முஸ்லிம் திணைக்கள கட்டிட விவகாரம்: புத்திஜீவிகள் அமைப்பு ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடத் தீர்மானம்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இயங்கி வரும் கொழும்பு 10 ரி.பி.ஜாயா மாவத்தையிலுள்ள கட்டிடத்தின் ஒரு பகுதியை ஏனைய மத திணைக்களங்களுக்கு வழங்க புத்தசாசன, கலாசார மற்றும் மத விவகாரங்கள் அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானத்தை முஸ்லிம் புத்திஜீவிகள் அமைப்புகள் எதிர்த்துள்ளன.
கம்பஹா மாவட்ட புத்திஜீவிகள் அமைப்பு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடுவதற்குத் தீர்மானித்துள்ளது. மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது.
கம்பஹா மாவட்ட புத்திஜீவிகள் அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு – மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தில் ஒன்றுகூடி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கட்டிடம் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் ஏனைய பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தது. இக்கூட்டத்திலே மேற்குறிப்பிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புத்திஜீவிகள் அமைப்பின் கூட்டத்துக்கு சவூதி அரேபியாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஹுசைன் முஹம்மத் தலைமை வகித்தார். புத்த சாசன அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானத்தை உடனடியாக நிறுத்துவதற்கு உத்தரவிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.
குறிப்பிட்ட கட்டிடம் முஸ்லிம்கள் தொடர்பான பல்வேறு அரச நிறுவனங்களை உள்வாங்குவதற்காகவே நிர்மாணிக்கப்பட்டது. என்றாலும் பல தடைகள் காரணமாக கட்டிடத்தின் மூன்று மாடிகளைத் தவிர ஏனைய மாடிகள் பூரணப்படுத்தப்படவில்லை. இந்நிலைமையை சாதகமாகப் பயன்படுத்தியே அரசு கட்டிடத்தின் பூரணப்படுத்தப்படாத மாடிகளைப் பொறுப்பேற்றுள்ளது.
பூரணப்படுத்தப்படாதுள்ள கட்டிடத்தின் ஏனைய மாடிகளைப் பூரணப்படுத்தி வக்பு சபை, வக்பு ட்ரிபியுனல், காதிகள் மேன்முறையீட்டுச் சபை மற்றும் அதன் ஆவண களஞ்சியசாலை, அரச ஹஜ் குழு, அரபுக் கல்லூரிகளின் தலைமையகம், வாசிகசாலை என்பனவற்றை உள்வாங்குமாறு புத்திஜீவிகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளாதாக அமைப்பின் இணைச்செயலாளர்களான அலிஹசன் மற்றும் ஏ.ஆர்.எம்.முஸம்மில் ஆகியோர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தனர்.
முஸ்லிம் புத்திஜீவிகள் அமைப்பின் கூட்டத்தில் முன்னாள் பரீட்சை ஆணையாளர் ஏ.எஸ்.மொஹமத், முஸ்லிம் கலாசார அமைச்சராகவிருந்த லக் ஷ்மன் ஜயகொடியின் இணைப்புச் செயலாளராக கடமையாற்றிய உவைன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதியுடன் ரவூப் ஹக்கீம்
முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கட்டிடத்தின் ஒரு பகுதி இந்து மற்றும் கிறிஸ்தவ திணைக்களங்களுக்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி உட்பட உலமாக்கள் இவ்விவகாரத்தை ரவூப் ஹக்கீமின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து அவர் இவ்விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதாக தெரிவித்ததாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸிம் தெரிவித்தார்.- Vidivelli