சர்வதேச சமூகத்தின் தலையீட்டில் பலஸ்தீனப் பிரச்சினை அவசரமாத் தீர்க்கப்படவேண்டும், பலஸ்தீனர்களுக்கு தமது நிலப்பரப்பெல்லைக்குள் அவர்தம் அனைத்துவகையான வளங்களையும் முழுமையாகப் பயன்படுத்த மறுக்கமுடியாத உரிமையுள்ளது போலவே அவர்களுக்கான சுயாதீன, சுயநிர்ணயமுள்ள தனித்தேசமொன்றை அமைத்தாளவும் அவர்கள் உரிமையுள்ளவர்கள். இதுவே இலங்கையின் பலஸ்தீனப் பிரச்சினை தொடர்பான மாறாத கொள்கை நிலைப்பாடாகும் என இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 77வது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் தனது பொது விவாதக் கருத்துரையின் போதே அமைச்சர் சப்ரி இவ்வாறு தெரிவித்தார்.
சர்வதேச அரங்கில் நாடுகள் எதிர்நோக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் உலகம் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தைப் பற்றி அவர் மேலும் பேசுகையில், பலஸ்தீனப் பிரச்சினை தொடர்பில் நிரந்தர சமாதானத் தீர்வொன்றுக்கான அனைத்துவகையான முஸ்தீபுகளையும் அவசியமான நடவடிக்கைகளையும் பலஸ்தீனம் இஸ்ரேல் ஆகிய இருதரப்பினரதும் பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் அனைத்து பொறிமுறைகளுக்கும் இலங்கை எப்போதும் ஆதரவளிக்கும் உறுதியான நிலைப்பாடிலேயே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அந்த வகையில் இரு-தேச ( Two-state solution ) உருவாக்க தீர்வு யோசனையையே இலங்கை எப்போதும் ஆதரிப்பதாகவும் அமைச்சர் சப்ரி தெரிவித்தார்.- Vidivelli