ஜெனீவாவில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவு கணிசமாக குறைவடைவு
அடுத்த வருடம் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் சாத்தியம் என்கிறார் ஜனாதிபதி சட்டத்தரணி சுஹைர்
இலங்கை சர்வதேச நாடுகளினதும் குறிப்பாக முஸ்லிம் நாடுகளினதும் ஆதரவை இழந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எம்.சுஹைர், இம் முறை ஜெனீவாவில் இலங்கைப் பிரதிநிதிகளுக்கு முஸ்லிம் அமைச்சர் ஒருவர் தலைமை தாங்கிய போதிலும், இலங்கைக்கு முன்னர் ஆதரவளித்த முன்னணி முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் ஆதரவளிப்பதில் இருந்து தவிர்ந்து கொண்டமை இதனை தெளிவாக உணர்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சமகால விவகாரங்கள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2009 இல் இலங்கை சர்வதேசத்துடன் ஒத்துழைத்த போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் 29 நாடுகள் இலங்கைக்கு ஆதரவளித்தன. எனினும் இலங்கை ஒத்துழைக்க மறுத்த போது 2012 இல் இந்த ஆதரவு 15 ஆக குறைந்தது. 2022 இல் 7 நாடுகள் மாத்திரமே இலங்கையை ஆதரித்தன. இலங்கைப் பிரதிநிதிகளுக்கு முஸ்லிம் அமைச்சர் ஒருவர் தலைமை தாங்கிய போதிலும், இலங்கைக்கு முன்னர் ஆதரவளித்த முன்னணி முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் இம்முறை ஆதரவளிப்பதில் இருந்து விலகின. இது வெளிப்படையாகவே சர்வதேச நாடுகள் இலங்கை தொடர்பில் கொண்டுள்ள நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகின்றது.
அடுத்த முறை முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கவே வாய்ப்புள்ளது. இலங்கையில் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். சவூதி அரேபியா, ஈரான், கத்தார் போன்ற நாடுகள் எந்த ஒரு நியாயமான காரணமும் இல்லாமல் தங்கள் கால்களை இங்கு மிதித்து விட்டன என முன்னாள் ஜனாதிபதி ஒருவர் அண்மையில் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான மற்றுமொரு விசாரணை விரைவில் ஆரம்பிக்கப்படும் என கடந்த ஒக்டோபர் 3 ஆம் திகதி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இலங்கைப் பொலிஸாரால் செய்ய முடியாததை, மேற்கத்திய சார்பு நாடுகளான அமெரிக்காவின் எப்.பி.ஐ, இங்கிலாந்தின் ஸகொட்லாந்து யார்ட், அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் மற்றும் மாலைதீவு தேசிய பொலிஸ் போன்றவற்றின் புலனாய்வாளர்கள் செய்யத் தயாராக உள்ளார்களா என்ற கேள்வியை இது எழுப்புகிறது.
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையை ஏன் அனுமதிக்கக் கூடாது? நாட்டில் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் நடைபெறவில்லை என்பதே இலங்கை அரசின் நிலைப்பாடாக இருந்தால், ஈஸ்டர் தாக்குதல் விசாரணை போன்ற புதிய விசாரணை ஒன்றை ஏன் எதிர்க்க வேண்டும்? வெளிநாட்டுப் பொலிஸாரின் விசாரணைகளை அனுமதிக்கக் கூடாது என்பதே அரசின் கொள்கையாக இருந்தால், வெளிநாட்டுப் புலனாய்வாளர்களினால் முன்னெடுக்கப்படும் மற்றொரு ஈஸ்டர் விசாரணை நமக்கு ஏன் தேவை?
வெளிநாட்டுப் புலனாய்வாளர்களால் இவ்வாறான ஒரு விசாரணை முன்னெடுக்கப்படும் பட்சத்தில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 2000 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கையை எதிர்கொள்வதில் முன்னணியில் இருக்கும் சக்தி வாய்ந்த அரசாங்கங்களுக்கு போதுமான மற்றும் அதிகமான உரிமை மீறல்கள் குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் வழங்கப்படலாம். ஐநா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக வெடிக்கக்கூடிய அளவுக்கு அதிகமான மனித உரிமை மீறல் தடயங்களை அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேகரிக்க முடியும். முஸ்லிம் சந்தேக நபர்கள் தாங்கள் எதிர்கொண்ட உரிமை மீறல்கள் குறித்து மாலைதீவுகள் உட்பட வெளிநாட்டு புலனாய்வாளர்களிடம் முறையிடக் கூடும்.
ஈஸ்டர் தாக்குதல்களை விசாரிக்க தனிப்பட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரை அனுமதிப்பதற்கு நிச்சயமாக சட்டரீதியான தடைகள் உள்ளன, ஆனால் நாட்டில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஐ.நா.வுடன் ஒத்துழைப்பதற்கு அரசியலமைப்பு ரீதியான தடைகள் எதுவும் இல்லை.
ஐ.நா. அமைப்புகளுடன் ஒத்துழைப்பதானது இலங்கை மீதான குற்றச்சாட்டுகளையும் அதன் 22 மில்லியன் மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் பொருளாதார அவலத்தையும் சமாளிக்க கைகொடுக்கும். இலங்கைக்கு உணவு தொடர்பான உதவிகளை வழங்குமாறு உலக நாடுகளிடம் ஏற்கனவே ஐ.நா. வேண்டுகோள்விடுத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு விசாரணைகள் தொடர்பில் ஆட்சியாளர்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்ற முடியாது என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் கடந்த வாரம் உடுகம்பொலவில் தெரிவித்திருந்தார். “சட்டத்தை அமுலாக்கும் நிறுவனங்கள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை அரசியலாக்குவதன் மூலம் அவர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காமல், சர்வதேச அமைப்புகளின் உதவியை நாடுவது அரசாங்கத்தின் மற்றொரு தந்திரோபாயமாகும்.” ஏன அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
21 ஜூலை 2019 அன்று கட்டுவாப்பிட்டியில் அவர் ஆற்றிய உரையில் “ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒரு சர்வதேச சதி, வெறுமனே முஸ்லிம் தீவிரவாதிகளின் வேலை அல்ல” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அல் பாக்தாதி “உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாட்டினால்” நடத்தப்படும் இராணுவ முகாமில் இருப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டியிருந்தார்.
உள்நாட்டில் பொலிஸாருக்கு மேலதிகமாக சி.ஐ.டி. மற்றும் ரி.ஐ.டி இன் பலதரப்பட்ட விசாரணைகள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன. மேலும் ஆட்சி மாற்றத்தின் ஆட்சி மாற்றத்தின் பின்னர் சி.ஐ.டி மற்றும் சி.ரி.ஐ.டி.யினரின் புதிய விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டன. இதற்கு மேலதிகமாக பாராளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவையும் நாங்கள் கண்டுள்ளோம். இந்நிலையில் எமக்கு மற்றொரு உயிர்த்த ஞாயிறு விசாரணை தேவையா? இன்றும் நூற்றுக்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் மூன்றரை வருடங்களுக்கும் மேலாக பிணையின்றி இன்னமும் தடுப்புக்காவலில் வாடும்போது ஏன் இப்போது மாத்திரம் புதிய விசாரணை தேவைப்படுகிறது? என்றும் அவர் தனது அறிக்கையில் மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்.- Vidivelli