கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
இருபத்திரண்டு வயது நிரம்பிய முஸ்லிம் பெண் மஹிசா அமினி ஈரானின் பஸீஜ் என்றழைக்கப்படும் ஒழுக்கக் கண்காணிப்பு அதிகாரிகளின் கைகளிற் சிக்கி உயிர் இழந்ததை தொடர்ந்து அந்நாட்டின் முஸ்லிம் மகளிர் கடந்த சில வாரங்களாக முல்லாக்களின் ஆட்சிக்கெதிராகக் கிளர்ந்தெழுந்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக ஆண் இளைஞர்களும் களத்தில் குதித்துள்ளனர். அக்கிளர்ச்சி பல மேற்கு நாடுகளின் மகளிர் ஆதரவையும் திரட்டியுள்ளதை ஊடகங்கள் உறுதிப்படுத்துகின்றன. மகளிர் கொழுத்திய தீ இன்று பரவலாய் எரிகிறது. ஆனால் உலகெங்குமுள்ள சுன்னி முஸ்லிம் நாடுகளில் ஈரானிய மகளிரின் கிளர்ச்சிக்கான ஆதரவு மிகவும் குறைவாகக் காணப்படுவது விசித்திரமாகத் தோன்றவில்லையா? அவர்களின் மௌனத்தின் மர்மம் என்ன? அது வரலாறு படைத்த மதப்பிளவின் பிரதிபலிப்பா? மேற்குலகு ஏன் இக்கிளர்ச்சிக்கு ஆதரவளிக்கின்றது? இவ்வாறான வினாக்களைப்பற்றி அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
பெண்களின் இன உரிமைப் போராட்டம்
மானிட சமூகம் ஆதியிலே வேடர்களாகத் திரிந்த காலத்தில் ஆண்களும் பெண்களும் சமநிலையில் நின்று வனவிலங்குகளுடன் போராடி வாழ்ந்தனர் என்றும், பின்னர் வேடுவர் சமூகம் விவசாயச் சமூகமாகமாகவும் வியாபாரச் சமூகமாகவும் மாறத் தொடங்கவே மனிதக் குழுக்கள் நிலையாக ஓரிடத்தில் குடிகொள்ளத் தொடங்க தனியுடமை அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளும் வளரலாயின என்றும் அதன்பின்னர் பெண்களும் படிப்படியாக தமது சுதந்திரத்தையும் சமநிலையையும் இழக்கத் தொடங்கி ஆண்களின் அடக்குதலுக்கு ஆளாகினர் என்றும் வரலாறும் சமூகவியலும் கூறுகின்றன.
அவ்வாறான வாழ்க்கை இஸ்லாம் தோன்றியபோது அரேபிய சமூகத்தில் மிகவும் கேவலமான ஒரு நிலையை அடைந்து பெண்கள் ஆண்களின் தனியுடமைச் சொத்தாகவும் ஆண்களின் காமப் பசியைத் தீர்க்கும் இரையாகவும் மாறி இருந்தனர். அந்த அவலத்துக்கு முற்றுப் புள்ளிவைக்கத் தோன்றியதே இஸ்லாம். திருமறையின் திருவசனங்களையும் திருத்தூதரின் வாழ்க்கையையும் பக்தியுடன் மேலெழுந்தவாரியாகப் படிக்காமல் அவ்வசனங்கள் எச்சந்தர்ப்பங்களில் என்ன நோக்கங்களுக்காக அருளப்பட்டன, அவற்றை எவ்வாறு பெருமானார் நடைமுறைப்படுத்திக் காட்டினார் என்ற வினாக்களை தர்க்கரீதியில் சமூகவியல் அடிப்படையில் ஆராய்ந்தால் இந்த உண்மை வெளிப்படும். தாய் அன்பை இழந்து, ஒரு செவிலியின் மடியிலே தவழ்ந்து விளையாடி, தன்னிலும் மூத்தவரான ஒரு பெண்ணை மணந்து சரித்திரம்படைத்த ஒரு தலைவன் பெண் இனத்தை கனவிலேனும் ஓர் அடிமை இனமாக மதித்திருப்பாரா என்பதை எண்ணிப்பார்த்தால் பெண்களின் இன உரிமைப் போராட்டத்துக்கு திருமறையே வழிவகுத்தது என்ற உண்மையை உணரலாம்.
