(எம்.எப்.எம்.பஸீர்)
மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலை தகர்ப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, வழக்குத் தொடரப்பட்ட 16 பிரதிவாதிகளில் மூவரை வழக்கிலிருந்து விடுவித்த சப்ரகமுவ மாகாண மேல் நீதிமன்றின் (கேகாலை) மூவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு (ட்ரயல் அட் பார்) மேலும் 11 பேருக்கு 7 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 மாத கால சிறைத் தண்டனையை அளித்து விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந் நிலையில் அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் 5 பேர், தீர்ப்பறிவிக்கப்பட்டதிலிருந்து ஒன்றரை மாதங்களின் பின்னரேயே விடுதலை பெற்று கடந்த சனியன்று வீடு திரும்பியுள்ளனர்.
எனினும் ஏனைய 9 பேருக்கும் வெவ்வேறு நீதிமன்றங்களில் வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதால் அவர்கள் மட்டும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்றால் விடுவித்து விடுதலை செய்யப்பட்ட 3 ஆம் பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த மொஹம்மட் அக்பர் மொஹம்மட் முனீப் 4 ஆம் பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த மொஹம்மட் சுபியான் மொஹம்மட் இர்ஷாத் ஆகியோரும், ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முதலாம் பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த மொஹம்மட் அல்பர் மொஹம்மட் அஸ்பாக், 2 ஆம் பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த மொஹம்மட் பைசர் மொஹம்மட் முப்தி, 5 ஆம் பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த மொஹம்மட் அஸ்ஹர் அதீக் அஹமட் ஆகியோரே ஒன்றரை மாதங்களின் பின்னர் இவ்வாறு சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வீடு சென்றுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 2 ஆம் திகதி சப்ரகமுவ மாகாண மேல் நீதிமன்றில் (கேகாலை) நீதிபதி ஜகத் கஹந்தகமகே தலைமையிலான ஜயகி டி அல்விஸ் மற்றும் இந்திகா காலிங்கவங்ச ஆகிய நீதிபதிகள் அடங்கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற அமர்வு புத்தர் சிலை தகர்ப்பு விவகாரங்கள் குறித்த வழக்கில் தீர்ப்பறிவித்திருந்தது. அதன்படியே இந்த 14 பேரும் விடுவிக்கப்பட்டனர் (ஒத்தி வைக்கப்பட்ட சிறை உட்பட).
எனினும் இந்த ட்ரயல் அட்பார் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையுடன் தொடர்புபட்ட பொத்துஹர சிலை தகர்ப்பு தொடர்பில் பொல்கஹவல நீதிவான் நீதிமன்றிலும், வெலம்பொட சம்பவம் தொடர்பில் கம்பளை நீதிவான் நீதிமன்றிலும் விசாரணை முன்னெடுக்கப்பட்டபோது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அந்த வழக்கிலக்கங்களின் கீழும் சந்தேக நபர்களாக பலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அதில், ட்ரயல் அட்பார் நீதிமன்றம் விடுதலை செய்த, ஒத்தி வைத்த சிறைத் தண்டனை அளித்த நபர்களும் உள்ளடங்கியிருந்தனர்.
இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் கேகாலை ட்ரயல் அட்பார் நீதிமன்றம் தீர்ப்பளித்த போதும் விடுதலை செய்யப்பட்டவர்களால் வீடுகளுக்கு செல்ல முடியவில்லை.
எவ்வாறாயினும் பொத்துஹர மற்றும் கம்பளைச் சம்பவங்களும், கேகாலை ட்ரயல் அட்பார் நீதிமன்ற வழக்கில் உள்ளீர்க்கப்பட்டிருந்ததால் அவற்றிலிருந்தும் பிரதிவாதிகள் விடுவிக்கப்பட்டிருந்தனர். எனினும் அது குறித்த விபரங்கள் பொல்கஹவல மற்றும் கம்பளை நீதிமன்றங்களுக்கு உரியவாறு அறிவிக்கப்பட்டிருக்காத நிலையில் தொடர்ச்சியாக விடுவிக்கப்பட்டவர்கள் சிறைகளில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது தொடர்பில், ட்ரயல் அட்பார் நீதிமன்ற வழக்கில் 1,2,5,12,13,16 ஆம் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தவர்களுக்காக மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் தலைமையில் சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸ் உள்ளிட்ட குழுவினரும் 6,7,8,10 மற்றும் 11 ஆம் பிரதிவாதிகளுக்காக ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமையிலான வசீமுல் அக்ரம் உள்ளிட்ட சட்டத்தரணிகளும் ஏனைய பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் சிலரும் மேல் நீதிமன்ற நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.
