ஏ.ஆர்.ஏ.பரீல்
இலங்கை முஸ்லிம்களுக்கென்று நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்ட, தற்போது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இயங்கி வரும் 9 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தை அரசு கையகப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரசின் இத் தீர்மானத்தை அறிந்து முஸ்லிம்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
இக்கட்டிடத்தை ஏற்கனவே அமைச்சரவை புத்தசாசன அமைச்சுக்கு சொந்தமாக்கிக் கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. 2021 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமரும், புத்தசாசன மற்றும் கலாசார மத விவகாரங்களுக்கான அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்து அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டார்.
ஆனால் இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. அமைச்சரவையின் இத்தீர்மானத்தை தாம் பத்திரிகை வாயிலாகவே அறிந்து கொண்டதாக அப்போதைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரிவிக்கிறார்.
இன்று சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் முஸ்லிம் சமூகத்துக்கென நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டிடதத்தின் மூன்று மாடிகள் பூரணப்படுத்தப்பட்டு 2017 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்
திணைக்களத்தின் வரலாறு
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்று தனியானவோர் திணைக்களம் 1981 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட இத்திணைக்களம் அப்போதைய போக்குவரத்து அமைச்சர் மர்ஹூம் எம்.எச். முஹம்மதின் பொறுப்பில் விடப்பட்டது. ஏற்கனவே கொழும்பு, கெப்படிபொல மாவத்தையில் இயங்கிவந்த வக்பு பிரிவும் இத்திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. இத்திணைக்களம் அன்று டி.ஆர்.விஜேயவர்தன மாவத்தையில் இயங்கி வந்த போக்குவரத்து அமைச்சின் மேல்மாடியில் இயங்கியது.
போக்குவரத்து அமைச்சராக இருந்த மர்ஹூம் எம்.எச். முஹம்மத் சபாநாயகராக பதவியேற்றதன் பின்பு போக்குவரத்து அமைச்சின் மேல்மாடியில் இயங்கிவந்த இத்திணைக்களம் 1990 ஆம் ஆண்டு அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த மர்ஹூம் பதியுதீன் மஹ்மூத் பணியாற்றிய கொழும்பு—02, மலே வீதியிலிருந்த கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
1986 ஆம் ஆண்டிலிருந்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு என ஒரு நிரந்தர கட்டிடம் தேவை என்பது உணரப்பட்டது. திணைக்கள ஊழியர்கள் தற்போது 9 மாடிக்கட்டிடம் அமைந்துள்ள ரயில்வே திணைக்களத்துக்கு சொந்தமான காணியில் நிரந்தர கட்டிடம் ஒன்றை நிறுவமுடியுமல்லவா? என்ற ஆதங்கத்தில் இருந்தனர். அப்போதைய போக்குவரத்து அமைச்சர் இக்காணியை பெற்றுத்தராமை குறித்து அவருக்கு குறை கூறிக்கொண்டுமிருந்தனர்.
1994 ஆம் ஆண்டு போக்குவரத்து அமைச்சராக லலித் அத்தலத் முதலியின் மனைவி ஸ்ரீமணி அத்துலத் முதலி பதவியில் இருந்தார். அவரின் இணைப்புச் செயலாளராக இஸ்ஸத் என்பவர் செயற்பட்டுக்கொண்டிருந்தார். இவர் மாலை நேரங்களில் தினமும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு விஜயம் செய்து பேசிக்கொண்டிருப்பார். அப்போது திணைக்கள பணிப்பாளராக மர்ஹூம் யு.எல்.எம்.ஹால்தீனும், பிரதிப் பணிப்பாளராக ஜே.மீரா மொஹிதீனும் கடமையாற்றினார்கள். இவர்களது கலந்துரையாடலின்போதே காணி விவகாரம் வெற்றிபெற்றது. அப்போது திணைக்களம் கலாசார அமைச்சின் கீழ் செயற்பட்டது. காணி பெற்றுக்கொள்ளும் முயற்சிக்கு அப்போதைய கலாசார செயலாளராக இருந்த இரந்த குணசேகர பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியபோதும் மர்ஹூம் யு.எல்.எம். ஹால்தீனின் முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. காணி அமைச்சரினால் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டது.