ஆனால் காலப்போக்கில் இஸ்லாமிய மதக்கல்வி ஆண்களின் தனியுடமையாகமாற அவர்களே பெண்களைப்பற்றித் திருமறையும் திருத்தூதரின் போதனைகளும் என்ன சொல்கின்றன எனப்போதிக்கலாயினர். அந்தப் போதனைகளில் ஆண்வர்க்கத்தின் அதிகாரம் தொனித்ததில் ஆச்சரியமில்லை. இந்த நிலை நவீனத்துவமும் தற்காலக்கல்வியும் முஸ்லிம் சமூகங்களிற் காலூன்றும்வரை நீடித்தது. இன்றோ நிலை வேறு. திருக்குர்ஆனும் திருத்தூதர் போதனையும் உண்மையிலேயே தங்களைப்பற்றி என்ன சொல்கின்றன என்பதை முஸ்லிம் பெண்கள் தாமாகவே தற்காலக்கல்வியின் உதவியுடன் அறியத் தொடங்கிவிட்டனர்;. அதன் விளைவுதான் இன்றைய முஸ்லிம் மகளிரின் இன உரிமைப் போராட்டம். அந்தப் போராட்டத்தின் இன்றைய அத்தியாயமே ஈரானில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள்.
ஷீயா மகளிரின் கோரிக்கை
முல்லாக்கள் வகுத்துள்ள ஒழுக்க போதனைச் சிறையிலிருந்து விடுதலை வேண்டும்; ஆண்களைப்போல் பெண்களுக்கும் தனித்தியங்கும் திறமையும் சமூகத்தில் உயிரோட்டமுள்ள ஓர் இனமாக வாழ்ந்து சமூக மேம்பாட்டுக்குப் பங்களிக்கும் வல்லமையும் உண்டு; ஆகவே ஆண்களுடன் சமநிலையில் நின்று நாட்டுக்காகவும் சமூகத்துக்காகவும் பாடுபட எங்களுக்கு விடுதலை வேண்டும். இவைதான் ஷீயா மகளிரின் போராட்டக் கரு. அதற்கு ஓர் அடையாளமாக விளங்குவதுதான் பெண்களின் கூந்தல் திரை.
சீலைக் கூடாரத்துக்குள் பெண்கள் தங்களின் கூந்தலை மறைக்கவேண்டும் என்பது முல்லாக்களின் போதனையும் கட்டளையும். ஆனால் அதனை மறைப்பதும் திறப்பதும் ஏன் கூந்தலையே வெட்டி எறிவதும் தங்களின் அடிப்படை மனித உரிமை என்பது மகளிரின் நிலைப்பாடு;. இந்த நிலைப்பாடு அனைத்து மகளிருக்கும் பொதுவானது என்பதை அவர்கள் மறுப்பார்களா?
சுன்னி மகளிரின் ஹிஜாப் போராட்டம்
பிரான்ஸ் தொடக்கம் இந்தியா ஊடாக இலங்கை வரை ஹிஜாப் அணியும் உரிமையைக்கேட்டு சுன்னி மகளிர் நடத்திய ஆர்ப்பாட்டங்களை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அண்மையில் இலங்கையில் ஷண்முகா வித்தியாலயத்தில் நடைபெற்ற முஸ்லிம் ஆசிரியைகளின் ஹிஜாப் கோரிக்கை நீதிமன்றம்வரை சென்று அது பெண்களின் அடிப்படை மனித உரிமை என்ற வாதாட்டத்துடன் வெற்றிபெற்றதையும் வாசகர்கள் அறிந்திருப்பர். அதே போராட்டம் இந்தியாவிலும் ஆந்திரா மாநிலத்தில் நடைபெற்றது. அதில் ஈடுபட்டோரும் சுன்னி மகளிரே. இந்தப் போராட்டங்கள் எல்லாமே முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் நடைபெற்றன என்பதையும் உணரவேண்டும்.
