கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் அம்மாகாணங்களின் தமிழ்சார்ந்த பாரம்பரியத்தையும் அதன் தனித்துவத்தையும் நீக்கி அல்லது குறைத்து, காலப்போக்கில் அம்மாகாணங்களையும் சிங்கள பௌத்த மாகாணங்களாக மாற்றவேண்டும் என்ற கனவு அப்பேரினவாதிகளிடையே சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பிருந்தே குடிகொண்டிருந்தது. சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் அக்கனவு அரசாங்கங்களின் குடியேற்றத் திட்டங்களாலும் அபிவிருத்தித் திட்டங்களாலும் தேர்தல் தொகுதி எல்லை மாற்றங்களாலும் படிப்படியாக நனவாகத் தொடங்கிற்று. அம்மாகாணங்களின் இன்றைய இனவாரியான குடிசனச் செறிவும் தேர்தல் தொகுதிகளும் அந்த உண்மையை உறுதிப்படுத்துகின்றன.
இந்த மாற்றங்களின் தொடர்ச்சியாக திருகோணமலையின் குச்சவெளிப் பிரதேசத்தின் ஒரு பகுதியை கிழக்கு மாகாணத்தைவிட்டும் நீக்கி வடமேற்கு மாகாணத்துடன் இணைப்பதற்கான பேரினவாதத்தின் ஒரு திருவிளையாடலை தமிழ் தலைவர்கள் கண்டித்து அரசாங்கத்துடன் முறையிட்டுள்ளனர். ஆனால் அதைப்பற்றி கிழக்கு மாகாண முஸ்லிம் பிரபலங்கள் வாய்திறவாதிருப்பது புதுமையல்ல எனினும் கவலைக்குரியதும் ஆபத்தானதும் என்பதை முஸ்லிம்கள் உணரவேண்டும். சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ்ப் பகுதியைத்தானே குறிவைக்கிறது என்ற எண்ணத்தில் முஸ்லிம்கள் ஆறுதல் அடைந்தால் அந்தக் குறி ஒரு நாள் முஸ்லிம் பகுதிகளுக்குத் திரும்பும்போது தமிழினம் மௌனமாவதை குறைகூற முடியாது. அப்படியான நிகழ்வுகள் இதற்கு முன்னரும் நடைபெற்றுள்ளன. உதாரணமாக, முல்லைத்தீவில் நீராவியடிப்பிள்ளையார் கோயில் வளாகத்திலே ஒரு பௌத்த பிக்குவின் சிதையை பௌத்த பேரினவாதிகள் எரித்து கோயிலின் புனிதத்தைக் கெடுத்து இந்துமக்களின் சாபத்தையும் கோபத்தையும் தேடியபோது முஸ்லிம் தலைமைகள் வாய்திறவாதிருந்தனர். அதேபோன்று மகர சிறைச்சாலைப் பள்ளிவாசலை பாதுகாப்பு அதிகாரிகள் அபகரித்து அதனை அவர்களின் களியாட்ட மண்டபமாக மாற்றியபோதும், கூரகலையில் தப்தர் ஜெய்லானியின் ஒரு பகுதியைத் தரைமட்டமாக்கி அதன் அருகேயுள்ள பௌத்த விகாரை விஸ்தரிக்கப்பட்டபோதும் தமிழ் தலைமைகள் மௌனிகளாயினர். இவ்வாறு ஏட்டிக்குப் போட்டியாக இரு இனங்களின் தலைமைத்துவங்களும் நடந்து கொண்டால் பேரினவாதத் தீயில் ஈரினங்களும் வெந்து மடிவதைத் தடுக்க முடியாது. இப்பொழுது நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி முல்லைத்தீவில் ஆதிசிவன் ஐயனார் கோவில் நிலத்தில் அரசின் அங்கீகாரத்துடன் பௌத்த விகாரை ஒன்று கட்டப்படுகின்றது. முஸ்லிம் பிரபலங்கள் இதனைக் காணாததுபோல் இருப்பது வேதனைக்குரியது.
இந்தப் பின்னணியில் அபிவிருத்தி என்ற பெயரிலும் தன்னியப்படுத்தல் (assimilation) என்ற பெயரிலும் சீனக் குடியரசு உய்கர் முஸ்லிம்கள் செறிந்து வாழும் சின்ஜியாங் பிரதேசத்தை எவ்வாறு ஹான்சீனப் பிரதேசமாக்கி முஸ்லிம்களின் மத கலாசாரத் தனித்துவத்தையும் அழித்துள்ளது என்பதைப் பற்றிய சில உண்மைகளை அறிந்துகொண்டால் சீன நண்பர்களாக மாறும் பௌத்த சிங்களப் பேரனவாதிகளின் அந்தரங்கத் திட்டங்களை விளங்கிக்கொள்வது இலகுவாக இருக்கும். (உய்கர் முஸ்லிம்களின் வரலாற்றை விரிவாக அறிய விரும்புவோர் James A. Millward vOjpa Eurasian Crossroads, Hurst & Company, London, 2021, புதிய பதிப்பைப் படிக்கவும்).
