பாவலர் அருள்வாக்கி – கவித்துவப் புலமைக்கு அப்பால் (கி.பி. 1866-1918)

0 425

கலாநிதி எம்.ஐ.எம்.அமீன்
முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர்,
பேராதனைப் பல்கலைக்கழகம்.

அருள்வாக்கி கற்றோரும் மற்றோரும் பாராட்டும் ஒரு புலவர். கவிதைத்துறையில் அவரிடம் இருந்த புலமையின் மேம்பாடு காரணமாக அருள்வாக்கி, வித்துவசிரோமணி, கவிவாணர், வித்துவதீபம் முதலான பட்டங்களை அவருக்கு வழங்கி கற்றோர்கள் அவரைப் பாராட்டினர். எனினும் அவரது கவித்துவப் புலமை பேசப்பட்ட அளவு அவரது கவிதைகளின் கருவாய் அமைந்த ஆன்மீகத்துறையில் அவருக்கிருந்த ஈடுபாடு பற்றி போதியளவு ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் அவர் பற்றியதான சரியானதோர் பார்வையை சமூகம் பெற முடியாது போயுள்ளது.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றின் மறுமலர்ச்சிக் காலப்பிரிவில் அருள்வாக்கி அப்துல் காதிர் (கி.பி. 1866 –1918) வாழ்ந்தவர். இலங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அறிஞர் எம். சி. சித்திலெப்பை (கி. பி. 1838 –1898) மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (கி. பி. 1816 –1898) அப்துல்லாஹ் பின் உமர் பாதிப் அல்யமனி (மர. கி. பி. 1892) கஷாவத்தை ஆலிம் (மர. கி. பி. 1893) ஐ. எல். எம். ஏ. அஸிஸ் (மர. கி. பி.1915) முதலானோர் சமய சமூகப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலப்பகுதியிலேயே அருள்வாக்கியும் வாழ்ந்துள்ளார்.

இவர்கள் மேற்கொண்ட சமய சூழலில் நவீன கல்வி, ஆன்மீக எழுச்சி, மூடநம்பிக்கைகளை களைதல், சமூக சீர்திருத்தம் என்பன அருள்வாக்கி அப்துல் காதிர் அவர்களின் காதை எட்டாதோ, உள்ளத்துள் கிளர்ச்சியைத் தோற்றாதோ இருந்திருக்க முடியாது.

அட்டகிரி எட்டையும் உருட்டிப் பந்தாடுவேன். வானத்தை வில்லாக வளைப்பேன், வானத்தில் இருந்து மழையைப் பெய்விப்பேன் என்று கி. பி. 1881 இல் தனது பதினாறாவது வயதில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கவி அரங்கில் மிடுக்காகவும், துணிவாகவும் கூறியதால் ‘அருள்வாக்கி’ என்று பாராட்டப்பட்ட இவ்விளைஞன் தான் கல்வி பயின்ற கண்டி நகரில் பலர் அறிய வாழ்ந்த பிரமுகரான எம். சி. சித்திலெப்பையையோ, 1882 இல் அவர் கண்டியில் வெளியிட்ட முஸ்லிம் நேசனையோ அதன் இலக்கையோ அறியாதிருப்பதற்கு எதுவித நியாயமும் இல்லை.

முஸ்லிம் நேசன், ஐ. எல். எம். அஸீஸ் வெளியிட்ட முஸ்லிம் பாதுகாவலன் எனும் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டுள்ள அருள்வாக்கியின் பாடல்கள் அக்காலம் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தப் பணிகளினால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தார் என்பதைக் காண்பிக்கின்றன. அக்காலை மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த முயற்சிகளில் ஒன்றான ஆன்மீக எழுச்சியை தோற்றுவிப்பதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார் என்பதை அவரது நூல்கள் காண்பிக்கின்றன.

மூடநம்பிக்கைகளைக் களைந்து, சன்மார்க்க நெறிமுறைகளைப் பேணி, ஆன்மீக எழுச்சியை மேம்படுத்த அவரது காலத்தில் வாழ்ந்த முஸ்லிம் சீர்திருத்தவாதிகள் எடுத்த முயற்சிகள் அவரைக் கவர்ந்துள்ளன. அவற்றுள் ஆன்மீக எழுச்சி எனும் சிந்தனை அவரது கவிதைகளின் கருப்பொருளாக அமைந்து உள்ளமை நோக்கத்தக்கதாகும்.