‘இது தொடர்பில் கேகாலை ட்ரயல் அட்பார் நீதிமன்றின் நீதிபதிகள் மற்றும் சட்ட மா அதிபரின் கவனத்துக்கு கொண்டு வந்தோம். அதன் பின்னர் ட்ரயல் அட்பார் நீதிமன்றின் தலைமை நீதிபதியின் எழுத்து மூல அறிவிப்பினை பெற்று அதனூடாக பொல்கஹவல மற்றும் கம்பளை நீதிமன்றங்களுக்கு அவற்றை சமர்ப்பித்து விடுதலைக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.’ என இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களில் பலருக்காக ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் விடிவெள்ளியிடம் தெரிவித்தார்.
‘முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அடுத்து 5 பேர் கடந்த சனியன்று சிறைச்சாலைகளில் இருந்து வீடு திரும்பினர். ஏனையோர் மேலும் சில வழக்குகளை மையப்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் தொடர்பிலும் பிணை மற்றும் விடுதலை பெற்றுக்கொள்வது குறித்து சட்ட மா அதிபருடன் பேசப்பட்டு வருகிறது’ என இவ்வழக்கில் ஆஜரான சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸ் விடிவெள்ளியிடம் தெரிவித்தார்.
கொழும்பு நீதிவான் நீதிமன்றில் உள்ள வழக்கு, நுவரெலிய மேல் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கு, கொழும்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன் உள்ள வழக்கு போன்றவற்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில், மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவகாரத்தில் விடுவிக்கப்பட்ட, ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை அளிக்கப்பட்ட 9 பேரின் பெயர்கள் உள்ளடங்கி இருப்பதால் அவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் வட்டார தகவல்கள் ஊடாக அறிய முடிந்தது.
கடந்த 2018 டிசம்பர் 25 ஆம் திகதி அதிகாலை நேரத்தில் குருநாகல் மாவட்டம் பொத்துஹர பொலிஸ் பிரிவின் கட்டுபிட்டிய வீதியில் கோண்வல பகுதியில் அமையப்பெற்றுள்ள ஆலயம் ஒன்றில் இந்து கடவுள்களைக் குறிக்கும் உருவச்சிலைகள் அடையாளம் தெரியாதோரால் அடித்து நொறுக்கி சேதமாக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பில் பொத்துஹர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது கடந்த 2018 டிசம்பர் 26 ஆம் திகதி இதனையொத்த ஒரு சம்பவம் யட்டிநுவர -வெலம்பொட பொலிஸ் பிரிவில் பதிவானது.
அதிகாலை 3.00 மணியளவில் வெலம்பொட பொலிஸ் பிரிவின் லெயம்கஹவல பகுதியில் மூன்றரை அடி உயரமான புத்தர் சிலை அடையாளம் தெரியாதோரின் தாக்குதலுக்கு உள்ளானது. அத்துடன் அந்த மூன்றரை அடி உயரமான புத்தர் சிலை சேதப்படுத்தப்பட்ட அதே நேரம் அதனை அண்டிய பகுதியில் இருந்த மேலும் மூன்று சிறு சிலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் அதே தினம் அதிகாலை 4.00 மணியளவில் மாவனெல்லை – திதுருவத்த சந்தியில் உள்ள புத்தர் சிலையும் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அனைத்து சம்பவங்களையும் மையப்படுத்தியே கேகாலை மேல் நீதிமன்றில் 16 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் கீழும், பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்தலை தடுப்பது தொடர்பிலான சர்வதேச இணக்காப்பாட்டு சட்டத்தின் கீழும் 21 குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரு சமூகங்களிடையே மோதலை உருவாக்க சதித் திட்டம் தீட்டியமை, 5 புத்தர் சிலைகளை தகர்த்தமை, சமூகங்களுக்கிடையே வெறுப்புணர்வுகளை தூண்டியமை, தோப்பூர், மாவனெல்லை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா பகுதியில் அதற்கான வதிவிட கருத்தரங்குகள் மற்றும் ஆயுதப் பயிற்சியினைப் பெற்றமை தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழும், ஆயுதப் பயிற்சி மற்றும் கருத்தரங்குகளுக்கு தேவையானவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கியமை தொடர்பில் பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை தடுக்கும் சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
2019 ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடாத்திய பயங்கரவாதி சஹ்ரான் மற்றும் முறைப்பாட்டாளர் அறியாதவர்களுடன் இணைந்து பிரதிவாதிகள் இக்குற்றத்தை புரிந்துள்ளதாக சட்ட மா அதிபர் குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தார்.