ஆரம்பத்தில் தற்போதைய கட்டிடத்துக்கு முன்னால் உள்ள அதாவது பாதையோரத்தில் முன்பு காமினி படமாளிகை இருந்த இடத்திலே காணி ஒதுக்கப்பட்டது. என்றாலும் மர்ஹூம் எம்.எச். முஹம்மத் நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது குறித்த காணி நகர அபிவிருத்திக்கு தேவைப்படுவதாக கூறி அதற்குப் பதிலாக தற்போது கட்டிடம் உள்ள காணியை ஒதுக்கினார்.
1996ஆம் ஆண்டு சவூதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த பாராளுமன்றக் குழுவினால் புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நடப்பட்டது. என்றாலும் அது பலனளிக்கவில்லை. ஈரானிய தூதரகம் கட்டிடம் நிர்மாணித்துத் தருவதற்கு முன்வந்தது. பெரும்பாலானோர் இதனை விரும்பாததால் அம்முயற்சி கைவிடப்பட்டது. 1998ஆம் ஆண்டு இலங்கையில் 50 ஆவது சுதந்திரதினம் கொண்டாடப்பட்டபோது பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளவில் அப்போதைய பிரதிப்பணிப்பாளர் ஜே.மீரா மொஹிதீன் கட்டிடத் தொகுதியின் மாதிரியொன்றினை காட்சிக்கு வைத்திருந்தார்.
இதேவேளை 2004ஆம் ஆண்டு அப்போதைய துறைமுகங்கள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சராக இருந்த ரவூப் ஹக்கீம் சுமார் 5 மில்லியன் ரூபா செலவில் தற்காலிக கட்டிடமொன்றை குறிப்பிட்ட காணியில் நிர்மாணித்தார். இந்த தற்காலிக கட்டிடத்துக்கு 2004இல் திணைக்களம் இடமாற்றப்பட்டது. கொழும்பு 05ல் செயற்பட்டு வந்த வக்பு பிரிவும் இடமாற்றப்பட்டது.
தற்போதைய 9 மாடிக்கட்டிடம்
2006 ஆம் ஆண்டு தற்போதைய 9 மாடிக் கட்டிடத்துக்கான அடிக்கல் நடப்பட்டது. அப்போதைய கலாசார பிரதி அமைச்சர் திஸ்ஸ கரல்லியத்த அடிக்கல்லை நட்டி வைத்தார். அன்று அமைச்சராக ரவூப் ஹக்கீமும், திணைக்கள பணிப்பாளராக எம்.ஐ.அமீரும் பதவி வகித்தனர். இது மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியின் தொடக்க காலமாகும்.
ஆரம்பகாலத்தில் இக்கட்டிடத்துக்கு வக்பு ஹவுஸ் என்றே பெயர் வைக்கப்பட்டிருந்தது. ஸ்ரீமணி அத்துலத் முதலி போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்தபோது இக்காணி வழங்கப்பட்டது. அவர் காணியை வழங்குவதற்கு முன்பு அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவை தொடர்புகொண்டு இதற்கான அனுமதியைக் கோரினார்.
