நன்றி: சன்டே டைம்ஸ்
தமிழில்: றிப்தி அலி
இலங்கையில் ‘சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் தந்தை’ என அழைக்கப்படும் பேராசிரியர் றிஸ்வி ஷெரீபிற்கு அண்மையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அறுவை சிகிச்சையினை மேற்கொள்வதற்கு உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்ற பல சர்வதேச மற்றும் உள்ளூர் நிலையங்கள் காணப்பட்ட போதிலும், பொரளையிலுள்ள தனது சொந்த வைத்தியசாலையான வெஸ்டர்ன் ஹொஸ்பிடலிலேயே அவர் இந்த சந்திரசிகிச்சையினை மேற்கொண்டுள்ளார்.
இலங்கையின் முதலாவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, பேராசிரியர் றிஸ்வி ஷெரீபினால் 1985ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சைக்கு போராசிரியர்களான ஏ.எச்.ஷெரீப்தீன் மற்றும் ஹெரி ஜெயசேகர ஆகியோரும் பங்களிப்புச் செய்துள்ளனர்.
முன்னொரு காலப் பகுதியில் இந்த அறுவை சிகிச்சைக்காக பல மில்லியன் ரூபா செலவளித்து இந்தியா செல்ல வேண்டியிருந்தது. எனினும், பேராசிரியர் றிஸ்வி ஷெரீபினால் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதை அடுத்து, நாட்டிலேயே இந்த அறுவை சிகிச்சையினை மேற்கொள்ள முடிந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
எழுபத்தி மூன்று வயதான பேராசிரியருக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்கள் காணப்பட்டமையினால் இந்த அறுவை சிகிச்சையினை அவருக்கு மேற்கொள்வது அதிக ஆபத்தானது என்று கருத்தப்பட்டது. இந்நிலையிலும் மிகுந்த நம்பிக்கையூடன் அவர் இந்த அறுவை சிகிச்சையினை முகங்கொடுத்திருந்தார்.
நாட்டிலுள்ள மிகவும் அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட வைத்தியர்கள் பலரின் வழிகாட்டலில் வைத்தியர் சூலா ஹேரத் தலைமையிலான சிறுநீரக விசேட வைத்திய நிபுணர்களைக் கொண்ட குழுவினரால் சிறுநீரக அறுவை சிகிச்சையும், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் ரஞ்சுக உபயசிரி தலைமையிலான குழுவினரினால் சத்திர சிகிச்சையும் பேராசிரியர் றிஸ்வி ஷெரீபிற்கு மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு மேலதிகமாக இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற பேராசிரியரின் மகளான ஸ்ரீ ஜயவர்த்தனபுர போதனா வைத்தியசாலையின் சிறுநீரக அறுவை சிகிசிச்சை பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரியான ஹபீபா ஷெரீப் செயற்பட்டுள்ளார்.
எழுபத்தி மூன்று வயதான பேராசிரியருக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்கள் காணப்பட்டமையினால் இந்த அறுவை சிகிச்சையினை அவருக்கு மேற்கொள்வது அதிக ஆபத்தானது என்று கருத்தப்பட்டது. இந்நிலையிலும் மிகுந்த நம்பிக்கையூடன் அவர் இந்த அறுவை சிகிச்சையினை முகங்கொடுத்திருந்தார்.
அவருக்கு உதவியாக பேராசிரியரின் புதல்வர்களான வெஸ்டர்ன் ஹொஸ்பிடலின் பிரதம நிறைவேற்று அதிகாரியான வைத்தியர் ஒமர் ஷெரீப் மற்றும் அங்கொடயிலுள்ள தேசிய மனநல நிறுவனத்தின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி றிகாஷ் ஷெரீப் ஆகியோரும் செயற்பட்டுள்ளனர்.
பேராசிரியரின் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற வேண்டி பள்ளிவாசல்கள், விகாரைகள், கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் விசேட சமய வழிபாடுகளும் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், அநாதை இல்லங்களுக்கு உதவி செய்தல், கோயில்கள் மற்றும் பள்ளிவாசல்களுக்கு அருகிலுள்ள ஏழைகளுக்கு உணவளித்தல் போன்ற பல தொண்டு செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்த சத்திரசிகிச்சை மிகவும் வெற்றிகரமாக நடைபெறுவதற்காக உழைத்த அனைவருக்கும் பேராசிரியர் றிஸ்வி ஷெரீப் மிக்க நன்றிகளை தெரிவித்துள்ளார்.
“வெஸ்டர்ன் ஹொஸ்பிடல் என்னுடையதாக இருந்தாலும், நாட்டில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையினை மேற்கொள்வதற்கு இந்த வைத்தியசாலை சிறந்ததும் பாதுகாப்பானதும் என தயக்கமின்றி கூறிக்கொள்கின்றேன்” என்றார் பேராசிரியர்.
இந்த அறுவை சிகிச்சையிலிருந்து விரைவாக குணமடைந்த பின்னர் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான நிகழ்ச்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். –Vidivelli