சிறுபான்மையினராக வாழும் நாடுகளில் முஸ்லிம் மகளிர் கூந்தலையும் சில இடங்களில் முகத்தையும் மூடுவதற்கு உரிமை கேட்கிறார்கள். ஆனால் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் திறப்பதற்கு மகளிர் உரிமை கோருகிறார்கள். ஓரிரண்டு வருடங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவிலும் பெண்கள் ஆடைச் சுதந்திரம் வேண்டி ஆர்ப்பாட்டம் நடத்தி அதில் சில பெண்கள் சிறையில் தள்ளப்பட்டதையும் ஞாபகத்திற்கொள்ள வேண்டும். இப்போது தலிபான்களின் ஆப்கானிஸ்தானிலும் இது வெடிக்கிறது. அந்த மகளிரையும் தலிபான்கள் அடக்கப்பார்க்கிறார்கள். அதே ஆடைச் சுதந்திரம் வேண்டியே ஈரானிய மகளிர் இன்று போராடுகிறார்கள்.
இந்த நிலையில் சுன்னி முஸ்லிம் மகளிரின் மௌனம் ஒரு முரண்பாடாகத் தோன்றவில்லையா? இரண்டுமே அடிப்படை மனிதாபிமான உரிமை என்ற கோதாவில் நடைபெறுகின்றன. மூடுவதற்கு உரிமை வேண்டுமென்றால் திறப்பதற்கும் அந்த உரிமை வேண்டும்தானே? எனவேதான் ஷீயா மகளிரின் உரிமைப் போராட்டத்துக்கு சுன்னி மகளிரின் மௌனம் ஒரு புதிராகத் தோன்றுகிறது.
மதப் பிளவுதான் காரணமோ?
இஸ்லாத்தின் ஷீயா சுன்னி மதப்பிளவு வரலாறு கண்ட உண்மை. இந்தப் பிளவை முன்நின்று வலியுறுத்துவோர் இரு பக்கத்திலுமுள்ள முல்லாக்களே. எனவேதான் ஷீயா மகளிரின் போராட்டத்துக்கு சுன்னி முஸ்லிம்கள் ஏன் ஆதரவு வழங்க வேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு சுன்னி மகளிரின் மௌனத்துக்குக் காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது. எனினும் அதிலும் ஒரு முரண்பாடுண்டு.
1980களில் சுன்னி முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்ட மதவிழிப்புணர்வுக்குக் காரணம் ஈரானில் ஏற்பட்ட புரட்சியும் குமேனி தலைமையில் நிறுவப்பட்ட ஆட்சியும் என்பதை மறுக்கலாமா? அந்த விழிப்புணர்வுதானே சுன்னி முஸ்லிம் நாடுகளிலும் இஸ்லாமிய அரசு வேண்டும், ஷரியாச் சட்டம் அமுல்படுத்தப்படல் வேண்டும் என்ற கிளர்ச்சிக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் போர்களுக்கும் காரணமாய் அமைந்தது? அப்போது மட்டும் ஏன் சுன்னி முஸ்லிம்கள் ஈரானின் புரட்சியை ஒரு ஷீயா பிரச்சினை என்று ஒதுக்கிவிட்டு மௌனம் சாதிக்கவில்லை? அவ்வாறு புறக்கணிக்குமாறு அமெரிக்கா போன்ற மேற்கு வல்லரசுகள் வேண்டியும்கூட அந்தப் புரட்சி சுன்னிகளிடையே எவ்வாறான ஓர் உற்சாகத்தை ஏற்படுத்தியது என்பதை விபரிக்க வேண்டியதில்லை. அதே உற்சாகம் இன்று சுன்னி மகளிரிடையே காணப்படவில்லையே என்பதுதான் ஏமாற்றமாக இருக்கிறது.
வல்லரசுகளின் ஆதரவு
ஈரானிய மகளிரின் போராட்டத்துக்கு மேற்கு நாடுகளின் ஆதரவு உண்டு. அதனை அங்குள்ள தொலைக்காட்சி ஊடகங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஆனால் அதற்கு காரணம் முஸ்லிம் மகளிரின் முன்னேற்றத்தில் அவர்களுக்குள்ள விருப்பம் அல்ல, ஈரானின் அணுவாயுதப் பலத்தை முறியடிப்பதே என்பதை முஸ்லிம் நாடுகள் உணர வேண்டும். ஈரானிய அரசு இஸ்ரவேலினதும் அமெரிக்காவினதும் முதல் எதிரி. அந்த எதிரிக்கு எதிரியாக எழுந்துள்ளது மகளிர் புரட்சி. ஆகவே எதிரியின் எதிரி நண்பன் என்ற முறையிலேயே அவர்களின் ஆதரவை விளங்க வேண்டியுள்ளது.