சந்திரிகா பண்டாரநாயக்க உடனே காணியை வழங்குமாறும் அதற்கான வேலியையும் அமைத்துக் கொடுக்குமாறு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கட்டிட நிர்மாணப் பணிகள் சி.ஈ.பி என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. கட்டிட நிர்மாணப் பணிகள் மந்தகதியிலே இடம்பெற்றன. இக்கட்டிடம் இஸ்லாமிய கட்டிட கலையுடன் அமைந்திருந்ததால் அப்போதைய கலாசார அமைச்சின் செயலாளர், ‘இக்கட்டிடத்தின் வடிவமைப்பை நான் முன்கூட்டியே அறிந்திருந்தால் அதனை நிறுத்தியிருப்பேன்’. என்றார். ஏனென்றால் இக்கட்டிடம் ஒரு பள்ளிவாசலைப்போன்று அமைந்திருந்தது. இதனால் இக்கட்டிடம் பூரணப்படுத்தப்படவில்லை. இன்றும் பூர்த்தியடையாத நிலையிலே உள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சராக எம்.எச்.ஏ.ஹலீம் நியமனம் பெற்றதையடுத்து அவர் இக்கட்டிட நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார். அப்போது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தற்காலிக கட்டிடத்திலேயே இயங்கி வந்தது. அங்கு பாரிய இடநெருக்கடி நிலவியது. இதனை அவதானித்த அமைச்சர் ஹலீம் அப்போதைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை அழைத்து வந்து கட்டிடத்தின் நிலைமையை காண்பித்தார். நிலைமையை அவதானித்த நிதி அமைச்சர் 296 மில்லியன் ரூபாய்களை நிர்மாணப்பணிகளுக்காக ஒதுக்கினார்.
திணைக்கள கட்டிடம் அமைந்துள்ள ரயில்வே காணியைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி, முன்னாள் பிரதியமைச்சர் மர்ஹூம் அலவி மெளலானா, முன்னாள் அமைச்சர் மர்ஹூம், எம்.எச்.முஹம்மத் உட்பட பலர் முயற்சி செய்தனர்.
முன்னாள் பணிப்பாளர் எம்.ஐ.அமீர்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கத்தின் பணிப்பாளராக 2002 முதல் 2008 வரை எம்.ஐ.அமீர் பதவி வகித்தார். திணைக்களம் இயங்கிவரும் 9 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளுக்காக திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் எம்.ஐ.அமீர் பாரிய பங்களிப்புகளைச் செய்துள்ளார். அப்போதைய முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் அலவி மெளலானா ஆகியோரை அணுகி அவர்கள் மூலம் நிதியமைச்சர் மற்றும் பஷில் ராஜபக்ஷ மூலம் காலத்துக்குக் காலம் நிதியினைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
முன்னாள் பணிப்பாளர் எம்.ஐ.அமீர் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், குறிப்பிட்ட 9 மாடிக்கட்டிடம் முஸ்லிம்களுக்காக வழங்கப்பட்டதாகும். காணி ஆணையாளரினால் இந்தக்காணி வழங்கப்பட்டது. இக்காணி 80 பர்ச் அளவுள்ளதாகும். இக்கட்டிடத்தின் 9 மாடிகள் முஸ்லிம் நிறுவனங்களான வக்பு சபை, வக்பு ட்ரிபியுனல், காதிகள் சபை, அஹதியா, அரபுக்கல்லூரிகளின் தலைமையகம், கொழும்பு காதிநீதிமன்றம்,வாசிகசாலை, தொழுகை அறை, ஹஜ் குழு, முஸ்லிம்களது கலை கலாசார நிலையம் என்பவற்றை உள்வாங்குவதற்காக நிர்மாணிக்கப்பட்டதாகும். முஸ்லிம் விவகாரங்களுக்கென தனியான ஒரு அமைச்சு உருவாக்கப்பட்டால் அவ்வமைச்சையும் உள்வாங்கும் வகையிலேயே இந்த 9 மாடிக்கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் முஸ்லிம்களுக்கென வழங்கப்பட்டுள்ள இந்த சொத்தை பாதுகாப்பது எமது கடமையாகும். எனவே முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இக்கட்டிடத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.
முன்னாள் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப்
இக்கட்டிடத்தில் 6 மாடிகள் பூரணப்படுத்தப்படாத நிலையிலே இருக்கிறது. 3 மாடிகளிலேயே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இயங்கி வருகிறது.
