(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கண்டி – கட்டுகலை ஜும்ஆ பள்ளிவாசலில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஜும்ஆ தொழுகையை 60 பெளத்த பிக்குகள் நேரில் பார்வையிட்டனனர். இவர்களில் இளம் பிக்குகளும் அடங்கியிருந்தனர். சிங்கள மொழியில் ஜும்ஆ பிரசங்கம் இடம்பெற்றது.
கண்டி – புர்கானியா அரபுக்கல்லூரியில் பெளத்தம், சிங்களமொழி பாடங்களாக போதிக்கப்படுகின்றமைக்கு தங்கள் நன்றிகளைத் தெரிவிப்பதற்காக கொனகலகெல உதித தேரர் தலைமையில் வருகை தந்த பெளத்த தேரர்கள் குழுவினரே அன்றைய தினம் கட்டுக்கலை ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற ஜும்ஆ தொழுகையையும் பார்வையிட்டனர்.
புர்கானியா அரபுக் கல்லூரியில் 120 மாணவர்கள் பயில்கிறார்கள். அங்கு ஏனைய மதங்களான இந்து சமயமும், கிறிஸ்தவ சமயமும் போதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பெளத்த தேரர்கள் குழுவினர் அங்கு நிறுவப்பட்டுள்ள நட்புறவு நிலையம் மற்றும் வாசிகசாலை, புர்கானியா அரபுக்கல்லூரியையும் பார்வையிட்டனர்.
இந்நிகழ்வினை கட்டுகலை ஜும்ஆ பள்ளிவாசலின் செயலாளர் கே.ஆர்.ஏ. சித்தீக் ஏற்பாடு செய்திருந்தார்.
கொனகலகெல உதித தேரர் அங்கு உரையாற்றுகையில், எமது நாட்டில் இனங்களுக்கிடையில் நற்புறவையும், சகோதரத்துவத்தையும், சமயங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் பலப்படுத்துவதற்கு புர்கானியா அரபுக்கல்லூரியின் செயற்திட்டங்கள் முன்மாதிரியாக அமைந்துள்ளன. முஸ்லிம் மக்களும் நாமும் ஒன்றாக ஒற்றுமைப்பட்டு வாழ வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றார்.
அரபுக்கல்லூரி மாணவர்களையும் பள்ளிவாசல் நிர்வாகிகளையும் பன்சலைக்கு விஜயம் செய்யுமாறும் வேண்டிக்கொண்டார்.
கொனகலகெல உதித தேரருக்கு கட்டுக்கலை ஜும்ஆ பள்ளிவாசல் செயலாளர் புனித குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பு பிரதியொன்றினையும் கையளித்தார்.- Vidivelli