இக்குற்றச்சாட்டுக்களை உறுதி செய்ய 49 தடயப் பொருட்களையும், 92 சாட்சியாளர்களின் பட்டியலையும் சட்ட மா அதிபர் குற்றப் பத்திரிகையில் இணைத்திருந்தார்.
1.மொஹம்மட் அல்பர் மொஹம்மட் அஸ்பாக்
2.மொஹம்மட் பைசர் மொஹம்மட் முப்தி
3.மொஹம்மட் அக்பர் மொஹம்மட் முனீப்
4.மொஹம்மட் சுபியான் மொஹம்மட் இர்ஷாத்
5.மொஹம்மட் அஸ்ஹர் அதீக் அஹமட்
6.நஜிமுதீன் மொஹம்மட் பெளசான்
7.ரஷீத் மொஹம்மட் இப்ராஹீம் அல்லது இப்ராஹீம் மெளலவி அல்லது இப்ராஹீம் சேர்
8.அபூ செய்த் எனும் மொஹம்மட் இப்ராஹீம் நெளபர் மெளலவி
9.அபூ நஜா எனப்படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மெளலவி
10.அபூ பலாஹ் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாஹித் அப்துல் ஹக்
11.அபூ உமர் எனபப்டும் மொஹம்மட் இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ்
12.அபூ ஹினா அல்லது சிவப்பு தாடி என அறியப்படும் மொஹம்மட் ஹனீபா சைனுல் ஆப்தீன்
13.ஹிஸ்புல்லாஹ் கான் ஹாமித்
14.அபூ சியா எனப்படும் ஹயாத்து மொஹம்மது அஹமது மில்ஹான்
15.ஹாஜா மொஹிதீன்
16. ஹனன் ஹம்சுதீன் எனும் ஹனன்
ஆகிய 16 பேருக்கு எதிராகவே இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையிலேயே வழக்கின் சாட்சி விசாரணைகளை முன்னெடுக்க முன்னர், கடந்த ஜூலை மாதம் குற்றப் பத்திரிகை திருத்தப்பட்டது. பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர், சிரேஷ்ட சட்டத்தரணிகளான ருஷ்தி ஹபீப், சம்பத் ஹேவா பத்திரன, கஸ்ஸாலி ஹுசைன் உள்ளிட்டோரின் வாதங்கள், சட்ட மா அதிபரின் இணக்கத்துடன் இக்குற்றப் பத்திரிகை திருத்தப்பட்டது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் 21 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், அது திருத்தப்பட்டு தண்டனை சட்டக் கோவையின் 209 மற்றும் 290 ஆம் அத்தியாயங்களின் கீழ் மட்டும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
இவ்வாறான நிலையிலேயே கடந்த ஆகஸ்ட் 2 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு வந்திருந்தது.
இதன்போது வழக்குத் தொடரப்பட்ட 16 பிரதிவாதிகளில் மூவரை வழக்கிலிருந்து விடுவித்த சப்ரகமுவ மாகாண மேல் நீதிமன்றின் (கேகாலை) மூவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு (ட்ரயல் அட்பார்) மேலும் 11 பேருக்கு 7 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 3 மாத கால சிறைத் தண்டனையை அளித்து தீர்ப்பளித்தது. குறித்த வழக்கில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுக்களை விலக்கிக்கொள்ள சட்ட மா அதிபர் இணங்கிய நிலையில், தண்டனை சட்டக் கோவையின் கீழ் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை, விரைவான விடுதலை கருதி 11 பிரதிவாதிகள் ஏற்றுக்கொண்ட நிலையிலேயே அவர்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் குற்றச்சாட்டுக்களை 8 ஆவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள அபூ செய்த் எனும் மொஹம்மட் இப்ராஹீம் நெளபர் மெளலவி, 9 ஆவது பிரதிவாதியான அபூ நஜா எனப்படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மெளலவி ஆகியோர் ஏற்றுக்கொள்ள மறுத்த நிலையில், அவ்விருவருக்கு எதிராக மட்டும் குறித்த வழக்கை முன்னெடுத்து செல்ல நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.- Vidivelli