(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மீலாத் நபி விழா கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
மாலை 5.00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகித்தார். நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, பாராளுமன்ற உறுப்பினர்களான மர்ஜான் பளீல், காதர்மஸ்தான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரும் பங்கு கொண்டிருந்தார்.
ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் பயான் நிகழ்த்தப்பட்டதுடன் இஸ்லாமிய நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வரவேற்புரையை நிகழ்த்தினார்.
ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம்.முஸம்மில் நன்றியுரை வழங்கினார். அவர் தனது உரையில் ‘முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீலாத் நபி விழாவை தொடர்ந்து வருடாந்தம் ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி வருகிறார். அவர் ஜனாதிபதியாக, பிரதமராக பதவி வகித்த காலத்தில் மாத்திரமல்ல தற்போது பதவிகளில் இல்லாத காலத்திலும் இவ்விழாவை நடத்துகிறார். முஸ்லிம்களுடன் மிகவும் நெருக்கமானவர் அவர். அவரை நாம் பாராட்டுகிறோம்’ என்றார். – Vidivelli