(ஏ.ஆர்.ஏ.பரீல்)
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படவேண்டுமெனவும் இதனை அடிப்படையாகக் கொண்டு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சைக் குழுக்களின் தேர்தல் வேட்புமனுப் பட்டியலில் 50 வீதமான பெண்கள் உள்ளீர்க்கப்படவேண்டுமெனவும் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரபின் தலைமையிலான பெண் அரசியல் செயற்பாட்டாளர் மற்றும் உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் பிரதமர் தினேஷ் குணவர்தனவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்தோடு பெண்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் வழங்காத கட்சிகளுக்கு தடைவிதிக்குமாறும் கோரியுள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் பெண் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக பெண் செயற்பாட்டாளர்கள் அண்மையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை கொழும்பில் சந்தித்து அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடினார்கள்.
இச்சந்திப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் விடிவெள்ளிக்கு விளக்கமளிக்கையில் ‘முஸ்லிம் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு விரும்புவதில்லை என்று ஒரு தவறான கருத்து நிலவுகிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. முஸ்லிம் பெண்கள் அனைத்து துறைகளிலும் இன்று ஆர்வம் செலுத்தியுள்ளார்கள். பதவிகள் வகிக்கிறார்கள். அரசியலிலும் ஆர்வம் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள். முஸ்லிம் பெண்கள் தீர்மானம் மேற்கொள்ளும் இடங்களிலும் இருக்க வேண்டும். பெண்களுக்கு அரசியலில் சமவாய்ப்பு வழங்கப்படவேண்டும்.
எங்களது கோரிக்கைக்கு பிரதமர் வரவேற்பு தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 10 வீத பிரதிநிதித்துவத்தை 20 வீதமாக அதிகரிப்பதற்கு பிரதமர் தீர்மானித்திருக்கிறார். இதற்கான அமைச்சரவைப்பத்திரத்தை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
உள்ளூராட்சி சபைகளில் மாத்திரமல்ல மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றத்திலும் பெண்களின் விகிதாசாரம் அதிகரிக்கப்பட வேண்டும். பிரதமர் தேர்தல் சீர்திருத்த தெரிவுக்குழுவின் தலைவராக இருக்கிறார். அவரால் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையிலான தேர்தல் சீர்திருத்தங்களைச் செய்ய முடியும்.
முஸ்லிம் பெண்கள் அரசியலில் பிரவேசிப்பது தொடர்பிலான விழிப்புணர்வுகள் ஊட்டப்பட வேண்டும் என்றார்.-Vidivelli