அருள்வாக்கி தனது 46 ஆம் வயதில் இலகு நடைப்படுத்தி எழுதிய ‘தன்பீஹுல் முரிதீன்’ எனும் நூலின் ஆசிரியர் ஷாஹுல் ஹமீது ஆலிமுல் காதிரி என்பவர், இந்நூலைத் தான் எழுதியதற்கான காரணத்தைத் தனது முகவுரையில் குறித்துள்ளார். அது கீழ்வருமாறு : “இக்காலத்திலுள்ள சிலர் பிரசங்கித்து வருகின்ற வீண் பிரசங்கங்களையும், அவர்களின் வாய்மொழிகளையும் எனது செவியாற் கேட்ட நாள் முதலாக, அவர்கள் கொண்டிருந்த பயனற்ற சந்தேகங்களையும் வீண் குதர்க்கங்களையும் முற்றாக நீக்கி நேர்வழியைப் பின்பற்றி நடந்து கொள்ளக்கூடிய பாகமாய் ஓர் புத்தகம் இயற்றி வெளியிட வேண்டும் என்கின்ற பிரதானமான எண்ணமெனதுள்ளத்திற் குடிகொண்டிருந்தது.”
(இது அருள்வாக்கி இலகு நடைப்படுத்தி எழுதிய பிரதியில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது.)

“…. கல்பில் உள்ள நசலாகிய முகத்தாட்சினை, பெருமை, அகப்பெருமை, தன்மதிப்பு, மேலெண்ணம், வஞ்சகம், இன்னும் நாவினால் உண்டாகிய, பொய், புறம், கோள், பரிகாசம், நிந்தனை, ஏசுகிறது வசை சொல்வது பொய் வழக்கு, சத்தியம், வீண்பேச்சு, பெரும்பேச்சு, வீண்பாடல், தர்க்கம், ……… இன்னும் ‘காதினால் உண்டாகிற ஒட்டுக்கேட்பது, வீண்ராகம் கேட்பது, ஆகாப் பேச்சு கேட்பது, இன்னும் செயலால் உண்டாகும் அநியாயம், கொலை, களவு, வட்டி, ஸினா, கள்க்குடி, தாய், தந்தை, குரு நோவினை குறைய அளத்தல், குறைய நிறுத்தல் …. இப்படிப்பட்ட வியாதிகள் ஒவ்வொன்றுக்கும் எதிரிடையாகிய கலப்பறுதல், தன்னைப்பழித்தல், நீதம், பொறுமை, பொறுதி, சற்குணம் குளிர்ந்த முகம் துன்யாவினுகப்பை வெறுத்தல், நல்லெண்ணம், இப்படிப்பட்ட அவுதங்களினால் மருந்து செய்து… இரவில் முழித்து தனித்து தஹஜ்ஜதும், பின்பு ழுஹா, இஷ்ராக்கு, அவ்வாபீன் சுன்னத்தான தொழுகை, சுன்னத்தான நோன்பு, சதகா, இஹ்சான். ….மற்றும் நன்னடத்தைகளையும் கொண்டுவருவதுடன் தக்வாவை எடுத்த தௌபாவுடனே மௌத்தாகும் அளவும் நடப்பது விதியாகும்.”

இவ்வாறு ஆன்மீக எழுச்சிக்குக் குந்தகம் விளைவிக்கும் உள நோய்களையும் அதற்கான பரிகாரங்களையும் ‘தன்பீஹுல் முரிதீன்;’ எனும் இந்நூலில் இனங்காட்டப்பட்டிருப்பதும், தன்காலத்தில் சமூக சீர்திருத்தத்துக்கும் ஆன்மீக எழுச்சிக்கும் சித்திலெப்பை போன்றோர் மேற்கொண்ட முயற்சியால் அருள்வாக்கி கவரப்பட்டிருந்தமையும் இந்நூலை சாதாரண மக்களும் விளங்கக்கூடியதாக இலகு நடைப்படுத்தி அவர் எழுதுவதற்கும் காரணம் என்று கருத முடியும்.

ஆன்மீக எழுச்சியும் அதன் வழியிலான சமூக சீர்திருத்தமும் அவரது உயிர் நாடியாகவே இருந்தது என்பதை அவரது கவிதைகள் காண்பிகின்றன. ஆன்மீக ஞானிகள் எல்லாம் தமது ஆன்மிகப் பயிற்சியில் தௌபாவுக்கு முதன்மை கொடுப்பர். அருள்வாக்கியும் தௌபாவை மறக்கவில்லை. அடிமையாகிய மனிதன் அல்லாஹ் ஆகிய தன் எஜமானிடம் தன் பாவங்களை மன்னிக்குமாறு கோருவதே ‘தௌபா’ எனப்படுகிறது. தன் பாவங்களை மன்னிக்குமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சும் அருள்வாக்கியின் பாடல் வரிகள் சூபிக்கள் எனப்படும் ஆன்மீக ஞானிகளின் உளப்பாங்கையே உணர்த்துகின்றன.

