முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒதுக்கப்படுவதையும் பாகுபாடு காட்டப்படுவதையும் நிவர்த்தி செய்வதற்கும், முஸ்லிம்களும் பிற சமயங்களைச் சேர்ந்தவர்களும் தத்தமது மதச் சடங்குகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்கும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் தனது கடப்பாட்டை நிறைவேற்ற வேண்டும் என்றும் குறித்த பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பதில் ஆணையாளர் நதா அல் நாஸிப் இப் பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணையின் இறுதி வரைபு கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று ஒக்டோபர் 6 ஆம் திகதி இப்பிரேரணை மீதான விவாதத்தைத் தொடர்ந்து வாக்கெடுப்பை நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், அன்றைய தினமே இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையின் சாராம்சம் வாசிக்கப்பட்டு, அதுகுறித்த விவாதமும் இடம்பெற்றது. அதன் தொடர்ச்சியாக பிரிட்டன் தலைமையில் அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, வட மெசிடோனியா, மாலாவி மற்றும் மொன்ரனேக்ரோ ஆகிய இணையனுசரணை நாடுகள் இணைந்து ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்” என்ற தலைப்பில் தயாரித்துள்ள புதிய பிரேரணையின் வரைபு கடந்த வாரம் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தது. அதன்பின்னர் அப்பிரேரணை வரைபு குறித்த கலந்துரையாடல்கள் மற்றும் தர்க்கங்களைத் தொடர்ந்து அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரான 2 ஆவது வரைபு வெளியாகியிருந்த நிலையிலேயே, அதன் இறுதி வரைபு தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.
இப் பிரேரணையில் பயங்கரவாத செயற்பாடுகளை முறியடிப்பதற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் குறிப்பாக சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச அகதிகள் சட்டம், சர்வதேச மனிதாபிமானச்சட்டம் உள்ளிட்ட சர்வதேச சட்டங்கள் தொடர்பில் அரசுகள் கொண்டிருக்கும் கடப்பாடுகளுக்கு ஏற்புடையதாக அமையவேண்டும் என்றும் இணையனுசரணை நாடுகள் இப் பிரேரணையில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli