கத் தயாராக இல்லை என்பதுடன் இம்மக்களின் முன்னாள் அயலவர்கள் கூட இவர்களை வரவேற்கத் தயாராக இல்லை என்பதே யதார்த்தமாக இருக்கின்றது.
நிலைமை இவ்வாறிருக்க, யாரிடமிருந்தும் எதையும் பெரிதும் எதிர்பார்க்காது தமது வாழ்வினை மீண்டும் பூச்சியத்தில் இருந்து ஆரம்பித்து தமிழ் உறவுகளுடன் சகவாழ்வு வாழலாம் என்ற ஆர்வத்துடன் முஸ்லிம்கள் வடக்கிற்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். சமமாக நடத்தப்படுவதற்கான வாய்ப்பு, தமது காணிகளை அணுகுவதற்கான சந்தர்ப்பம், அடிப்படை வாழ்வாதார உதவிகள், மேலும் காடு மண்டிக் கிடக்கும் தமது காணிகளைத் துப்பரவுசெய்தல் போன்ற சாதாரண கோரிக்கைகளுக்கு அப்பால் இம்மக்கள் விடுத்திருக்கும் முக்கியமான வேண்டுகோள்கள் சொற்பமானவைதான்.
வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அவர்களின் சொந்த இடங்களில் தங்களின் சொத்துக்களை மீளக் கோருவதற்கும் வாழ்வாதார உதவிகளைப் பெறுவதற்கும் உரிமையினைக் கொண்டுள்ளனர் என்பதையும் தற்காலிகமாக இவர்களின் குடும்பங்கள் வேறு இடங்களில் வாழும் தெரிவினை மேற்கொண்டிருந்தாலும் இந்த உரிமை அவர்களுக்கு உண்டு என்பதையும் அரசாங்க அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அங்கீகரிப்பது இன்றியமையாததாகும்.– Vidivelli