எம்.எச்.ஏ.ஹலீம் முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சராக பதவி வகித்த காலத்தில் கட்டிட நிர்மாணப்பணிகளை பூர்த்தி செய்வதற்கு 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் நிதியொதுக்கித்தருமாறு கோரினோம். எமது கோரிக்கையை திறைச்சேரியின் பிரதி செயலாளர் மறுத்தார். மூன்று மாடிகளில் உத்தியோகத்தர்கள் 60 பேர் பாரிய இடவசதியை பயன்படுத்துகிறீர்கள். நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது. இது பயனுள்ள முதலீடு அல்ல என்று தெரிவித்தார்.
திணைக்கள Muslim Charity Fund இல் 60 மில்லியன் ரூபா இருக்கிறது. இதில் 40 மில்லியன் ரூபாவை கோரி எஞ்சியுள்ள கட்டிட நிர்மாண பணிகளைச் செய்வோம் என்று அமைச்சர் ஹலீமிடம் கூறினேன். ஆனால் அது நடைபெறவில்லை.
பின்பு குவைத் ஸக்காத் நிதியத்திடம் உதவி கோட்போம் என்றேன். அமைச்சரை கலந்துரையாடுவதற்கு குவைத்துக்கு அழைத்தார்கள். குறைந்தது Muslim Minority Fund இலிருந்து தருகிறோம் என்றார்கள். குவைட்டுக்கு செல்வோம் வாருங்கள் என்று அமைச்சரை கூப்பிட்டேன். பயணத்துக்கு ஒரு மில்லியன் செலவாகும் எனக்கூறி அதற்கும் அவர் உடன்படவில்லை.
கடந்த பொதுத்தேர்தலுக்குப்பின்பு இந்தக் கட்டிட மாடிகளை அளப்பதற்கு பல அரச நிறுவனங்கள் வந்தன. கலால் திணைக்களம் கூட வந்தது. இக்கட்டிடத்தில் நிலைகொள்வதற்கே வந்தன. பொதுத் தேர்தலுக்குப்பின்பு இவ்வாறான நிலைமையே ஏற்பட்டது.
ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராக பதவி வகித்தபோது கட்டிடத்தின் ஒரு பகுதியை மருந்து களஞ்சியப்படுத்தி விநியோகிக்க தருமாறு கோரினார். அவர் அமைச்சர் ஹலீமுக்கு இது தொடர்பில் கடிதமொன்றையும் அனுப்பி வைத்தார். ஆனால் ராஜிதவின் கடிதத்துக்கு பதில் அனுப்பப்படவில்லை என்றார்.
இதேவேளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் வை.எல்.எம். நவவி, எம்.ஸமீல், உதவிப்பணிப்பாளர் ஜே.மீரா மொஹிதீன் போன்றவர்கள் பூரணப்படுத்தப்படாதுள்ள ஏனைய 6 மாடிகளை பூரணப்படுத்திக்கொள்வதில் அதிகம் ஆர்வமுடையவர்களாக காணப்பட்டனர்.
முன்னாள் பணிப்பாளர் எம்.ஸமீல்
“நான் பணிப்பாளராக பதவி வகித்த காலத்திலே 2017 ஜனவரியில் இந்தக்கட்டிடத்தின் 3 மாடிகள் திறந்து வைக்கப்பட்டன. நான் 2013 முதல் 2017 பெப்ரவரி வரை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவியில் இருந்தேன். கட்டிடத்தின் ஏனைய 6 மாடிகளையும் அரசாங்கத்தின் நிதியுதவியினாலேயே செய்து முடிப்போம் என்று அன்று முஸ்லிம் சமூகம் கூறியது’’ என திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் எம்.ஸமீல் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ‘கட்டிடத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க வேண்டும். நாம் அரசியல் கட்சி ரீதியில் பிரிந்திருந்து இவ்விவகாரத்தில் சுமுகமான தீர்வொன்றினை பெற்றுக்கொள்ள முடியாது’. என்றார்.