“………………. மன்னா உன்னிடம்
இரந்து கேட்கின்றோம் ஏகனே எங்களை
மன்னித்தருள்க, மகிமை பூண்டவா
உன்னையல்லாமல் உறுதுணை யில்லையே
மனத்தால் பொறியால் மனமல்ல-நாட்டத்தால்
சினத்தால் குணத்தால் செயலால் சொல்லால்
கேள்வியால், பார்வையால் கிலைக்கும் கலையால்
நடந்தும் இருந்தும் சரிந்தும் கிடந்தும்
பிடித்தும் இழுத்தும் பலவந்தம் செய்தும்
சேர்ந்தும் தனித்தும் செய்பிழை அனைத்தும்
…………
முற்றுமே பொறுத்து குற்றம் அகற்றி
காத்தருள் காத்தருள் காத்தருள் இலாஹி…….”
(அருள்வாக்கியின் “தௌபா” எனும் தலைப்பில் பாடப்பட்டுள்ள பாடல் வரிகளில் இருந்து எடுக்கப்பட்டவை)

அடைக்கலம் வழங்கத் தகுதியானவனும் புகலிடமோ அடைக்கலமோ கோரப்படுவதற்குத் தகுதியானவனும் கருணையாளனும், கொடையாளனும் ஆகிய அல்லாஹ் ஒருவன் மட்டும் என்பதையும் அவனல்லாத மற்றெவருக்கும் அத்தகுதி இல்லை என்பதை அருள்வாக்கி அறிந்திருந்ததால் “தௌபா” கேட்டுத் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு அல்லாஹ்விடம் அடைக்கலம் கோருகின்றார். ஆன்மீக எழுச்சிக்கு பாவமன்னிப்புக் கோருவது போலவே அல்லாஹ்வில் ‘தவக்குல்’ வைத்து அவனது ஆதரவை நாடி அடைக்கலம் தேடிப் பாடிய பாடல் ஒவ்வொன்றினதும் ஈற்றடியில் அல்லாஹ்வின் அழகு திருநாமங்களில் ஒன்றைக் கூறுவதன் மூலம் அல்லாஹ்வைப் புகழ்ந்து அடைக்கலம் கோருகின்றார்.

’இவ்வாறு அல்லாஹ்வின் திருநாமங்கள் ஒவ்வொன்றும் தரும் பண்புகளைச் சுட்டிக்காட்டி தனக்கு அடைக்கலம் தருமாறு இறைஞ்சுவது அவர் தன் ஆன்மாவின் ஈடேற்றத்தை தன் ஆன்மீக எழுச்சியை மனப்பூர்வமாகவே விரும்பி அடைக்கலம் தேடியுள்ளார் என்பதைத் தெளிவாக்குகின்றது.

அருள்வாக்கிக்கு பெரும்புகழைத் தேடிக் கொடுத்த ‘சந்தத் திருப்புகழ்’ எனும் அவரது நூல் நபிகளாரைக் கருப் பொருளாகக் கொண்டு பாடப்பட்டதாகும். பாவலர் அருள்வாக்கி அப்துல் காதிர் இந்நூலிலும் தன் ஆன்மீக மேம்பாட்டிற்கு உதவுமாறு நபிகளிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதைக் காண முடிகிறது.

“கரும சேம நெறியாது
மறிக லாத கொடுமூடர்
கனசினேக மதுவே செய் சிறியோனை
கறை படியாத பரலோக
நகரமேகி யுற வாச
கமல பாத மலர் காண வருள்விரே”
“ மாபெரும் கருத்தியற்று
மோன முத்தி வெற்றி பெற்று
வாழுமச்சிறப்பெனக்கு மருள்விரே”

“அருளிற்றெறிந்த வேதியரோதிய
சறகைத் தெரிந்துயானுமறாதும
தடியிற் பணிந்து மாதவமே பெற வருள்விரே”

தனது ஆன்ம ஈடேற்றத்துக்கு உதவுமாறு விண்ணப்பம் செய்யும் இன்னும் பல பாடல்கள் இந்நூலில் உள்ளன.

அருள்வாக்கியின் உள்ளத்துள் ஆன்மீக உணர்வு ஆழமாக ஊன்றி இருந்ததால் தான் அவர் யாத்ததாகப் பட்டியல் இடப்பட்டுள்ள பேரின்ப ரஞ்சிதமாலை, ஆரிபுமாலை, ஞானப் பிரகாசமாலை, மெய்ஞ்ஞானக் குறவஞ்சி, அருள்மணி மாலை, முனாஜாத்து அடைக்கலமாலை, இறைநேசச் செல்வரான முகியத்தீன் அப்துல் காதிறு மீதான பிள்ளைத் தமிழ் மற்றும் சில வலிமார்கள் மீதான பாடல்கள் என்பன பாடப்பட்டிருக்க வேண்டும். மேற்குறித்த நூல்களின் தலைப்புகள் எல்லாம் ஆன்மீக சிந்தனையுடன் தொடர்புடையவை என்பதும் நினைவிற் கொள்ளத் தக்கதாகும். இப்பாடல் நூல்களை மக்களிடம் பிரபல்யப்படுத்துவதுடன் நில்லாது அவை உள்ளடக்கியுள்ள ஆன்மீக சிந்தனையையும் ஆராய்தல் வேண்டும். இத்தகையதோர் ஆய்வு அருள்வாக்கியின் கவித்துவப் புலமைக்கு அப்பால் அவர் உள்ளத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆன்மீக சிந்தனைகளையும் அவரது கால இஸ்லாமிய இலக்கியத்தின் பண்புகளையும் புரிந்து கொள்ளப் பெரிதும் உதவும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.