ஏ.ஆர்.ஏ.பரீல்
‘‘முஸ்லிம்கள் எங்கிருந்தோ வந்த அகதிகள். பயங்கரவாதிகள். இலங்கை ஓர் பெளத்த நாடு. முஸ்லிம்களுக்கு இங்கு இடமில்லை. அவர்களை சவூதி அரேபியாவுக்கு விரட்டியடிக்க வேண்டும், சவூதி அரேபியர்கள் வஹாபிஸவாதிகள் என கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை இலங்கையிலுள்ள சவூதி தூதுரகம் கெளரவித்திருக்கிறது.
சவூதி அரேபியாவின் 92 ஆவது தேசிய தின நிகழ்வுக்கு ஞானசார தேரர் கடந்த 23 ஆம் திகதி அழைக்கப்பட்டிருந்தார். சவூதி தூதரகம் அவரை கெளரவித்திருக்கிறது. விருந்து வழங்கியிருக்கிறது.
கொழும்பு சங்கிரில்லா ஹோட்டலில் நடைபெற்ற சவூதி தேசிய தின நிகழ்வில் ஞானசார தேரரும் அதிதிவரிசையில் வெட்கமில்லாமல் அமர்ந்திருந்தார்.
அல்லாஹ்வையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் நிந்தித்தவர் அவர். புனித குர்ஆனை அவமதித்தவர் அவர். அந்நிய மதத்தவர்களை, இஸ்லாமியர்களை எதிர்ப்பவர்களை கொலை செய்யுமாறு குர்ஆன் போதித்துள்ளது என வாய்கிழிய கத்தியவரே ஞானசார தேரர்.
நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சபாநாயகர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியூதீன், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள்,முப்படைகளின் உயர் அதிகாரிகள், அரச உயர் அதிகாரிகள் வருகை தந்திருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப்ஹக்கீம் மற்றும் ரிசாத் பதியுதீன் ஆகியோர் உணவு உண்ணும் பிரதான வி.ஐ.பி.மேசையில் அமரவில்லை. அவர்கள் குறுகிய நேரமே நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் ஞானசார தேரருடன் ஹுணுப்பிட்டி கங்காராமய பன்சலையின் பிரதமகுரு கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரரும் கலந்து கொண்டிருந்தார்.
ஞானசார தேரர்
சவூதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வில் ஞானசார தேரர் கலந்து கொண்டமைக்கு சமூக வலைத்தளங்களிலும், முகநூல் பக்கங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் பதிவாகி வருகின்றன. கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக கோஷமிட்டுவந்த ஞானசாரதேரரை குறிப்பாக அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் குர் ஆனையும் அவமதித்த அவரை தேசிய தின நிகழ்வுக்கு அழைத்து அமர வைத்த சவூதி தூதரகத்துக்கு, எதிராகவும் கணடனக் குரல்கள் வலுத்து வருகின்றன.
“நான் சவூதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வில் கலந்து கொண்டமை குறித்து ஊடகங்களே விமர்சிக்கின்றன. மக்களைக் குழப்பியடிக்கின்றன. சமூக ஊடகங்களில் குறிப்பாக முகநூல்களில் வெளியிடப்படும் விமர்சனங்கள் மற்றும் பழிச்சொற்கள் தொடர்பில் நான் அலட்டிக் கொள்ளப்போவதில்லை’’ என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்டமை தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
சமூக ஊடகங்கள் மற்றும் முகநூல் பதிவுகள் தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், ‘‘எவரும் என்னை விமர்சிக்கலாம். கேலி செய்யலாம். அவர்கள் பற்றி யாருக்குக் கவலை? தேவையான அளவு விமர்சித்துவிட்டோம். கேலி செய்து விட்டோம் என அவர்கள் நினைக்கும்போது விமர்சனத்தை நிறுத்திக்கொள்வார்கள். எமது நாட்டு மக்களுக்கு விமர்சிப்பதற்கும் கேலி செய்வதற்கும் மாத்திரமே தான் தெரியும்’’ என்றார்.
ஞானசார தேரர் இந்நாட்டின் சிறுபான்மை மக்கள் மீது குறிப்பாக முஸ்லிம்கள் மீது தொடர்ந்து வெறுப்புப் பேச்சுக்களை வெளியிட்டு வந்தவர். இவர் பற்றி முழு நாடும் அறியும். இவ்வாறான ஒருவரே சவூதி தூதுவரினால் நிகழ்வுக்கு விசேட அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார். ஞானசார தேரர் நிகழ்வில் கலந்து கொண்டதனையடுத்து முகநூல் பக்கங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அவரை கேலி செய்யும் வகையிலான பதிவுகள் வெளியிடப்பட்டன. ஞானசார தேரரை சவூதி அரேபியாவின் தேசிய தின வைபவத்தில் கலந்து கொள்ள அழைத்தமை முஸ்லிம் சமூகத்தை அகெளரவப்படுத்தியமை என அப்பதிவுகள் தெரிவித்துள்ளன.