எந்த ஒரு முஸ்லிம் நாடும் அணுவாயுதப் பலமுள்ளதாக வளர்வதை இஸ்ரவேல் எப்பாடுபட்டும் தடுக்கும். அதற்கு உடந்தை அமெரிக்கா. இன்றைய முஸ்லிம் நாடுகளுள் அணுவாயுதப் பலமுள்ள ஒரேயொரு நாடு பாக்கிஸ்தான் மட்டுமே. ஆனால் அது ஒரு வறிய நாடு. பொருளாதார வலுவற்ற நாடு. அதனால் முஸ்லிம் உலகுக்குத் தலைமை தாங்கும் வல்லமை அந்த நாட்டுக்கு இல்லை. இனியும் இருக்குமா என்பதும் சந்தேகம். அது மட்டுமல்ல, அதற்குப் பக்கத்திலுள்ள இந்தியா அணுவாயுதப் பலத்துடனும் பொருளாதார வளத்துடனும் எழுச்சி பெறும் ஒரு பிராந்திய வல்லரசு. அதனால் பாக்கிஸ்தானை மட்டுப்படுத்தும் பணியை இந்தியாவிடம் அமெரிக்காவும் இஸ்ரவேலும் ஒப்படைத்துள்ளன.
ஆனால் ஈரானுக்கோ அதன் பெற்றோலிய வளத்துடன் அணுவாயுத பலத்தையும் வளர்க்க முடியுமானால் அதுவும் ஒரு பிராந்திய முஸ்லிம் வல்லரசாக மாறும் வாய்ப்புண்டு. எனவேதான் எப்பாடுபட்டும் அந்த வளர்ச்சியைத் தடுக்க மேற்குலகு இஸ்ரவேலுடன் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிகள். இந்தப் பின்னணியிலேதான் மகளிர் ஆர்ப்பாட்டத்துக்கான மேற்கின் ஆதரவை விளங்குதல் வேண்டும். அதே மேற்கு ஏன் சவூதிப் பெண்களின் விடுதலைப் போராட்டத்துக்குத் தனது ஆதரவை நல்கத் தயங்குகின்றது என்பதும் ஒரு புதிராகத் தோன்றவில்லையா?
தவிர்க்க முடியாத போராட்டம்
இன்றைய முஸ்லிம் பெண்களின் விழிப்பும் எழுச்சியும் நவீனத்துவத்தின் தவிர்க்க முடியாத ஓர் அங்கம். அவர்கள் வாழும் சமூகங்கள் எதிர்நோக்கும் சவால்களை ஆண்களுடன் சமநிலையில் நின்று எதிர்கொண்டு வெல்லும் சக்தி பெண்களிடம் உண்டு. ஆண்களுடன் ஒப்பிடுகையில் உடற்தோற்றமும் சரீரப் பலமும் வேறுபடலாம். ஆனால் சிந்தனையிலும் செயற்பாட்டிலும் ஆண்களையும் விஞ்சிவிடும் தன்மை அவர்களிடம் உண்டு. அது இறைவனே கொடுத்த கொடை. ஆனால் அவர்கள் சுயமாக இயங்குவதற்கு புரோகிதம் ஒரு தடையாக இருக்குமானால் அதனை தகர்த்தெறிந்துவிட்டு சுயமே செல்ல அவர்கள் துணிந்துவிட்டனர். அதைத்தான் மேற்கிலும் கிழக்கிலும் பெண்ணினம் இன்று செய்துகொண்டிருக்கிறது. அதனை வரவேற்காமல் பழமையைப் போற்றிக்கொண்டு மதத்தின் பெயராலும் மரபின் பெயராலும் புரோகிதம் தடைபோடுமாயின் அதனை எதிர்த்துக் கிளர்ந்தெழுவதைவிட வேறு வழி இல்லை. அதைத்தான் இன்று ஈரானில் நடக்கும் மகளிர் போராட்டம் உணர்த்துகிறது. மதப்பிளவை ஒதுக்கிவிட்டு சுன்னி மகளிரும் ஷீயா மகளிரின் போராட்டத்துக்கு ஆதரவு காட்ட வேண்டும். இது ஓர் இனப் போராட்டம். மதப் போராட்டம் அல்ல. – Vidivelli