உய்கர் முஸ்லிம்களுக்கு ஆயிரம் வருட வரலாறு உண்டு. அவர்கள் விரும்பியதெல்லாம் சீனப் பொதுவுடமைக் குடியரசின்கீழ் தன்னாட்சியுள்ள ஒரு பிரதேச சபை அவர்களுக்கு வேண்டும் என்பது மட்டுமே. சீனக் குடியரசின் அரசியல் யாப்பின்கீழ் தமது மொழியையும், மதத்தையும் கலாசாரத்தையும் பாதுகாப்பதற்காகவே அதனை வேண்டினர். அதைத்தானே தமிழினமும் இங்கே வேண்டுகிறது. இருந்தும் ஹான் சீனர்களுக்கு இலங்கையின் சிங்களப் பேரினவாதிகளைப்போன்று அந்தக் கோரிக்கை பிரிவினைவாதமாகத் தோன்றியது. அதன் விளைவாக உருவாகியதே உய்கர் இனமாற்றக் கொள்கை.
இந்தக் கொள்கையின் முதற் கட்டம் சின்ஜியாங் உய்கர்களின் பிரதேசம் என்ற வரலாற்றை முற்றாக நிராகரித்தமை. இரண்டாவது கட்டம், அப்பிரதேசத்துக்குள் ஹான் சீனர்களைக் குடியேற்றியமை. அடுத்த கட்டம் அபிவிருத்தியென்ற பெயரில் முஸ்லிம்களின் நிலங்களை தொழிற்சாலைகளுக்காகவும் பண்ணைகளுக்காகவும் அரசு அபகரித்து அங்கே ஹான் சீனர்களுக்குத் தொழிலும் நிலமும் வழங்கியமை. இந்தக் கட்டத்தில் உய்கர்களின் மத கலாசாரத்தில் ஹான் சீனப்பண்புகளை பாடசாலைப் பாடப்புத்தகங்கள் மூலம் புகுத்தியமை. இறுதியாக தீவிரவாத ஒழிப்பு என்ற போர்வையில் தனிப்பட்ட முகாம்களுக்குள் உய்கர்களை அடைத்து மூளைச்சலவை செய்தமை. அதன் நோக்கம் தன்னியப்படுத்தல் என்ற பெயரில் பல்லின அமைப்பை உதறித்தள்ளி ஒரே இனமாக, அதாவது ஹான் இனமாக அனைத்து சீன மக்களையும் மாற்றுதலே. கோத்தாபயவின் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற மந்திரத்தின் அந்தரங்கமும் இதுதானே. இவையெல்லாம் சுதந்திர இலங்கையின் தமிழருக்கெதிரான அரசியல் வரலாற்றை ஞாபகப்படுத்தவில்லையா?
குறிப்பாக, முஸ்லிம்களைப் பொறுத்தவரை கடைசி இரண்டு கட்டங்களின் சாயல்களும் கோத்தாபய ஜனாதிபதி ஆட்சியில் காணப்பட்டது என்பதையும் மறுக்கலாமா? சுருக்கமாகச் சொன்னால் சீனாவிலே ஹான் பேரினவாதம் கற்பித்த பாடங்களை இலங்கையிலே சிங்கள பௌத்த பேரினவாதம் மீட்டல் செய்கின்றது. எனவேதான் இப்பேரினவாதம் எந்த இனத்துக்கெதிராக எவ்வெவ் வழிகளில் அவிழ்த்துவிடப்பட்டாலும் அதனை எல்லா இனங்களும் அதிலும் குறிப்பாக சிறுபான்மை இனங்கள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப வேண்டும்.
பேரினவாதம் இந்த நாட்டின் அரசியல் சமூகப் புற்றுநோய் என்பதை இப்பத்திரிகையில் இதற்கு முன் வெளிவந்த ஒரு கட்டுரை குறிப்பிட்டது. இன்று நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கும் இந்த நோயே முக்கிய காரணம் என்பதையும் அக்கட்டுரை சுட்டிக்காட்டியது. எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து புரையோடிக் கிடக்கும் இந்தப் புண்ணை வெட்டியெறிந்து நோயாளியைக் குணப்படுத்த வேண்டும் எனபதை நோக்காகக் கொண்டுதான் சிங்கள பௌத்த இளைஞர்களே கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் கிளர்ந்தெழுந்தனர். அந்தக்கிளர்ச்சி இன, மத, மொழி வேறுபாடின்றி அனைத்து மக்களையும் அரவணைத்து நடத்தப்பட்டபோதும் வடக்கிலும் கிழக்கிலும் அதற்கான ஆதரவு குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கவில்லை என்பதை ஏமாற்றத்துடன் இங்கே பதிவு செய்ய வேண்டியுள்ளது. தாங்கள் 25 ஆண்டுகளாக சிங்கள பௌத்த இராணுவத்தினரின் அளவிடமுடியாத கொடுமைகளால் நசுக்கப்பட்டபோது எந்த அனுதாபமும் காட்டாத சிங்கள இளைஞர்கள் இப்போது மட்டும் எங்களை நாடுவதேன் என்ற மனோபாவத்தில் தமிழர்களும், இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என்ற மனோநிலையில் முஸ்லிம்களும் சிக்குண்டமையே அவர்களது மந்தமான ஆர்வத்திற்குக் காரணம் என்றும் கருதலாம். இந்த நிலை மாறவேண்டும்.