இலங்கையிலுள்ள சவூதி தூதரகத்துக்கு அவர்களது தேசிய தின நிகழ்வில் கலந்து கொள்வதற்கு ஞானசார தேரரைத் தவிர வேறு யாரும் இருக்க வில்லையா?
நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட ஞானசார தேரர் பலவருட காலமாக முஸ்லிம் சமூகத்தை இன ரீதியாக எதிர்த்து வந்தவர். இன வன்செயல்களைத் தூண்டியர். இவ்வாறான ஒருவர் சவூதியின் தேசிய நிகழ்வுக்கு எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார் என முகநூல் பக்கங்களும், சமூக வலைத்தலங்களும் கேள்வியெழுப்பியிருந்தன.
ஞானசார தேரர் மேலும் சில பெளத்த குருமார்களை இணைத்துக் கொண்டே பொதுபல சேனா என்ற அமைப்பை நிறுவினார். இலங்கையைப் பாதுகாப்பதற்கும், பெளத்த மதத்தை பாதுகாப்பதற்கும் என உருவாக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பு நாளடைவில் ஓர் இனவாத அமைப்பாக மாற்றம் கண்டது. இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் ஞானசார தேரரின் அமைப்பு எதிர்த்தது.
இலங்கை பெளத்த நாடு. பெளத்தர்களுக்கு மாத்திரமே நாடு சொந்தமானது. ஏனைய மதத்தினர் பெளத்தர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வாழ முடியுமென்றால் வாழலாம். இல்லையேல் வெளியேறிச் செல்ல வேண்டும் என்று ஞானசார தேரர் சூளுரைத்தார். குறிப்பாக முஸ்லிம்கள் சவூதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்படவேண்டுமென்றார்.
இலங்கையின் பிரச்சினைகளுக்கு வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்களே காரணம் என்றார்.
2019 ஆம் ஆண்டு இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை இறுதி அறிக்கையிலும் ஞானசார தேரரின் வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதிராக தொடராக வெறுப்பு பேச்சுகளை வெளியிட்டார். வஹாபிஸ கொள்கைகளை எதிர்த்து முஸ்லிம் சமூகத்தைப் பொதுவாக எதிர்த்து வந்தார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு ஞானசார தேரரின் பொதுபல சேனா அமைப்பு தடை செய்யப்பட வேண்டும். அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
இவ்வாறான ஒருவர்தான் சவூதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வினை அலங்கரித்திருக்கிறார்.
இது மாத்திரமல்ல பதவி விலகிய முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவரின் எண்ணக்கருவான ‘ ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதை அமுல்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஜனபாதிபதியின் செயலணியின் தலைவராக நியமித்திருந்தார். இச்செயலணியின் இறுதி அறிக்கை முன்னாள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இறுதி அறிக்கையில் முஸ்லிம்களின் உரிமைகளை பறித்தெடுக்கும் வகையிலான இன ரீதியான சிபாரிசுகளையே அவர் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஞானசார தேரரை நிகழ்வில் உள்வாங்கிக் கொள்வதற்கு முன்பு இலங்கையின் சவூதி தூதரகம் முஸ்லிம் சமூகத்தலைவர்களின் மதத்தலைவர்களின் ஆலோசனையைப் பெற்றிருக்க வேண்டும். சவூதி தனது தேசிய நிகழ்வுக்கு ஞானசார தேரரரை அழைத்ததன் மூலம் இலங்கை முஸ்லிம்களை மாத்திரமன்றி இந்நாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை விரும்புகின்ற சகல மக்களையும் அகெளரவப்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் ஞானசார தேரரை சவூதி தனது நாட்டுக்கு அழைத்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தது. தற்போது அவரை தமது நிகழ்வொன்றுக்கு அதிதியாக அழைத்துள்ளது. தேரருடன் சவூதி தூதரகம் நெருக்கமான உறவைப் பேணுவது ஏன் என்ற கேள்வியை பலரும் எழுப்புகின்றனர். இதற்கு தூதரகம் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளது. – Vidivelli