முன்னாள் அமைச்சர் ஹலீம்
முஸ்லிம்களுக்கென நிர்மாணிக்கப்பட்ட 9 மாடிக்கட்டிடத்தை முஸ்லிம் சமூகம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். முஸ்லிம் அரச நிறுவனங்கள் மற்றும் சமய, கலாசார அலுவல்கள், அஹதியா அரபுக்கல்லூரிகளின் தலைமையகங்கள் என்பவற்றை ஒரே மையத்தில் உள்வாங்கிக்கொள்வதற்காகவே இக்கட்டிடம் வடிவமைக்கப்பட்டது என முன்னாள், முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
அவர் மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், கட்டிடத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் கட்சி வேறுபாடுகளின்றி ஒன்றுபடவேண்டும். பூர்த்தி செய்யப்படாதுள்ள ஏனைய 6 மாடிகளின் நிர்மாணப்பணிகள் முஸ்லிம் தனவந்தர்களின் பங்களிப்புடன் பூர்த்தி செய்யப்பட்டு காலம் தாழ்த்தாது முஸ்லிம் அரச நிறுவனங்கள் உள்வாங்கிக்கொள்ளப்படவேண்டும். ஜனாதிபதியுடன் கலந்துரையாடி சுமுகமான தீர்வு பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையுண்டு என்றார்.
விரைந்து செயற்பட வேண்டும்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அமைந்துள்ள 9 மாடிக்கட்டிடம் முஸ்லிம்களுக்கென்றே காணி ஆணையாளரினால் பாரப்படுத்தப்பட்டதாகும். முஸ்லிம் அரசியல் தலைவர்களும், விடயத்துக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர்களும் செயற்படாது மெளனம் காத்தமையே இன்றைய ஆபத்தான நிலைமைக்குக் காரணமாகும்.
திணைக்கள கட்டிடத்தை சுவீகரித்துக்கொள்ள திட்டமிட்டுள்ள அதிகாரிகள் பயன்படுத்தப்படாதுள்ள 6 மாடிகளின் சாவிக் கொத்துகளை கோரி நிற்கும் அளவுக்கு இன்று நிலைமை மோசமாகியுள்ளது.
முஸ்லிம் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திட்டமிட்டு செயற்படாமையே இந்நிலைமைக்கு காரணம் எனலாம்.
அரசாங்கத்தின் திட்டமிடப்பட்டுள்ள கொள்கைகளின்படி தற்போது வாடகைக்கட்டிடங்களில் இயங்கிவரும் அரச நிறுவனங்கள் அரச கட்டிடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளன. எனவே திணைக்கள கட்டிடம் இன்று சவால்களை எதிர்நோக்கியுள்ளது.
இன்று இட நெருக்கடிகளை எதிர்நோக்கி, களஞ்சிய வசதிகளின்றி அல்லலுறும் முஸ்லிம் நிறுவனங்கள் முன்கூட்டியே வெற்றிடமாகவுள்ள கட்டிடத்தின் 6 மாடிகளுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கவேண்டும். கொழும்பு 12 இல் இயங்கிவரும் காதிகள் மேன்முறையீட்டு சபை ஏற்கனவே இங்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கவேண்டும். இந்தக் கோரிக்கை பல தடைகள் சமூகத்தால் முன்வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்தக்கோரிக்கைகள் உயரதிகாரிகள், சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் மத்தியில் செவிடன்காதில் ஊதிய சங்காகவே காணப்பட்டது. இது ஓர் உதாரணம் மாத்திரமே. எனவே தான் முஸ்லிம் அமைச்சர்களும்,அரசியல் தலைமைகளும் விரைந்து செயற்படவேண்டும் என்கிறோம். கட்டிடம் கைநழுவிச் செல்லாது பாதுகாப்பது எம் அனைவரினதும் பொறுப்பாகும்.- Vidivelli