இன்று வளர்ந்துள்ள இளைஞர் சமுதாயம் இதற்கு முன்வந்த இளைஞர் பரம்பரையிலிருந்து முற்றாக வேறுபட்டதொன்று. இது பூகோள ரீதியான ஓர் வேறுபாடு. சர்வதேச ரீதியில் இன்றைய இளைஞர்கள் கல்வி வளர்ச்சிகண்டு உலக விவகாரங்களைப்பற்றிய விழிப்புணர்வுடனும் ஒருவருக்கொருவர் நெருங்கிய தொடர்புடனும் செயற்படுகின்றனர். வளர்ச்சி கண்ட நாடுகளிலும் வளர்ச்சி காணத்துடிக்கும் நாடுகளிலும் அவ்விளைஞர்களின் செயற்பாடுகளும் கிளர்ச்சிகளும் அரசியல் பொருளாதார சமூகக் கொள்கைளில் தடம் பதித்துள்ளன. இதற்கு இலங்கை விதிவிலக்காக இருக்க முடியாது.
அதைத்தான் அவர்களின் அறப்போராட்டம் எடுத்துக்காட்டியது. அவர்கள் முன்வைத்த அடிப்படை மாற்றம் என்ற கோரிக்கை பேரினவாதத்துக்கு விடுக்கப்பட்ட ஒரு சவால். பேரினவாதத்தின் மடியிலே வளர்ந்த இன்றைய அரசியல்வாதிகளுக்கு அவ்விளைஞர்களின் எழுச்சிக்குரல் ஓர் அபாய சங்காக ஒலித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. அதனாலேதான் அவர்களின் ஆதரவில் ஜனாதிபதியாகிய ரணில் விக்கிரமசிங்ஹ அந்தக்கிளர்ச்சிக்கார இளைஞர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் சிறைக்குள் அடைத்துள்ளார். அதனை உலகமே கண்டிக்கிறது. எனவேதான் சிறுபான்மை இனங்கள் இரண்டும் சிங்கள பௌத்த இளைஞர்களின் போராட்டத்துக்குப் பூரண ஆதரவை வழங்க வேண்டும்.
அது ஒரு புறமிருக்க, இன்று குச்சவெளியில் திட்டமிடப்பட்டுள்ள பிரதேசப் பிரிவு பேரினவாத ஆட்சியின் இன்னோர் அத்தியாயம் என்பதை உலகறியச் செய்ய வேண்டும். தமிழ்த் தலைவர்கள் அதனை கண்டிக்கின்றனர்; ஆனால் அதனை தமிழருக்குள்ள ஒரு தனிப்பிரச்சினையாக முஸ்லிம்கள் கருதிக்கொண்டு வாழாவிருத்தல் ஆபத்தானது. ஏற்கனவே கூறப்பட்டதுபோன்று இலங்கையின் எந்தவொரு மூலையிலும் சிறுபான்மை இனத்தவர் பெரும்பான்மையாக இருக்கக்கூடாது என்பதே சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடிப்படைக் கொள்கை. அந்தக் கொள்கைக்கு முஸ்லிம்கள் செறிந்து வாழும் இடங்களும் ஒரு நாள் பலியாகும் என்பதை முஸ்லிம் தலைமைகள் உணர்வார்களா? அதை உணர்ந்தால் தமிழ் தலைவர்களுடன் சேர்ந்து குச்சவெளி நாடகத்தை அரங்கேறாது தடுக்கவேண்டும்.
முடிவாக ஓர் உண்மையை மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டியுள்ளது. அதாவது சிங்கள பௌத்த மக்கள் இயல்பிலே கருணை உள்ளம் படைத்தவர்கள். சினேகிதர்களாகப் பழகுவதற்கும் நம்பிக்கையுடன் உறவாடுவதற்கும் அவர்களுக்கு இணையாக இன்னொரு சமூகத்தை உலகிலே காண்பது அரிது. ஆனால் அவர்களின் அரசியல்வாதிகளினதும் அவர்களுக்கு ஆதரவாக இயங்கும் ஒரு காவியுடைப் படையினதும் அதிகார ஆசையும் திருகுதாளங்களும் சேர்ந்து அந்த மக்களை பேரினவாதம் என்ற மகுடியில் மயங்க வைத்துள்ளது. அந்தப் பேரினவாதமே சிறுபான்மை இனங்களிடையேயும் இனவாத அரசியலுக்கு வித்திட்டது என்றால் அது மிகையாகாது. இதை உணர்ந்ததனாலேதான் சிங்கள பௌத்த இளைஞர்கள் அதனை வெட்டிவீச முற்பட்டுள்ளனர். அவர்களின் முயற்சிகளுக்கு வலுவூட்டுவது சிறுபான்மை இனங்களின் கடமை.- Vidivelli