(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கூரகல – தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலையும், அங்கு அமைந்துள்ள ஸியாரத்தையும் புனர்நிர்மாணம் செய்துகொள்ளும்படியும், அதற்கான ஒத்துழைப்பினையும், உதவிகளையும் வழங்குவதற்குத்தான் தயாராக இருப்பதாகவும் கூரகலயில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பெளத்த வழிபாட்டுத்தலத்துக்குப் பொறுப்பான நெல்லிகலவத்துகும்புரே தம்மரதன தேரர் தெரிவித்தார்.
எதிர்வரும் 27 ஆம் திகதி தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலில் இடம்பெறவுள்ள கொடியேற்ற வைபவம் மற்றும் பள்ளிவாசல் விவகாரங்கள் தொடர்பாக நெல்லிகல தேரருக்கும், தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்களுக்குமிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே நெல்லிகல தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கூரகலயில் அமைந்துள்ள நெல்லிகல தேரரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தொல்பொருள் வலயத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் புனர்நிர்மாணப்பணிகளுக்கு முழு ஒத்துழைப்புகளையும், உதவிகளையும் என்னிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். பள்ளிவாசலில் நடைபெறவுள்ள கொடியேற்ற நிகழ்வு மற்றும் கந்தூரி வைபவத்துக்கும் நானும் எனது மக்களும் பூரண ஒத்துழைப்பையும் வழங்குவோம். இவ்வாறான நிகழ்வுகளில் நாம் ஒன்றுபடுவதன் மூலம் எமக்கிடையிலான நல்லிணக்கத்தை பலப்படுத்திக் கொள்ள முடியும்.
கந்தூரி வைபவம் மற்றும் கொடியேற்ற வைபவம் என்பவற்றில் பங்கு கொள்ள இங்கு வருகை தரும் முஸ்லிம்கள் கூரகல பன்சலைக்குச் சொந்தமான உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.
கலந்துரையாடலில் பள்ளிவாசல் பரிபாலனசபை செயலாளர் அம்ஜட் மெளலானா உட்பட உறுப்பினர்கள் மலீக்ஷா, ஜவுபர் மெளலவி, பாஹிம்,மொஹிதீன் ஆகியோர் பங்கு கொண்டிருந்தனர். – Vidivelli